ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தயாநிதி மாறன் பழைய பேச்சு-இந்தியா கூட்டணியில் புகைச்சல்- பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சாடல்!

 tamil.oneindia.com - Mathivanan Maran  :   பாட்னா: உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் வந்து கழிவறை கழுவுகின்றனர் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசிய பழைய பேச்சு "இந்தியா" கூட்டணியில் கடும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


Tejashwi Yadav condemns DMK MP Dayanidhi Marans Statement on UP, Bihar People
இதனைத் தொடர்ந்து வட இந்திய மாநிலங்களை திமுக எம்பி செந்தில் குமார், கவ் மூத்ரா மாநிலங்கள் என நாடாளுமன்றத்தில் விமர்சித்தது சர்ச்சையானது. இதனை திமுக தலைமையே ரசிக்காததால் உடனே செந்தில்குமார் எம்பி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் டெல்லியில் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், டிஆர் பாலு எம்பி ஆகியோர் இந்தி மொழி பெயர்ப்பை கேட்டதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்தி தான் தேசிய மொழி; இது இந்துஸ்தான் என்றெல்லாம் ஆவேசப்பட்டார் நிதிஷ்குமார்.

இந்த நிலையில் சென்னையில் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசிய வீடியோ தற்போது பாஜகவினரால் சமூக வலைதளங்களில் பரப்பிவிட இது சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக தலைவர்களுடன் சேர்ந்து "இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்களே தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தயாநிதி மாறனின் விமர்சனம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள் உ.பி, பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது. நாங்கள் அதை ஏற்க முடியாது.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை நாடு முழுவதும் இருக்கிறது. அப்படியான நிலையில் உ.பி, பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். இத்தகைய கருத்துகளை தெரிவிக்காமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும். பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிக்கிறோம். ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

கருத்துகள் இல்லை: