திங்கள், 19 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு பட்ஜெட் : கல்லூரி மாணவர்களுக்கும் இனி 1,000 ரூபாய்!

 மின்னம்பலம் -christopher : தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 19) அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உயர்கல்வித்‌ துறைக்கு 8,212 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே உயர்கல்விச்‌ சேர்க்கை விகிதம்‌ அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. வரும்‌ நிதியாண்டில்‌, அரசு பொறியியல்‌, கலை அறிவியல்‌ மற்றும்‌ பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ கட்டடக்‌ கட்டமைப்புப்‌ பணிகள்‌ 200 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படும்‌.
மேலும்‌, ஒருங்கிணைந்த கற்றல்‌ மேலாண்மை அமைப்புடன்‌ பொறியியல்‌, பலவகை தொழில்நுட்பம்‌, கலை, அறிவியல்‌ கல்லூரிகள்‌ உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும்‌ இதர அறிவியல்‌ கருவிகள்‌ 173 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌.
அரசு பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளை (பாலிடெக்னிக்) தொழில்துறை 4.௦ தரத்திற்கு உயர்த்திட 3,014 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதிய திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.



கடந்த 2021 – 22 ஆம்‌ ஆண்டு பொறியியல்‌, வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்‌ உள்‌ ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும்‌ அந்த மாணவர்களுக்கான மொத்தக்‌ கல்விச்‌ செலவையும்‌ முழுமையாக அரசே ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, பல்வேறு தொழிற்படிப்புகளில்‌ தற்போது படித்து வரும்‌ 2,87,49௦ மாணவர்களின்‌ கல்விக்‌ கட்டணத்தையும்‌ அரசே ஏற்பதற்காக வரும்‌ நிதியாண்டில்‌ 511 கோடி ரூபாய்‌ செலவிடப்படும்‌.

கோவையில் கலைஞர் நூலகம்!

கோவை வாழ்‌ பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின்‌ அறிவுத்‌ தாகத்தை மேலும்‌ தூண்டும்‌ விதமாக ஒரு மாபெரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவியல்‌ மையம்‌, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ பெயரில்‌ அமைக்கப்படும்‌.

இதில்‌ உலகத்தரம்‌ வாய்ந்த நூல்கள்‌, பத்திரிகைகள்‌, இதழ்கள்‌ மற்றும்‌ இணைய வளங்களும்‌ இடம்பெறுவது மட்டுமன்றி விண்டுவளி, எந்திரவியல்‌, மெய்நிகர்‌ தோற்றம்‌ (Virtual Reality), இயற்கை அறிவியல்‌ என பல்வேறு அறிவியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ பிரிவுகளைச்‌ சார்ந்த கண்காட்சிகள்‌ ஏற்படுத்தப்படும்‌.

புத்தாக்கத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்குத்‌ திறன்‌ வழங்கிடும்‌ வகையில்‌ ஒரு ‘தொழில்‌ வளர்‌ காப்பகம்‌’ ஏற்படுத்தப்படும்‌. அறிவியலைக்‌ கொண்டாடும்‌ இப்புதிய மையம்‌ அறிவுசார்‌ தமிழ்ச்‌ சமூகத்தின்‌ அடையாளச்‌ சின்னமாகத்‌ திகழும்‌.

புதிய திறன்‌ பயிற்சிக்‌ கட்டமைப்புகள்‌ – ரூ. 200 கோடி!

நான்‌ முதல்வன்‌ திட்டத்தில்‌ இதுவரை சுமார்‌ 28 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயிற்சி பெற்றுள்ளனர்‌. 18 ஆயிரம்‌ பொறியியல்‌ கல்லூரி ஆசிரியர்களுக்கும்‌, 20,000 கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி ஆசிரியர்களுக்கும்‌ உரிய பயிற்சிகள்‌ வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில்‌ 1.19 இலட்சம்‌ மாணவர்கள்‌ வேலைவாய்ப்பினைப்‌ பெற்றுள்ளார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில்‌ பரவலாக கல்லூரிகளில்‌ திறன்‌ பயிற்சிக்‌ கட்டமைப்பை உருவாக்க இந்த ஆண்டு அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ 100 பொறியியல்‌ மற்றும்‌ கலை அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 200 கோடி ரூபாய்‌ மதிப்பிட்டில்‌ புதிய திறன்‌ பயிற்சிக்‌ கட்டமைப்புகள்‌ (skill labs) உருவாக்கப்படும்‌.

ஒன்றிய அரசு தேர்வு பயிற்சி – ரூ. 6 கோடி!

ஒன்றிய குடிமைப்பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட
1000 மாணவர்களுக்கு, அவர்கள்‌ முதல்நிலை தேர்வுக்குத்‌ தயாராக மாதந்தோறும்‌ 7,500 ரூபாய்‌ மற்றும்‌ முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம்‌ ரூபாய்‌ ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம்‌ 10 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ கடந்த ஆண்டு முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்‌ தொடர்ந்து, தற்போது ஒன்றிய பணியாளர்‌ தேர்வாணையம்‌, இரயில்வே மற்றும்‌ வங்கிப்‌ பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ அதிகம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில்‌ உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப்‌ பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய்‌ இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.

தமிழ்நாட்டு மாணவர்களின்‌ கல்லூரிக்‌ கனவை நனவாக்கிடவும்‌, அவர்தம்‌ பெற்றோரின்‌ நிதிச்சுமையைப்‌ பகிர்ந்து கொள்ளும்‌ வகையிலும்‌, தேவையின்‌ அடிப்படையில்‌ 2024 – 25ஆம்‌ ஆண்டில்‌ ஒரு இலட்சம்‌ கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய்‌ அளவிற்கு, பல்வேறு வங்கிகள்‌ மூலம்‌ கல்விக்கடன்‌ வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்‌.

அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ தங்களது பட்ட மேற்படிப்பு மற்றும்‌ ஆராய்ச்சிப்‌  படிப்புகளை வெளிநாடுகளில்‌ உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில்‌ பயின்றிட உதவித்தொகை அளித்து உதவும்‌ வகையில்‌, ஒரு புதிய திட்டம்‌ வரும்‌ ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்‌.

’தமிழ்ப் புதல்வன்‌’ திட்டம் – ரூ. 360 கோடி!

அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும்‌ நோக்கத்துடன்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌ பெண்களின்‌ உயர்கல்வியில்‌ பெரும்‌ முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும்‌ அரசுப்‌ பள்ளி மாணவரின்‌ உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும்‌ ‘தமிழ்ப் புதல்வன்‌’ எனும்‌ ஒரு மாபெரும்‌ திட்டம்‌ வரும்‌
நிதியாண்டில்‌ இருந்து அறிமுகப்படுத்தப்படும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌, 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று உயர்கல்வி சேரும்‌ மாணவர்கள்‌ பாடப்‌ புத்தகங்கள்‌, பொது அறிவு நூல்கள்‌ மற்றும்‌ இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும்‌ வகையில்‌, மாதந்தோறும்‌ 1000 ரூபாய்‌ அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நோடியாகச்‌ செலுத்தப்படும்‌. உயரிய நோக்கம்‌ கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும்‌ நிதியாண்டில்‌ 360 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: