திங்கள், 14 பிப்ரவரி, 2022

பாகிஸ்தானில் மதவெறி கும்பல்களால் எரித்து கொலை செய்யப்ட்ட சுதந்திர சிந்தனையாளர்

 BBC News, தமிழ் : இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை: பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக கும்பல் கொலை செய்யப்பட்ட நபர்
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை தீயிட்டு எரித்து மத நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் கும்பல் ஒன்றால் கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் காவல் துறை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சனிக்கிழமை அன்று நடந்த இந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவிக்கிறது.
பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது. கானேவால் மாநிலத் தலைநகர் லாகூரில் தென்மேற்கே 275 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.



இதே பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் மத நிந்தனை செய்ததாக இலங்கையைச் சேர்ந்த ஆலை மேலாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்னொரு கும்பல் கொலை நடந்துள்ளது.
சனிக்கிழமை என்ன நடந்தது?

கும்பலால் இழுத்துச்சென்று கொல்லப்படும் முன்பு அந்த நபர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவரின் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று, ஞாயிற்றுக்கிழமை, இறுதிச்சடங்கு நடந்தது.

இந்த வழக்கு சட்ட ரீதியாகக் கடுமையாக கையாளப்படும் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறந்தவரின் உயிரைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கேட்டுள்ளார்.

சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்வோருக்கு எதிராக தமது அரசு துளியும் சகிப்புத்தன்மை கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடன

சென்று டிசம்பரில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடன சியால்கோட்டில் தாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த நபரைக் காவல்துறையினர் தேடிச் சென்றபோது அவர் மரமொன்றில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்ததாக காவல்துறை அதிகாரி முனவர் உசேன் என்பவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட நபரின் வயது நாற்பதுகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தடிகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை கொண்டிருந்த கிராமவாசிகள் அந்த நபரைக் கொலை செய்து அவரது உடலை மரமொன்றில் தொங்க விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் முனவர் உசேன்.

கொல்லப்பட்ட நபர் கடந்த 15 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக சம்பவம் நடந்த காவல்நிலைய தலைமை அதிகாரி முனவர் குஜ்ஜார் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை அவமதித்து மத நிந்தனை செய்வோருக்கு பாகிஸ்தான் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அங்குள்ள மத சிறுபான்மையினரை இலக்கு வைத்துத் துன்புறுத்தவே அந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மத விவகாரங்கள் பெரிதும் இல்லாத சச்சரவுகளிலும், மதம் எந்த வகையிலும் தொடர்பில்லாத தனிநபர் பிரச்னைகளிலும், எதிர் தரப்பினரைப் பழிவாங்குவதற்காக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை: