மின்னம்பலம் - Selvam : தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஐஸ்வர்யா ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் இன்று (ஜனவரி 13) கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன் (வயது 19). நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (வயது 19).
இருவரும் பள்ளி படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஐஸ்வர்யா மற்றும் நவீன் ஆகிய இருவரும் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் தங்களது பெண்ணைக் காணவில்லை என்று பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். பின்னர் போலீஸ் தரப்பில் பேசி ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஐஸ்வர்யா தனது வீட்டின் அருகே இருந்த புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் அவரது உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் எரித்து அடக்கம் செய்துள்ளனர்.
ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக வாட்டாத்தி காவல் நிலையத்தில் நவீன் புகாரளித்தார். நவீன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவல்துறை விசாரணையில் ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா, உறவினர்கள் பாசமலர், விளம்பரசி, இந்து ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில், ஐஸ்வர்யாவின் உறவினர்கள் ரங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகியோரை காவல்துறையினர் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக