ராதா மனோகர் : மனிதா மனிதா இனி உன் விழிகள் ..
இளையராஜா வைரமுத்து யேசுதாஸ் ஆகியோருக்கு நிரந்தர புகழை சேர்க்கும் பாடல் .
இந்த பாடல் மீது கொண்ட காதலால் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு தடவை இளையராஜா அவர்கள் நவீன ஒலிப்பதிவு கருவிகள் மூலம் பதிவுசெய்தார் கருவிகள் என்னவோ நவீனமாக இருந்தது ஆனால் யேசுதாஸின் குரலோ கொஞ்சம் தளர்ந்து போயிருந்தது .இதன் ஒரிஜினல் பதிவில் வந்த உணர்ச்சியோ துல்லியமோ வரவில்லை .
அது மட்டுமல்ல இதை பலரும் பயந்து பயந்து மேடைகளில் பாடி இருக்கிறார்கள் ஆனாலும் ஒரு திருப்தியை அவை தரவே இல்லை என்றுதான் எண்ணுகிறேன்
அந்த அளவுக்கு இதன் மூலப்பதிவு அற்புதமாக அமைந்துள்ளது.
இதன் இசையில் சர்வசாதாரணமாக மேற்கு நாட்டு சாஸ்திரீக மேதைகளின் சங்கீத ஓசைகள் புகுந்து புகுந்து வருவதை கேட்கலாம்
இளையராஜா அதை காப்பி அடித்துவிட்டாரோ அல்லது இதை காப்பி அடித்துவிட்டாரோ என்று திணற அடிக்கும் அளவுக்கு தனது ஆளுமையை அவற்றின் மீது ஏற்றி வைத்திருக்கிறார் .
வாத்தியங்களை தங்க கிரீடத்தில் வைத்த மாணிக்க கற்கள் போன்று அங்கங்கே தூவி விட்டிருக்கிறார் எப்படி ஒவ்வொரு அதிர்வுகளையும் அசைவுகளையும் விவரிப்பது என்றே பிரமிப்பாக இருக்கிறது.
பாடலை பாடிய யேசுதாஸ் இந்த பாட்டை இவரை தவிர வேறு எவராலும் பாடமுடியாது .
அல்ல அல்ல இவராலேய இனி பாட முடியாது என்ற அளவு இதற்கு உயிரூட்டி உள்ளார் . ஒவ்வொரு வரிகளுக்கும் ஏற்ற உணர்ச்சி அவரது உள்ளத்தின் அடியில் இருந்து பொங்கி வருவதை காணலாம்.
இப்படி ஒரு பாடலை யாத்த கவிஞர் வைரமுத்து உண்மையாகவே ஒரு கோபத்தின் உச்சி மீது ஏறிநின்று எழுதி இருக்கிறார்
இந்த பாடலை கேட்கும்போது யார் யார் மீதெல்லாம் அநியாயமாக கோபம் வருகிறது .
அப்படி வார்த்தைகளை அழுத்தமாக பதித்திருக்கிறார் கவிஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக