தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமாம் (செபி) தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்த சாமியாரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், பங்குச்சந்தையின் ஏற்ற - இறக்கம் குறித்த முன்கூட்டிய கணிப்புகள் ஆகியவற்றை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக, அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் பொறுப்பிலிருந்து 2016-ம் ஆண்டு விலகினார்
இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்த செபி திரட்டிய ஆவணங்களின்படி, அந்த சாமியார்தான் தேசிய பங்கு சந்தையை "நிர்வகித்து வந்ததும்", சித்ரா ராமகிருஷ்ணா தன் பதவியின் இறுதிக்காலம் வரை "சாமியாரின் கைப்பாவையாக" இருந்ததும் தெளிவாக தெரிகிறது என செபி தெரிவித்துள்ளது.
"தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள் குறித்து பகிரப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் கற்பனைக்கு எட்டாததாகவும் உள்ளது. பங்குச்சந்தையின் அடிப்படை கட்டுமானத்தையே உலுக்கும் செயல் இது" என செபி தெரிவித்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செபி, இனி வரும் 3 ஆண்டுகளுக்கு பங்கு சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
சாமியாருக்கு தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி என, செபி குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் கிடைக்கப் பெறவில்லை.
அந்த சாமியார் இமயமலையில் வசிப்பவர் என்பதை தவிர வேறு எந்த வித அடையாள விவரங்களும் செபியால் வெளியிடப்படவில்லை.
கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்கு முன் கங்கை நதிக்கரையில் அந்த சாமியாரை தான் சந்தித்ததாக, விசாரணையின்போது சித்ரா ராமகிருஷ்ணன் செபியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போதிலிருந்து "தனிப்பட்ட மற்றும் அலுவல்ரீதியான பல அறிவுரைகளை" தான் அந்த சாமியாரிடம் இருந்து பெற்றதாக, சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
"பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் மற்ற மூத்தவர்களிடமிருந்து மூத்த தலைவர்கள் பலரும் அலுவல்சாரா ஆலோசனைகளை பெறுவார்கள். அதேபோன்று, என்னுடைய பொறுப்பில் நான் சிறந்து விளங்குவதற்கு இந்த வழிகாட்டுதல் எனக்கு உதவியது," என அவர் தெரிவித்துள்ளார்.
சித்ரா ராமகிருஷ்ணாவின் இச்செயல்கள் "அதிர்ச்சியளிக்கும் வகையிலான விதிமுறை மீறல்" என தெரிவித்துள்ள செபி, இந்த செயல்கள் பங்குசந்தை மீது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என்ற அவருடைய பார்வை "அபத்தமானது" எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முந்தைய விசாரணைகளின்போது, சாமியார் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் இடையே மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தது கண்டறியப்பட்டதாக செபி தெரிவித்துள்ளது.
1990களின் ஆரம்பத்தில், தேசிய பங்கு சந்தை நிறுவப்பட்டபோது, அதன் செயல் அதிகாரிகளில் ஒருவராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், 2016-ல் தன் பதவியிலிருந்து விலகியபோது அதற்கு "தனிப்பட்ட காரணங்களால்'' பணியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக