மாலைமலர் : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இதையடுத்து இந்தியாவிடம் கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. அதன்படி இலங்கைக்கு 40 டன் டீசல் கப்பலில் அனுப்பப்பட்டது. மேலும் அரிசிகளையும் இந்தியா அனுப்பி வைத்தது.
நேற்று முன்தினம் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. சிங்கள புத்தாண்டையொட்டி கப்பலில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்தியா வழங்கிய டீசல் வேகமாக தீர்ந்து வருகிறது என்றும் இந்த மே மாதத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிடம் மீண்டும் கடன் கேட்க இலங்கை அரசு முடிவு செய்தது. சமீபத்தில் இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிரிந்த மொரகொடா சந்தித்து பேசினார்.
இதில் இந்தியா-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் கடனாக 2 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.15,200 கோடி) வழங்க இலங்கை கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து வரும் இந்தியா, இலங்கை கேட்கும் கடனை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியா உதவி வருகிறது.
இதுகுறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இலங்கை வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை தற்போது செலுத்துவதில் கால அவகாசம் கேட்டு இருப்பது கவலை அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு இன்னும் இரண்டு பில்லியன் டாலர்கள் வரை கடன் உதவி வழங்க முடியும்.” என்றார்.
இதன்மூலம் இலங்கை கேட்கும் ரூ.15,200 கோடியை இந்தியா விரைவில் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு இதுவரை இந்தியா, அத்தியாவசிய பொருட்கள், எரி பொருளுக்கான கடன்கள், நாணய பரிமாற்றங்கள் ஆகியவற்றில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, இலங்கைக்கு ரூ.21 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது.
வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடனை தற்போது செலுத்த இயலாது என்றும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வெளிநாட்டு தமிழர்கள் நிதியுதவி அளிக்கும்படி சிங்கள தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள், நாட்டில் நிலவும் உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க உதவுவதற்கு நிதியை வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே கூறும்போது, “இலங்கையில் அந்நிய செலவாணியை அதிகமாக தேவைப்படும் இந்த முக்கியமான தருணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் நாட்டுக்கு உதவ வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக