திங்கள், 25 டிசம்பர், 2023

மசினன்குடி மக்களின் அவலம் . எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கிறார்கள்!

vikatan.com -  எம்.குமரேசன் : மலைகள், அருவிகள், கொஞ்சம் ஆபத்து... மனதை மயக்கும் மசினகுடி!
கோடை காலம் நெருங்குகிறது. மக்கள் குளிர்பிரதேசங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்குவார்கள். ஊட்டி செல்பவர்கள் பூங்காக்களையும், தேயிலைத் தோட்டங்களையும், சிகரங்களையும் பார்த்துவிட்டு, கொஞ்சம் குளிரையும் அனுபவித்து விட்டு ஊர் திரும்பி விடுகிறார்கள். இந்த இடங்கள் மட்டும்தான் நீலகிரியா? நீலகிரியில் பார்க்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கிறது. அப்படி ஒரு ஊர்தான் மசினகுடி.  
மனதை மயக்கும் ஒரு ஊர். இந்த ஊருக்குச் செல்லும் சாலையே நம்மை மிரள வைக்கும். உதகையில் இருந்து சரியாக ஏழாவது கிலோ மீட்டரில் தலைக்குந்தா என்ற இடம் வரும். இங்கிருந்து கல்லட்டிக்கு சாலை பிரிந்து செல்கிறது. இதனை கல்லட்டி பாதை என்பார்கள். சிறிய ரக பேருந்துகளில் மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும். பெரிய பேருந்துகளால் ஏற முடியாது. சாலை அவ்வளவு செங்குத்தாக இருக்கும். 

 முதலில் கல்லட்டி மலைப் பாதையை பற்றி சொல்லி விடுகிறேன். மிகவும் அபாயகரமான 36 ஊசி வளைவுகளை கொண்ட பாதை. அதனால் முதல் அல்லது 2-வது கியரில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். முடிந்த வரை பிரேக் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். அடிக்கடி, பிரேக்கை பயன்படுத்துவதால், பிரேக் ட்ரம்ப் சூடாகி முக்கியக் கட்டத்தில் பிரேக் ஃபெயிலராகி விட வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு அபாயகரமான திருப்பம் இதே சாலையில் இருக்கவும் செய்கிறது. அது பற்றி பின்னால் சொல்கிறேன்.

சாலையில் முதலில் கல்லட்டி செக் போஸ்ட் வரும். இங்கு ஒரு அருவி இருக்கிறது. கல்லட்டி அருவி என்பது பெயர். குளிப்பதற்கு ஏற்றது அல்ல. கல்லட்டி மட்டுமல்ல நீலகிரியை பொறுத்தவரை எந்த அருவியும் குளிப்பதற்கு ஏற்றது அல்ல. மனதை மயக்கும். மயக்கி இழுக்கும். மயங்கி விடாமல் இருந்தால் உடலுக்கு சேதாரம் இல்லை. அருவிகளை ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இரவு ஏழு மணிக்கு மேல் இந்த பாதையில் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆறுமணிக்குள் வனத்துறை செக் போஸ்ட்டை கடந்து விட வேண்டும். இரவு நேரத்தில் இந்த பாதையில் செல்பவர்கள் அதிக கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும். சாலையில் யானைகள் நின்றால், பயந்து விட வேண்டாம். ஹெட்லைட்டை அணைத்து விட்டு டிம் விளக்கை மட்டும் போட்டுவிட்டு, அமைதியாக வாகனத்துக்குள் அமர்ந்து கொள்ளுங்கள். ஒலி எழுப்ப வேண்டாம். அவற்றை விரட்டவும் முயற்சிக்க வேண்டாம்.

யானைகளின் அருகில் வாகனத்தைச் செலுத்தி இடையூறு ஏற்படுத்ததாதீர்கள். யானையின் கவனம் உங்கள் மீது திரும்பாதவரை, உங்களுக்குப் பிரச்னை இல்லை. சிறிது நேரத்தில் அவைகள் சாலையைவிட்டு  விலகிப் போய் விடும். இந்த பாதையில் புதியதாக வரும் டிரைவர்கள், யானை வாகனத்தை நோக்கி வந்தால் பதற்றத்தில் கியரை கண்டபடி போட்டு வண்டியை ஆஃப் செய்து விடுவார்கள். யானைகள் உங்கள் வாகனத்தை நோக்கி வந்தாலும் பதறாமல் இருங்கள். இறங்கி ஓட முயற்சிக்க வேண்டாம். வாகனத்தினுள் இருக்கும் வரைதான் உங்களுக்கு பாதுகாப்பு. இந்த பாதையில் கிட்டத்தட்ட 20  ஊசி வளைவுகளை கடந்த பிறகு, சமதளத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு வரும்.  உண்மையிலேயே அது சமதளம் கிடையாது. அதள பாதாளமான பகுதிதான். பார்வைக்குத் தெரியாது. புதியதாக வரும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்தின் அபாயம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. சமதளத்தை பார்த்தவுடன் 4-வது கியருக்குத் தட்டுவார்கள். வாகனம் வேகம் பிடிக்கும். சட்டென்று வலப்புறத்தில் ஒரு திருப்பம் வரும். அந்த திருப்பமும் கண்ணுக்குத் தெரியாது.

திடீரென்று திருப்பம் தெரிய வர பிரேக் போட முயல்வார்கள். ஏற்கெனவே திருப்பங்களில் கியரில் வராமல் தொடர்ந்து பிரேக் பிடித்து பிடித்து வந்திருப்பதால், அபாயகரமான இந்தத் திருப்பத்தில் பிரேக் ட்ரம் சூடாகி பிரேக் பெயிலியராகி விடும். சாலையை உடைத்துக் கொண்டு வாகனம் பள்ளத்தில் விழ வாய்ப்பு அதிகம். அதனால் 36 ஊசி வளைவுகள் வரை 2-வது கியரிலேயே வாகனத்தை ஓட்டுங்கள். முடிந்த வரை கியரில் சென்று பிரேக்கை அளவோடு பயன்படுத்தி வளைவுகளில் திரும்புங்கள்.

சமதள பகுதிகள் வந்ததும் எங்கு நோக்கினாலும் பசுமை நிறைந்த காடுகள் இருக்கும். வாகனத்தை விட்டு காட்டுக்குள் காலாற நடக்கத் தோன்றும். மனம் விரும்பினால் சாலையில் வாகனத்தை  நிறுத்தி விட்டு காட்டின் அழகை ரசியுங்கள். காட்டுக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம். சிகரெட் பிடிக்க வேண்டாம். ஏப்ரல், மே மாதங்களில் எளிதாக வனத்தீ பற்றி விடும். கண் குளிரக் குளிர காடுகளுக்கிடையே மேலும் 10 கிலோமீட்டர் பயணித்தால் அழகிய மசினகுடி வந்து விடும். சுற்றிலும் பசுமை நிறைந்த சிறிய கிராமம். மாயாறு நீர்வீழ்ச்சி 10 கி.மீ தொலைவில் உள்ளது. இதுவும் பார்க்க மட்டுமே. அருவியின் அருகில் கூட நீங்கள் போக முடியாது. சிங்காரா மின்நிலையமும் இங்கிருந்து 10. கி.மீ தொலைவில் இருக்கிறது. மசினகுடி அருகிலுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் விஷேசம் நீலகிரி மக்களின் முக்கியத் திருவிழா.

மசினகுடியைச் சுற்றிச் சுற்றி வனப் பகுதிகளுக்குள் ஏராளமான ரிசார்ட்டுகள் உள்ளன. மரத்தின் மேல் வீடுகள் இருக்கின்றன. அதில் தங்குவது புதிய அனுபவமாக இருக்கும். இரவு நேரத்தில் கீழே யானைகள் பிளிரும் சத்தம் மிரள வைக்கும். மிகவும் அமைதியாக காணப்படும் வனப்பகுதி இது. ஆங்காங்கே சிறிய ஆறுகள் ஓடும். அதில் குளியல் போடலாம். குளிர்ந்த நீர் உடலுக்கு சில்லென்று இருக்கும். எல்லா வகையான உணவுகளும் கிடைக்கும்.

இரவு நேரத்தில் ஜங்கிள் ரைடுக்கு சிலர் அழைத்துச் செல்கிறார்கள். நிச்சயம் அது புது அனுபவம். மசினகுடியில் எந்த இடத்திலும் காட்டுக்குள் தனியாக நடந்து செல்ல வேண்டாம். யானை தாக்கும் அபாயம் அதிகம்.  இயற்கையின் அழகை இயற்கையோடு இணைந்து மட்டும் ரசிக்க முயலுங்கள். அதுதான் வனத்துக்கும் உங்களுக்கும் நல்லது. மசினகுடியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவு மைசூர் பாதையில் சென்றால் உலகப் புகழ்பெற்ற முதுமலை புலிகள் வனக்காப்பம் இருக்கிறது. முதுமலையின் சிறப்பு என்ன? நாளை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: