Rayar A - Oneindia Tamil : சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின தின விழா இன்று கோலாகலமாக கொண்டாப்படுகிறது.
இதனையொட்டி மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின தின விழா கொண்டாடப்பட்டது.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -
அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் சிலர் இதற்கு விளக்கம் கூறியதால் மேலும் பரபரப்பு உண்டானது.
பல தரப்பிலும் கடும் கண்டனம் - தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டின்சன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொங்கியெழுந்த கனிமொழி - இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, ''ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என்று கடுமையாக கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் என்று பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு ஆதரவு - இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ' ரிசர்வ் வங்கியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க தேவையில்லை என்கிற சிலரின் வாதம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இது குறித்த சர்ச்சையில், எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசு நிர்வாக உத்தரவு எதுவும் இல்லை என்று உயர்நீதி மன்றம் கூறியிருந்த நிலையில், கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே.
மரியாதையை குலைக்க வேண்டாம் - தேவையில்லாத வாதங்களை முன்வைத்து, நம் தாய்க்கு ஒப்பான தமிழ் மொழியின் மரியாதையை குலைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம் தேவையில்லாது வாதம் புரிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு, நின்ற நிலையில் மனதார தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக