திங்கள், 25 டிசம்பர், 2023

மீண்டும் வாக்குச்சீட்டு! ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் விசிக!

மின்னம்பலம் - Monisha :  தேர்தலில் மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
VCK announced protest
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து சதிகார போக்கோடு செயல்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர்.

அப்படித்தான் இந்த கூட்டத்தொடரிலும் இந்த அமர்வில் முக்கிய மூன்று குற்றவியல் சட்டத்தையும், சட்டங்களுக்கான மசோதாவையும் நிறைவேற்றிட முடிவு செய்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றி எதிர்ப்பு இல்லாமலேயே அவற்றை நிறைவேற்றியுள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

வருகிற 29 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஏவிஎம் இயந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

வெல்லும் ஜனநாயக மாநாடு சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பைக் கணக்கில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா

கருத்துகள் இல்லை: