வியாழன், 18 ஜனவரி, 2024

ஊழல் குற்றச்சாட்டு – சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா!

தேசம் நெட்  : சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.
Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 bbc.com : சிங்கப்பூரின் தமிழ் வம்சாவளி அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு – முழு பின்னணி என்ன? -
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் தமிழ் வம்சாவளி அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மிக அரிதான, அசாதாரணமான இந்த வழக்கு அந்த நாட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஈஸ்வரன் மீது மொத்தம் 27 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
கார் பந்தயமான ‘ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரி’ (F1) சிங்கப்பூரில் பிரமாண்டமாக அறிமுகமானபோது, சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையை நிர்வகித்ததற்காக அறியப்பட்டவர் ஈஸ்வரன்.

ஈவரன் தனது பதவியை வியாழக்கிழமை (ஜனவரி 18) ராஜினாமா செய்தார்.

எனினும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் சிங்கப்பூர் ஊடகங்களில் எங்கும் பரவி வருகின்றன.

கட்டிடத் தொழிலதிபரான ஓங் பெங் செங்கின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக ஈஸ்வரன் இலவச விமானங்கள், ஹோட்டலில் இலவச அறைகள், மற்றும் கிராண்ட் ப்ரி கார் பந்தயத்திற்கான இலவச டிக்கெட்டுகளைப் பெற்றதாக இவர்மீதான குற்றப்பத்திரிகைகள் கூறுகின்றன.

இதற்கெல்லாம் செலவான தொகை 1 லட்சத்து 60 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள். இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் (99 லட்ச ரூபாய்).
சிங்கப்பூர், சுப்பிரமணியம் ஈஸ்வரன், ஊழல்

பட மூலாதாரம், Getty Images

அமைச்சர் எஸ் ஈஸ்வரன் என்ன சொல்கிறார்?

லண்டனின் புகழ்பெற்ற வெஸ்ட் எண்ட் மியூசிகல் நாடகங்களுக்கும், அது தவிர கால்பந்து போட்டிகளுக்கும் அவர் டிக்கெட்களைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓங் பெங்குடன் சுப்பிரமணியம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மே 2008 இல் சிங்கப்பூரில் F1 பந்தயத்தை அறிமுகப்படுத்தியதில் ஓங் பெங் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது. ஈஸ்வரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஓங்கின் பெயர் உள்ளது. ஓங் பல வழக்குகளில் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

"நான் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன், நான் நிரபராதி" என்று ஈஸ்வரன் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.

ராஜினாமா செய்வதோடு, கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை தான் பெற்ற சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளையும் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பிறகு, ஈஸ்வரன் விடுப்பில் அனுப்பப்பட்டார், ஆனால் அவர் ஒவ்வொரு மாதமும் 8,500 சிங்கப்பூர் டாலர் (5.25 லட்சம் இந்திய ரூபாய்) சம்பளமாகப் பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு மாதந்தோறும் 15,000 சிங்கப்பூர் டாலர்கள் (9.3 லட்சம் இந்திய ரூபாய்) உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இங்கு அமைச்சர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 45,000 சிங்கப்பூர் டாலர்கள் கிடைக்கும் (9.2 லட்சம் இந்திய ரூபாய்).

இந்த உயர் சம்பளம் ஊழலுக்கு எதிராக போராட உதவும் என்று கூறி சிங்கப்பூர் அரசியல்வாதிகள் கூறிவந்தனர்.

சிங்கப்பூரில் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியின் (பி.ஏ.பி) மூத்த தலைவரான ஈஸ்வரன் பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர் பதவியை வகித்துள்ளார்.

ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், தகவல் தொடர்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.
சிங்கப்பூர், சுப்பிரமணியம் ஈஸ்வரன், ஊழல்

பட மூலாதாரம், Getty Images

ஈஸ்வரனின் அரசியல் வளர்ச்சி

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய காலத்தில் தான் அவர் பரவலாக அறியப்பட்டார். 2000-களிலும் 2010-களிலும் சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் முகத்தை மாற்றியதில் அவர் பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.

சூதாட்ட விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் கட்டுவதற்கு அரசாங்கம் பெரும் வளங்களை வாரி இறைத்து. F1 பந்தயங்கள் போன்ற நிகழ்வுகள் மற்றும் பல நூறு கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் வந்த காலம் இது.

ஏஸ்வரன் சிங்கப்பூரில் நடந்த பல நிகழ்ச்சிகளின் மேடைகளில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்தார்.

பி.ஏ.பி கட்சியை உலுக்கிய அரசியல் ஊழல்களில் ஈஸ்வரன் மீதான வழக்கும் ஒன்று. ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நீண்ட காலமாக பெருமையாகக் கூறி வரும் கட்சி இது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஈஸ்வரனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும், தனது அரசாங்கம் இந்த விஷயத்தை ‘கடுமையாக’ கையாண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், " கட்சி மற்றும் அரசாங்கத்தின் நேர்மையை நிலைநிறுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். சிங்கப்பூர் மக்கள் அதை எதிர்பார்க்கலாம்," என்றார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 61 வயதான ஈஸ்வரன் 2006-இல் பிரதமர் லீ சியென் லூங்கின் அமைச்சரவையில் இளைய அமைச்சராக இணைந்தார். படிப்படியாக உடர்ந்து மே 2021-இல் சுற்றுலா அமைச்சரானார்.
சிங்கப்பூர், சுப்பிரமணியம் ஈஸ்வரன், ஊழல்

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி

சிங்கப்பூர் அரசு ஊழலற்ற நிர்வாகம் நடத்துகிறது என்று பெயர்பெற்றிருக்கிறது. தற்போது, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் தொடர்பான 180 நாடுகளின் வருடாந்திர பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவது சிங்கப்பூரில் மிக அரிதான விஷயம்.

இதற்குமுன் சிங்கப்பூர் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டது கடைசியாக 1986ஆம் ஆண்டு நடந்தது.

அப்போது, தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் டெஹ் சியாங் வான் மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடந்தது. எனினும், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

சி.என்.என் அறிக்கையின்படி , சிங்கப்பூரின் ஊழல் தடுப்பு நிறுவனமான 'ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.பி), பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும், ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை வழிநடத்துகிறது.

அதே அறிக்கையில், ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நேரம் பிரதமர் லீயின் பார்வையில் முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர் இப்போது பிரதமர் பதவியை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 2025-இல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த பி.ஏ.பி நிகழ்வில் ஈஸ்வரனின் விசாரணை பற்றி பேசிய லீ, "அரை நூற்றாண்டு ஆட்சிக்கு பிறகும், பி.ஏ.பி.யின் தரநிலைகள் இன்னும் அப்படியே உள்ளன என்பதை சிங்கப்பூர் மக்களுக்கும் உலகிற்கும் கட்சி காட்ட வேண்டும்," என்று கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைபடி, ஈஸ்வரனுக்கு எதிரான 27 குற்றச்சாட்டுகளில் ஊழல் மற்றும் சட்டப்பூர்வ விசாரணைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டும் அடங்கும்.

ராய்ட்டர்ஸ் இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் ஓங்கின் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டது, ஆனால் அவர்களுக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஈஸ்வரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் (62 லட்ச இந்திய ரூபாய்) வரை அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

 

கருத்துகள் இல்லை: