தினமலர் : வாஷிங்டன்: இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது பற்றி கருத்து தெரிவிப்போம். நேற்று கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் லாயிட் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பிறகு அமைச்சர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஆண்டனி பிளின்கன் கூறியதாவது: இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சில அரசாங்க அமைப்புகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விஷயங்களை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: எங்கள் நாட்டு விவகாரங்கள் மீது கருத்து தெரிவிக்க உரிமை உள்ளதாக சிலர் நினைக்கலாம். அதே சமயம் அவர்கள் நாட்டு விவகாரங்கள் மீதும் கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமையுள்ளது. அவர்கள் நாட்டு விவகாரங்கள், லாபிகள், மற்றும் வாக்கு வங்கி அரசியல் மீது கருத்து தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உண்டு. எங்களுக்கும் மற்ற நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் மீது பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதை பற்றி நாங்களும் கருத்து தெரிவிக்க முடியும்.
அமெரிக்காவின் மனித உரிமை உட்பட அனைத்து விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க முடியும். அமெரிக்காவில் மனித உரிமை பிரச்சனை ஏற்படும் போது அதை பற்றி பேசுவோம். முக்கியமாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதை பற்றி நாங்கள் பேசுவோம். ஏன் நேற்று கூட அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதை பற்றியும் நாங்கள் பேசுவோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக