dinamalar.com : லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை உறுதிபடுத்தும் வகையில், அகிலேஷ் நிருபர்களிடம், ‛ அனைத்தும் சுமூகமாக செல்கிறது. நிச்சயம் கூட்டணி அமையும் ' எனக்கூறியுள்ளார்.
தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட ‛இண்டியா ' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில்,
சில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
உ.பி.,யிலும் சிக்கல் உண்டானது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
ஆனால், தொகுதிகள் ஒதுக்கீட்டில் பிரச்னை எழுந்ததாக தகவல் வெளியானது. மேலும் காங்கிரஸ் 19 தொகுதிகள் கேட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. கூட்டணி உறுதி ஆகாமல் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இதனால், அங்கு கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் எழுந்தது.
சோனியா -பிரியங்கா தலையீடு
இதனிடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வர பிரியங்கா காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுலுடன் கலந்துரையாடிய பிரியங்கா , பிறகு தொலைபேசி வாயிலாக அகிலேஷ் யாதவுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சோனியாவும் உ.பி., மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேசிஉள்ளார். அப்போது, அவர்களின் கோரிக்கை காரணம் இல்லாதது, சாத்தியம் இல்லை எனவும் கூறியுள்ளார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
இரு கட்சிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மொராதாபாத் தொகுதியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. அதற்கு பதில், வாரணாசி தொகுதியை சமாஜ்வாதி திருப்பி அளிக்கிறது.
மேலும் சீதாபூர் மற்றும் ஹத்ராஸ் தொகுதிகளையும் மாற்றும்படி காங்கிரஸ் மேலிடத்தின் கோரிக்கையை சமாஜ்வாதி ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஷரவஸ்தி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவிட்டு அதற்கு பதில் புலந்த்ஷர் அல்லது மதுரா தொகுதியில் போட்டியிடும்படி காங்கிரஸ் கூறியது. இது பற்றி ஆலோசிப்பதாகவும், கூடுதல் நேரம் தேவைப்படும் என சமாஜ்வாதி கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என ஆங்கில மீடியாக்கள் தெரிவிக்கின்றன
அகிலேஷ் பேட்டி
இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ‛‛ அனைத்தும் நலம். சுமூகமாக முடியும். கூட்டணி அமையும். எந்த குழப்பமும் இல்லை. விரைவில் அனைத்தும் தெளிவாகி விடும்'' எனக் கூறினார்.
இதையடுத்து சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமாஜ்வாதியின் கட்சியின் ரவிதாஸ் கூறுகையில், லோக்சபா தேர்தலை காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தே சந்திக்கும். இதன் மூலம் கூட்டணி வலுப்பெறும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்போம். பா.ஜ.,விற்கு ஆதரவான ஓட்டுகள் பிரிவதை தடுக்க முயற்சி செய்வோம். சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி, அமேதி, ரேபரேலி, காஸியாப்பூர், உள்ளிட்ட 17 தொகுதிகளிலும், சந்திரசேகர் ஆசாத்தின் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக