புதன், 27 டிசம்பர், 2023

சத்தீஸ்கர் காங்கிரசுக்கு உலை வைத்த Mahadev Betting App. துபாயில் அதிரடி கைது.. சிக்கிய உரிமையாளர்.. பின்னணி

Mahadev Betting App another owner cum promoter Sourabh Chandrakar secured in Dubai after Ravi Uppal

 tamil.oneindia.com -Nantha Kumar R : துபாய்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி தொடர்பாக அதன் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார்.
வடஇந்திய மாநிலங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் மோசடி என்றால் அது மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியாகும். இந்த மோசடியில் பல அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய காரணம் யார் என்றால் 2 பேர்.
Mahadev Betting App another owner cum promoter Sourabh Chandrakar secured in Dubai after Ravi Uppal


அதாவது சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவரது நண்பர் ரவி உப்பால். இவர்கள் 2 பேரும் துபாய் சென்ற நிலையில் போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கான சூதாட்ட செயலியை உருவாக்கினர். இந்த செயலியின் பெயர் தான் மகாதேவ்.

இந்த மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களான சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செயலியை புரோமோஷன் செய்வதற்கான அரசியல் கட்சி தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஹவாலா பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சிக்கிய திமிங்கலம்.. சத்தீஸ்கரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணமான மாகாதேவ் செயலி ஓனர் துபாயில் கைது

அதோடு இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் துபாயில் தலைமைறைவாக இருந்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் அமலாக்கத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் துபாய் அதிகாரிகளுடன் அமலாக்கத்துறையின் தொடர்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தான் சில கடந்த 12ம் தேதி ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சவுரப் சந்திரகர் துபாயில் சிக்கி உள்ளார். இதையடுத்து சவுரப் சந்திரகர் அங்கு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சவுரப் சந்திரகரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்துறை சார்பில் விரைவில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்ததற்கு இந்த செயலி தொடர்பான குற்றச்சாட்டு முக்கியமானதாகும். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை சத்தீஸ்கரில் இருந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவருக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையாக மாறி பின்னடைவை வழங்கியது. இதையடுத்து அந்த சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இப்படி ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்த மகாதேவ் சூதாட்ட செயலியின் 2 உரிமையாளர்களும் தற்போது துபாயில் சிக்கி உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை என்பது பாயலாம். இதனால் இந்த மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம் வரும் நாட்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: