வீரகேசரி - சுபத்ரா : இலங்கைக் கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்பும், அரசாங்கத்தின் முடிவு, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. அதற்கு வெளியேயும், இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
ஆனால் அரசாங்கமோ தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
கடந்த 3ஆம் திகதி கொழும்பில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஹெளதி படைகளின் தாக்குதல்களில் இருந்து வணிக கப்பல்களைப் பாதுகாப்பதற்காக, செங்கடலுக்கு கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
காஸா மோதல்கள் வெடித்த பின்னர், மத்திய கிழக்கு மாத்திரமன்றி, செங்கடல் பிராந்தியமும் அமைதியை இழந்துள்ளது.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, யேமனில் உள்ள ஹெளதி படையினரும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
செங்கடல் வழியாகச் செல்லும், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஹெளதி படையினர் எச்சரித்தனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹெளதி படையினரிடம் அதிநவீன ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் இருப்பது, செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
சுயெஸ் கால்வாய் வழியாக பயணம் செய்யும் கப்பல்கள், செங்கடல் வழியாக செல்ல வேண்டியது தவிர்க்க முடியாதது.
செங்கடலையும், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக் கடலையும் இணைக்கின்ற 20 கடல் மைல் மட்டுமே அகலம் கொண்ட பாப் அல் மன்டாப் நீரிணையைக் கடந்து செல்ல வேண்டும்.
இந்த நீரிணை ஒரு பக்கம் ஜிபுட்டி மற்றும் எரித்ரியாவையும், மறுபக்கம் யேமனையும் தரை எல்லைகளாக கொண்டிருக்கிறது.
ஜிபுட்டியில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் கடற்படைத் தளங்கள் இருந்தாலும், ஹெளதி படைகளின் கட்டுப்பாட்டில் யேமன் இருப்பதால், இந்த வழியான கப்பல் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இதனால், செங்கடல் வழியாக பயணித்த வணிக கப்பல்கள், தாக்குதல் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் அல்லது மாற்று வழியான தென் ஆபிரிக்காவைச் சுற்றி- நன்னம்பிக்கை முனை வழியாக செல்ல வேண்டும்.
பல கப்பல் நிறுவனங்கள் இந்த மாற்றுப் பாதையை தெரிவு செய்திருக்கின்றன. இதனால், கிட்டத்தட்ட 3500 கடல் மைல்கள், கூடுதல் தூரம் பயணிக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் அதிகமாகத் தேவைப்படும்.
இவ்வாறான நிலையில், சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. செங்கடலில் ஆபத்தை எதிர்கொள்வதானாலும் சரி, ஆபத்தில் இருந்து தப்பிக்க மாற்றுப் பாதையை தெரிவு செய்வதாலும் சரி, பொருளாதார இழப்புக்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
ஹெளதி படையினரின் தாக்குதலுக்கு உள்ளானால், ஏற்படக் கூடிய இழப்புகள் ஒருபுறத்தில் இருக்க, தாக்குதலில் இருந்து தப்பிப் பயணித்தால் கூட, இழப்பு இருக்கிறது.
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள், அதிகளவு காப்புறுதிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் கப்பல் கட்டணங்கள் அதிகரிக்கும்.
போர்க்காலத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், இவ்வாறான அதிகளவு காப்புறுதிக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டது நினைவிருக்கலாம்.
அதேபோல, மாற்றுப் பாதையில் தென் ஆபிரிக்காவைச் சுற்றி, அதாவது 3,500 கடல் மைல்கள் கூடுதல் தூரத்துக்குப் பயணம் செய்யும் கப்பல்களுக்கும் கட்டணம் அதிகரிக்கும்.
ஆக, செங்கடல் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தப்படும் வரை, கப்பல் கட்டணங்களை குறைக்க முடியாது.
கப்பல் கட்டணங்களின் அதிகரிப்பு, சர்வதேச அளவில் பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்வதுடன், நாடுகளின் பொருளாதாரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு தான், செங்கடலுக்கு கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டதல்ல. இதற்குப் பின்னால் அமெரிக்காவே இருக்கிறது.
செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான ஒரு கடல்சார் கூட்டுப் படை இயங்குகிறது. அது செங்கடல் வழியாக பயணம் செய்யும் வணிக கப்பல்களை ஹெளதி படையினரிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹெளதி படையினரின் ஏவுகணை மற்றும், ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களை தடுக்கின்ற வசதிகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.
ஆனால், ஹெளதி படையினர் அவ்வப்போது சிறிய படகுகளில் சென்று வணிக கப்பல்களை தாக்குகின்றனர். கைப்பற்றுகின்றனர்.
அதனை தடுப்பதற்கு வெறுமனே தொழில்நுட்ப வசதிகள் மாத்திரம் போதாது, கடற்படைக் கப்பல்களும், படையினரும் அவசியம்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா வேறு நாடுகளின் கடற்படைகளையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அவ்வாறு தான் இலங்கையிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் வேறு வழியின்றி செங்கடலுக்கு கப்பலை அனுப்ப இணங்கியிருக்கிறது.
ஒரு கப்பலை செங்கடலுக்கு அனுப்பினால், இரண்டு வாரங்களுக்கு 250 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கூறியிருந்தார்.
ஆனாலும் சர்வதேச கடல் வழிப் பாதையை பாதுகாப்பதற்கு இது அவசியமானது என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு 250 மில்லியன் ரூபாவை செலவிட்டு, செங்கடலுக்கு கடற்படைக் கப்பலை அனுப்புவதால் என்ன பயன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இலங்கை அணிசேரா நாடா அல்லது அமெரிக்க கூட்டணி நாடா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
செங்கடலுக்கு கடற்படையை அனுப்பும் முடிவு அரசாங்கத்துக்கு சர்வதேச அளவில் சில பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.
பலஸ்தீன –-இஸ்ரேல் போரில், இஸ்ரேலுக்கு சாதகமான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.இந்த சந்தேகம், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்திருக்கிறது.
இதனால் கடந்த வியாழக்கிழமை மத்திய கிழக்கில் உள்ள 10 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதன்போது இஸ்ரேல் –- பலஸ்தீன பிரச்சினையில், இரு தேசக் கொள்கை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அதேவேளை, சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு பொறுப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
செங்கடலில் வணிக கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது.
ஆனால், செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு தோன்றியுள்ள அச்சுறுத்தல் இலங்கைக்கு சில சாதகமான விளைவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.
அதில் ஒன்று, கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கப்பல்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகின்ற கொள்கலன்களின் எண்ணிக்கை சடுதியாக 80 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது.
கொழும்பு துறைமுகத்தில் 30 சதவீத கொள்கலன்களை கையாளும், ஜயா மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் ஆகியவற்றின் ஊடாக முன்னர், நாளொன்றுக்கு 5,000 தொடக்கம் 6,000 வரையான கொள்கலன்கள் கையாளப்பட்டதாகவும் தற்போது, அந்த எண்ணிக்கை, 8,000 தொடக்கம் 9,000 வரை அதிகரித்துள்ளதாகவும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கீத் பேனாட் தெரிவித்துள்ளார்.இதனால் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
எனவே செங்கடலில் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் இலங்கைக்கு முற்றிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கூற முடியாது.
செங்கடலுக்கு கடற்படைக் கப்பலை அனுப்பும் முடிவைக் கூட அரசாங்கம் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் தான் எடுக்கிறது.
செங்கடலுக்கு 100 வரையான படையினருடன் கப்பலை அனுப்பத் தயாராக இருப்பதாகவும், அரசாங்கத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், கடற்படைப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.
ஆனால், கடற்படையின் எந்தக் கப்பல் செங்கடலுக்கு அனுப்பப்படவுள்ளது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
இலங்கை கடற்படையிடம் ஆழ்கடலில் பயன்படுத்தக் கூடிய குறைந்தது, 8 போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
அவற்றில், சீனா வழங்கிய பராக்கிரமபாகு போர்க்கப்பலையோ, இந்தியா வழங்கிய சயுரால, சிந்துரால, சாகர மற்றும் சயுர போன்ற ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களையோ, இந்தப் பணிக்கு அனுப்ப முடியாது.
இலங்கையின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்தக் கப்பல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அந்த விதி முறையை மீறி பிற நாட்டுக்கு கப்பல்களை அனுப்புவதில் சிக்கல்கள் எழும்.
இதனால், அமெரிக்கா வழங்கிய சமுத்ர, கஜபாகு, விஜயபாகு ஆகிய போர்க்கப்பல்களில் ஒன்றையே செங்கடலுக்கு அனுப்ப வேண்டும். சமுத்ர 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பழைய போர்க்கப்பல். நவீன வசதிகள் இல்லை.
இதனால் விஜயபாகு அல்லது கஜபாகு ஆகிய போர்க்கப்பல்களில் ஒன்றையே செங்கடலுக்கு அனுப்ப கடற்படை தயாராக உள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அனுப்பப்படுவதால், இந்தக் கப்பல்களை செங்கடலுக்கு அனுப்புவதற்கு தடைகள் இருக்காது.
ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஹெளதி படையினரிடம் நவீன ஏவுகணைகள், உள்ளன. அவற்றை இடைமறித்து தாக்குவதற்கான நவீன ஏவுகணை கட்டமைப்புகள், இலங்கை கடற்படைக் கப்பல்களில் இல்லை.
இதனால், இலங்கை கடற்படைக் கப்பலை செங்கடலில், ஹெளதி படையினரின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் நிறுத்த முடியாது.
அதற்கு வெளியே, ஏடன் வளைகுடா பகுதியிலேயே அதனை நிறுத்த முடியும்.
இந்தப் பகுதியில் இந்தியா ஏற்கனவே ஆறு போர்க்கப்பல்களை நிறுத்தியிருக்கிறது.
ஆனாலும் அந்தக் கப்பல்கள் அமெரிக்க கூட்டணியுடன் இணைந்து செயற்படவில்லை.
எனினும் இலங்கை கடற்படை அவ்வாறு தனித்துச் செயற்பட முடியாது. அது பஹ்ரெய்னில் உள்ள அமெரிக்க கூட்டுப் படையணியுடனேயே இணைந்து செயற்பட முடியும்.இது இலங்கை கடற்படைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அமெரிக்க கூட்டணியில் இடம்பெறும் அனைத்து நாடுகளும் தங்களது எதிரி தான் என்றும், அவற்றின் கப்பல்களை தாக்குவோம் என்றும், ஹெளதி படையின் பேச்சாளர் சில நாட்களுக்கு முன்னர் பிபிசிக்கு கூறியிருந்தார்.
அந்த நிலையில் இருந்து பார்த்தால், ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டது போல, இலங்கை கடற்படைக்கு இது ஒரு தற்கொலை நடவடிக்கையாகத் தான் இருக்கப் போகிறது.
சுபத்ரா (Virakesari)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக