மின்னம்பலம் : உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 81,72,173 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மொத்தம் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உத்தர காண்டில் ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது. அதுபோன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் போராடி வருகிறது.
உத்தரகாண்ட் போன்று பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
மொத்தம் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கோவாவிலும் இன்று ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக