திங்கள், 15 ஜனவரி, 2024

அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம்

BBC Tamil :  அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம் பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக அமைந்துள்ளது.
கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொதுவெளிகள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளமான மண்ணை உருவாக்கிய எரிமலை, இந்தச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம்.


பெருவில் உள்ள மச்சு பிச்சு போன்ற தென் அமெரிக்காவின் மலைப் பகுதிகளில் உள்ள நகரங்களைப் பற்றி நாம் அறிந்துள்ள நிலையில், ​​​​அமேசானில் மக்கள் நாடோடிகளாக அல்லது சிறிய குடியிருப்புகளில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் நம்பப்பட்டது.

“அமேசானில் எங்களுக்குத் தெரிந்த மற்ற தளங்களைவிட இது பழமையானது. ஐரோப்பியர்களை மையப்படுத்தியே நாகரிகம் பற்றிய பார்வை உள்ளது. ஆனால், கலாசாரம் மற்றும் நாகரிகம் பற்றிய நமது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இது காட்டுகிறது,” என்கிறார், பிரான்சில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இயக்குநரும் ஆராய்ச்சியை வழிநடத்தியவருமான பேராசிரியர் ஸ்டீஃபன் ரோஸ்டைன்.

2,500 ஆண்டுகள் பழமையானது

“இது அமேசானிய கலாசாரங்களை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய குழுக்களாக, அநேகமாக நிர்வாணமாக, குடிசைகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இது பழங்கால மக்கள் சிக்கலான நகர்ப்புற சமூகங்களாக வாழ்ந்ததைக் காட்டுகிறது,” என்கிறார், இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியர் அன்டோயின் டோரிசன்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நகரம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. மேலும், இங்கு மக்கள் சுமார் 1,000 ஆண்டுகள் வரை வாழ்ந்தனர்.

இங்கு எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவது கடினம். ஆனால், விஞ்ஞானிகள் அது நிச்சயமாக லட்சங்களில் இல்லாவிட்டாலும் 10 ஆயிரங்களில் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அகழ்வாராய்ச்சியாளர்கள் 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பரப்பளவில் அகழ்வாராய்ச்சி மற்றும் விமானத்தின் மூலம் லேசர் சென்சார் எடுத்துச் செல்லப்பட்டு அடர்ந்த செடிகள் மற்றும் மரங்களுக்கு அடியில் இந்த நகரின் எச்சங்களை அடையாளம் கண்டனர்.

இந்த LiDAR தொழில்நுட்பத்தின் மூலம் 20மீ (66 அடி) x 10மீ (33 அடி) மற்றும் 2-3மீ உயரம் கொண்ட 6,000 செவ்வக தளங்கள் கண்டறியப்பட்டன.

மூன்று முதல் ஆறு அலகுகள் கொண்ட குழுக்களாக ஒரு மைய மேடையுடன் கூடிய பொதுவெளியைச் சுற்றி அவை அமைந்திருந்தன.

இந்தத் தளங்களில் பல வீடுகள் இருந்திருக்கலாம் எனக் கூறும் விஞ்ஞானிகள், சில சடங்கு நோக்கங்களுக்காக இருந்திருக்கலாம் என்கின்றனர். கிழமோப்பேவில் உள்ள ஒரு வளாகம் 140மீ (459 அடி) x 40 மீ (131 அடி) மேடையை உள்ளடக்கியிருந்தது. குன்றுகளை வெட்டி அதன் மேல் மேடை உருவாக்கப்பட்டன.

ஈர்க்கக்கூடிய சாலைகள்
ரேடார் சென்சார்களால் கண்டறியப்பட்ட குடியிருப்புகளின் பரவல்
நேரான சாலைகள் மற்றும் பாதைகளின் வலையமைப்பு, 25 கி.மீ. (16 மைல்கள்) வரை நீட்டிக்கப்பட்ட தளம் உட்பட பல தளங்களை இணைக்கிறது. இந்த சாலைகள் ஆராய்ச்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்று டாக்டர் டோரிசன் கூறினார்.

“சாலை வலையமைப்பு மிகவும் அதிநவீனமானது. இது ஒரு பரந்த தூரத்திற்கு நீண்டுள்ளது. அனைத்து சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சரியான கோணங்களில் அமைந்த இந்த சாலைகள் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளன,” என்று அவர் கூறுகிறார். நிலப்பரப்புடன் பொருந்தக்கூடிய ஒன்றைவிட நேரான சாலையை உருவாக்குவது மிகவும் கடினம் என்று அவர் விளக்குகிறார்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்டவற்றில் சில “மிக வலுவான அர்த்தம்” கொண்டிருப்பதாக நம்பும் அவர், அவை ஒருவேளை ஏதேனும் சடங்கு அல்லது நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

விஞ்ஞானிகள் இருபுறமும் பள்ளங்கள் கொண்ட தரைப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளனர். அவை இப்பகுதியில் ஏராளமான தண்ணீரை நிர்வகிக்க உதவும் கால்வாய்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நகரங்களுக்கு அச்சுறுத்தல்களின் அறிகுறிகள் தென்பட்டன. சில பள்ளங்கள் குடியேற்றங்களுக்குள் நுழைவு வாயில்களைத் தடுத்தன. அவை, அருகிலுள்ள மக்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களுக்கான ஆதாரமாக இருக்கலாம்.

‘சிக்கலான சமூகம்’
ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 1970களில் ஒரு நகரத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்தனர். ஆனால், 25 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை.

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள நன்கு அறியப்பட்ட மாயன் சமூகங்களைவிட பெரிய, சிக்கலான சமூகத்தை இந்நகரம் வெளிப்படுத்துகிறது.

“முற்றிலும் மாறுபட்ட கட்டடக் கலை, நில பயன்பாடு, மட்பாண்டங்களுடன் மாயன் நாகரிகம் போன்ற மற்றொரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்,” என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியர் ஜோஸ் இரியார்டே கூறுகிறார்.

சில கண்டுபிடிப்புகள் தென் அமெரிக்காவுக்கு “தனித்துவம் வாய்ந்தவை” என்று அவர் விளக்குகிறார். எண்கோண மற்றும் செவ்வக தளங்கள் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சமூகங்கள் தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்டவை, அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு அவர் குடியேற்றங்களுக்கு இடையிலான நீண்ட பள்ளமான சாலைகளை எடுத்துக்காட்டுகிறார். ஆனால், அங்கு வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சமூகம் எப்படி இருந்தது என்பது பற்றிப் பெரிதாகத் தெரியவரவில்லை.

மக்கள் என்ன சாப்பிட்டனர்?

நடைமேடைகளை இணைக்கும் சாலைகள், பாதைகள் மற்றும் கால்வாய்கள் அமேசானின் ஒரு பெரிய பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

மேடைகளில் குழிகளும் அடுப்புகளும் காணப்பட்டன. அத்துடன் ஜாடிகள், செடிகளை அரைக்க கற்கள் மற்றும் எரிந்த விதைகள் காணப்பட்டன.

அங்கு வாழும் கிலாமோபே மற்றும் உபனோ மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். மக்கள் மக்காச்சோளம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கை சாப்பிட்டனர். மேலும் “சிச்சா” என்ற இனிப்பு பீர் வகையை குடித்திருக்கலாம்.

ஆரம்பத்தில் இந்த ஆராய்ச்சிக்கு எதிராக தான் எச்சரிக்கப்பட்டதாகக் கூறும் பேராசிரியர் ரோஸ்டைன், அமேசானில் எந்த பழங்கால குழுக்களும் வசிக்கவில்லை என விஞ்ஞானிகள் நம்பியதாகத் தெரிவித்தார்.

“ஆனால் நான் எப்படியாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தேன். இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நான் இப்போது ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

இப்பகுதிக்கு அருகிலுள்ள, ஆய்வு செய்யப்படாத 300 சதுர கி.மீ. (116 சதுர மைல்) பகுதியில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஆராய்ச்சியாளர்களின் அடுத்தகட்டமாக உள்ளது.
பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை: