Dhinakaran Chelliah : தாமிரபரணி நதி மற்றும் பாவநாசத்தின் அருமை பெருமைகளை கண்டபடி கட்டுக் கதைகளாக அள்ளிவிடுகிறது முக்களாலிங்க முனிவர் அருளிய பாவநாசத் தலபுராணம். இத் தலபுராணத்தினை வசனச் சுருக்கத்தில் இயற்றியவர் சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாசலக் கவிராயர் ஆவார்.
பாவநாசத்தின் எல்லைப் பகுதியைத் தொட்டாலே பிரம்மஹத்தி முதலிய கொடிய பாவங்கள் அகலுமாம்.
தாமிரபரணி நதியில் நீராடினால் மீதமுள்ள பாவங்கள் கரையும்.பாவநாசத்திற்குப் போகிறவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது பாவநாசப் புராணம். இனி யாராவது பாவநாசத்திற்குப் போனேன்,போகிறேன் என்றால் அவர்களை ஏற இறங்கப் பார்க்கவும். ‘என்னென்ன கொடுமையான பாவம் செய்தார்களோ?’ என மனதுக்குள் எண்ணம் எழுந்தால், அதுதான் இப்பதிவின் வெற்றி.
இறந்து போன நம் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கிறது என்கிறது இத் தலபுராணம். அதனாலேயே பிதுர்க் காரியம் செய்ய இத்தலத்திற்கு செல்வோர் அதிகம்.
ஆதலால் பாவம் செய்துவிட்டோம் எனும் கவலையே இனி வேண்டாம். நடிகர் விவேக் ஒரு படத்தில் வருவது போல அட்வான்ஸ் ஆ பாவத்தைச் செய்து அதற்குப் பரிகாரமா பாவநாச எல்லை வரை போனால் போதும். என்ன ஒரு கொடுமையோ தெரியலை, இப்படிப்பட்ட கட்டுக் கதைகளை எழுதிய முனிவருக்கும் கூச்ச நாச்சமும் இல்லை,இதை வசன நடையில் எழுதிய கவிராயருக்கும் இந்தப் பொய்களை அவிழ்த்து விடுவதற்கு மனம் கூசவில்லை. இந்தப் பொய்களை நம்பி சனம் மட்டும் பாவநாசக் கோயிலுக்கு கூட்டம் கூட்டமா அலையிது, அங்கு பிதுர்க் காரிய வியாபாரமும் ஜோரா நடக்குது. இந்தப் புராணத்தில் அளவுக்கு அதிகமா நம்ப முடியாத கட்டுகதைகளை எழுதியிருக்கிறார்கள் என அந்தக் கதை பற்றி உள்ளதை உள்ளபடி எழுதும் நாம்தான் மக்கள் கண்களுக்கு எதிரிகளாகத் தெரிவோம். அப்படி ஒரு brain wash பண்ணப் பட்டிருக்கு இந்த மக்களுக்கு.எது எப்படியாயினும் நூலில் உள்ளதைச் சொல்வோம், அறிவார்ந்த சமூகமா இருந்தா இந்தப் புரட்டுகளை வாசிக்கட்டும்,கொஞ்சமாவது சிந்திக்கட்டும்.நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், நாம் எப்படியெல்லாம் ஏமாந்துள்ளோம் என்பதும் விளங்கும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தின் 26 ஆவது படலத்தின் பெயர் ‘மாபாதம் தீர்த்த படலம்’என்பதாகும். இந்தக் கதையில் தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பீடித்த பிராமணனின் கதை சொல்லப்பட்டிருக்கும். இந்தக் கதைக்கும் மேலாக பாவநாசத் தல புராணத்தில் சுந்தரன் எனப்படும் பிராமணனின் கதை கூறப்படுகிறது.
சூத முனிவர் மற்ற முனிவர்களுக்குக் கூறுவதாக, பாவநாசத் தலபுராணம் கூறும் சுந்தரன் பாவ விமோசனம் அடைந்த கதை இதுதான்,
சுந்தரன் பாவமோசனச் சருக்கம்;
மேகம் மழைபொழியும் வளங்குறையாத கவுடதேசத்திலே வேதமுழக்கம் நீங்காத காந்தமாபுரியென்னும் நகரிலே செல்வநிறைந்த வற்ச கோத்திரத்தில் வந்த அரிமித்திரன் என்னும் ஒரு பிராமணன் அன்னதானஞ்செய்து கொண்டிருந்தான். இக்ஙனம் அன்னதானஞ்செய்து நல்ல நியமங்களைச் செய்துவரும் நாளையில் சுந்தரனென்னும் ஒரு புத்திரன் பிறந்தான் அப்புத்திரனும் வேதமுதலாகிய
கலைகளெல்லாம் பயின்று பின்பு பிதாவைப்போலே அன்னதான முதலிய தருமங்கள் செய்துவந்தான்; அவன் ஒருநாள் தூண்டிலொன்றை யெடுத்துத் தடாகத்தின் கண்ணேசென்று அநேக மீன்களைப்பிடித்துக் கொண்டு ஒரு மரத்து நீழலில் வந்திருந்தான். இருக்கும்போது அவ்விடத்திலே வந்த சாரணரோடு கலந்து மகிழ்ந்து பேசிக் காம மேலீட்டால் ஒரு நாடகக்கணிகையுடன் கலந்து தன்னியமங்களை மறந்து மதுபானஞ்செய்து திரிந்து மிகுந்த திரவியத்தைச் செலவழித்து விட்டான். இது தெரிந்து பிதாவானவன் தன்னிடத்திலுள்ள
திரவியங்களையெல்லாம் பூமிக்குள்ளே மறைத்து வைத்தான். பின்னொருநாள் மதுபானஞ்செய்த மயக்கத்தினாலே சுந்தரன் தாசிவீட்டுக்குச் சென்றான் அவள் திரவியமில்லாது வந்த இவனை வெறுத்துக் கோபிக்கவும் உடனே வீட்டுக்கு வந்து திரவியங்க ளொன்றையுங் காணாமல் அதிக கோபங்கொண்டு தன் தகப்பனை வாளாயுதத்தால் இரண்டு துண்டாக வெட்டிக் காமவெறியால் தன்தாயையும் புணருதற்குத் தலைப்பட்டான்.
அது தெரிந்த தாயானவள் தன்னுயிரைத் தானே நாக்கைப்பிடுங்கி மரணஞ் செய்துகொண்டாள். அதன்மேல் மது மயக்கந் தீரக் காம மயக்கமுந் தீர்ந்து மனங்கலங்கி அந்தோ என்ன பாதகஞ்செய்தோ மென்று வருந்தி விடிவதற்கு முன்னமே சுற்றத்தாரும் பிறரும் அறியாவிதமாகத் தன் மனைக்குள்ளே இருவரையுந் தகனஞ்செய்து செய்யவேண்டிய நியதிகளை முடித்து உடனே நகரத்துக்கு வெளியே புறப்பட்டுப்போனான். போகும் போது பிரமகத்திதோஷம் வந்து சுந்தரனைப் பிடித்துத் தள்ளியலைப்ப மிகவும் வாடி இப்பாவம் எங்கேபோனாற் றொலையுமென்று தீர்த்தயாத்திரை செய்ய நினைத்துச்
சம்புத்தீவிள்ள புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம் ஸ்நானஞ் செய்துந் தீராமல் பாவநாசத்தைச் சேர்ந்த பஞ்சக் குரோசத்தெல்லையைச் சேர்தலும்
சுந்தரனைப்பிடித்த இரண்டு பிரமகத்திதோஷமும் வெந்து சாம்பராய்ப் போயின. இந்த அற்புதத்தைச் சுந்தரன் கண்டு சந்தோஷித்து நிற்கும்போது பாவநாசத்திலே சென்றால், சகலபாவமும் நீங்கும்
மோக்ஷமுங் கிடைக்குமென்று ஒரு அசரீரி சொல்லக்கேட்டு அந்தப்படியே மார்கழி மாதத்து அமாவாசைத் தினத்திலே பாவநாசத் தலத்தில் வந்து வேததீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து சந்நிதியிலுள்ள சிவகங்கையிலுந் தீர்த்தமாடிச் சந்நிதி முன்பு தாமிரபன்னி(தாமிரபரணி) நதியிலு மூழ்கி முக்களாலிங்கரைத் தோத்திரஞ்செய்து தன் பாவங்களை யெல்லா மொழித்து நின்றான். உடனே சிவபெருமான் இடபாரூடராயெலுங் தருளிவந்து சுந்தரனுக்குக் காட்சி கொடுத்தருளத் தரிசித்துப்
பேரானந்தமடைந்து பரவசனாகி வேதமந்திரங்களாலே தோத்திரஞ்செய்து சுவாமீ! அடியேனுடைய பிதா மாதாவுக்குப் பரகதிகொடுதருள வேண்டுமென்று பிரார்த்தித்தான்.சிவபிரான் அவ்வாறே கேட்டவரங்களைக் கொடுத்துச் சுந்தரனே! பஞ்சாக்ஷர செபஞ்செய்து பல
தவங்களைச் செய்து சிலநாட்சென்று நம்முடைய பதவிக்கு வந்து வாழ்க என்று சொல்லி வயிராசலிங்கத்துள் மறைந்தருளினார். உடனே சுந்தரனுடைய பிதாமாதா ஆகிய இருவரும் தெய்வ விமானத்திலேறிச் சுந்தரன் முன்பு வந்து நின்று வாழ்த்துரை சொல்லிக் கயிலாசத் தையடைந்தனர். சுந்தரனுஞ் சிவபிரான் கட்டளைப்படியே தவம் புரிந்து முக்களாமூர்த்தியைப் பணிந்து சிலநாள் சென்று சிவபதம் பெற்றான். சுந்தரன் பாவமோசனத்தைச் சொன்னோம்.
இது போன்று வணிகன் பாவமோசனம் பெற்ற சுவாரஸ்யமான கதையும் இந்த த் தல புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. அடுத்த பதிவுகளில் அதைப் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக