Sowmian Vaidyanathan : எந்த நேரத்தில் இதைச் சொன்னாரோ...?! அல்லது எதைப் புரிந்து கொண்டு இதைச் சொன்னாரோ....?
சில மாதங்கள் முன்பாக எச். ராஜா சொன்னதை இன்றைக்கு மோடி, அமித்ஷா உள்ளிட்ட இந்தியா முழுமைக்கும் உள்ள நாக்பூரிஸ்ட்டுகள் அனைவரும் சற்று முன்பாக ஒரே குரலில் கோரஸாக சொல்லி படபடத்திருப்பார்கள்...
ஆம்... "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கலைஞர்" என்று..!
இப்படி ஒரே காணொளி மூலம் ஒட்டுமொத்த சங்கிக் கூட்டத்தையும் அலறவிடும் அளவிற்கு அப்படி எதைத்தான் பேசிவிட்டார், திமுகழக தலைவர் என்று கேட்பீர்களேயாயின்...
ஒரு சின்ன AV எனப்படும் ஏரியல் வியூ வரலாற்றை பார்த்து விட்டு வந்தால் மேற் சொன்ன வாக்கியத்துக்கான அர்த்தத்தை முழுமையாக வாசகர்களால் உள் வாங்க முடியும்..!
ஒரு பேரியக்கத்தின் அரை நூற்றாண்டு மாபெரும் தலைவனின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றுக் கொண்ட...
அடுத்த தலைமுறை தலைவன், தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டுமானால், அது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத காரியம் தான்.
காரணம் அரை நூற்றாண்டு காலம், நிரூபிக்கப்பட்ட வெற்றி வரலாற்றை கொண்ட தலைவர் ஒருவர் விட்டுச் சென்றிருக்கும்... தொட்டுச் சென்றிருக்கும்... நிர்ணயித்துச் சென்றிருக்கும் உயரமும்... சிகரமும்... அவ்வளவு எளிதில் தொட்டுவிடக் கூடியதாகக் கூட இருக்காது...
அவற்றில் பாதி அளவாவது புதிய தலைவர் எட்டிப் பிடிபாரேயானால் கூட போதுமானது என்று தான் பொதுவானவர்கள் கருதுவார்கள்.
அப்படியான நிலையில் கலைஞருக்கு பிறகு திமுகழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட தளபதியார் அவர்கள்...
தலைவர் கலைஞர் கட்டமைத்துச் சென்று சிகரத்தின் மேலேறி அதில் வெற்றிக் கொடியையும் நாட்டி விட்டார் என்பது தான் இதில் டிவிஸ்ட்டே...!
இந்த இடத்தில் தலைவர் தளபதியார் தேர்தல் பாதையில் தொடர்ந்து, நாடாளுமன்றம், உள்ளாட்சி, சட்டமன்றம் என்று பெற்றுக் கொண்டு வரும் மாபெறும் வெற்றிகளைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.
மாறாக அந்த பேரியக்கம் தோன்றுவிக்கப்பட்டதற்கான காரணத்தை... நோக்கத்தை.... அடைவதற்கான பாதையில் இவர் செய்திருக்கும்... முன்னெடுத்திருக்கும் சாதனையைத் தான் நான் இங்கே தெளிவாக பதிவு செய்ய விழைகிறேன்.
சமூகநீதியில் அக்கறை கொண்ட தலைவர்களை ஒருங்கிணைத்து சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம்... என்று தலைவர் தளபதியார் அவர்கள் இன்றைக்கு தேசிய இணைய கருத்தரங்கில் அறிவித்திருப்பது தான்...
ஆர் எஸ் எஸ் கூட்டத்தை அலற வைத்திருக்கின்றது..!
இது என்ன அவ்ளோ பெரிய்ய விஷயமா?! இந்த மாதிரியான பிரகடனங்களுக்கு எல்லாம் ஆர் எஸ் எஸ் காரர்கள் அலறித் துடிப்பார்களா... என்று கேட்பீர்களேயானால்... ஒரு பெரிய வரலாற்றை சின்னதாக நாம் இங்கே உங்களுக்கு நினைவூட்டினால் நம்புவீர்கள்..!
திமுகழகம் துவங்குவதற்கு காரணமான சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட மிக மிக முக்கியமான முதல் ஐந்து காரணங்களில் ஒன்று தான் மாநில சுயாட்சி..!
திமுக துவங்கிய காலத்தில் மாநில சுயாட்சி என்ற கொள்கையோ அதற்கான கோரிக்கையோ வைக்கப்படவில்லை. காரணம், இந்த சந்து பொந்து சமரசங்கள் எல்லாம் வேண்டாம், எங்களை தனியா அத்து விட்டுடு என்று சொல்லி தனி திராவிட நாடு கோரிக்கையோடு தான் களம் இறங்கியது.
வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்ற மாபெரும் முழக்கத்துடன் தான் பேரறிஞர் அண்ணா தன் தம்பிமார்களுடன் களம் கண்டார்.
காலம் இவ்வளவு மாறிய பின்பும் கூட, நம்முடிய விடுதலை போராட்ட வீரர்களையே இந்திய ஒன்றிய அரசின் குடியரசு நாள் ஊர்வலத்தில் பங்கேற்க வைக்க இயலாத நிலை தான் உள்ளது என்றால், 60 ஆண்டுகளுக்கு முன்பான நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!
தென்னகம் ஒருவித அடிமைத்தனத்துடன் வடவர்களின் ஆளுமையில், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யவும், நமது வளங்கள் அங்கே சுரண்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் தான் இருந்து வந்தது.
இதைத்தான் பேரறிஞர் அண்ணா எதிர்த்தார், எங்களை தனியாக பிரித்து விட்டுவிடுங்கள், நாங்கள் எங்களை சுயமாக பார்த்துக் கொள்கின்றோம் என்றார்...!
அதற்காகத் தான் தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஆனாலும் ஐநூற்று சொச்சம் சிறு குறு சமஸ்தானங்களை, குறுநில மன்னர்களை அதட்டி உருட்டி அடிபணிய வைத்து, ஒற்றை இந்தியாவாக கட்டமைத்த சர்தார் வல்லபபாய் பட்டேலின் அந்த டீம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா?!
இப்பத்தான் கஷ்டப்பட்டு ஒன்றாக சேர்த்திருக்கின்றோம்..., இப்போ போய் தனிக்குடித்தனம் போவேன் என்கிறாயே..? இதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும் என்றது அந்த டீம்.
அதற்கு அண்ணாவின் பதில்....
தனிக்குடித்தனம் போவது எங்களுக்கும் முக்கிய பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி அவை நீத்துப் போக வைக்கப்பட்டு ஒரு புது வாழ்க்கை முறை திணிக்கப்படும் பொழுது, எங்கள் மொழிகள் எழுத்து, பேச்சு வழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்டு புதிய ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது, எங்கள் வளங்கள் சுரண்டி எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிலிருந்து ஒரு சிறு பகுதி எங்களுக்காக பிச்சை போல் இடப்படும் பொழுது, நாங்களும் படித்து முன்னேறக் கூடாது என்று சொல்கின்ற பொழுது, விளையாட்டு, இசை, கலைகள் உள்ளிட்ட எங்கள் திறமைகள் எதுவுமே இந்திய அளவில் நிராகரிக்கப்படுகின்ற பொழுது....
இப்படி அனைத்திலும் நாங்கள் அடிமைகளாக பயன்படுத்தப்படும் நோக்கோடு.... குறிப்பாகச் சொன்னால் வடவர்களை தூக்கிச் சுமக்கும் கழுதைகளாக தென்னவர்கள்... அதாவது திராவிடர்கள் பயன்படுத்தப்படுகின்ற பொழுது...
அதை ஏற்றுக்கொள்ள எங்களால் இயலவில்லை... எல்லோரும் இந்தியராக சம உரிமையோடு... அவரவர் சுயமரியாதையோடு வாழ்வோம் என்று கூறினோம், நீங்கள் கேட்கவில்லை அதனால் தான் நாங்கள் தனிக்குடித்தனம் செல்கின்றோம் என்றார் அண்ணா..!
ஏற்றுக்கொள்வார்களா வடநாட்டு சங்கிகள்?!
போராட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுகழக இளைஞர்களில் சில ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.
அரசு இயந்திரம்... அதைக் கொண்டு நடத்தப்படும் அல்லது நசுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் கோர முகம் எப்படி இருக்கும் என பேரறிஞர் அண்ணா கண்டு கொண்டார்...
உரிமைக்காகத் தான் போராடுகிறோம்... அதற்கு முதலில் உயிரோடு இருக்க வேண்டும். உயிரே போன பின்பு உரிமை கிடைத்து என்ன பயன்?
ஆகவே உரிமைக்காக போராடுவோம்... ஆனால் சட்டம் அனுமதிக்கின்ற வகையில்... அதிலும் அரசியல் ரீதியிலாக... என்ற முடிவினை எடுக்கின்றார்.
உடனடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத அந்த தனி திராவிடநாடு கோரிக்கையை கை விடுவதாக அறிவிக்கின்றார்.... ஆனால் கோரிக்கை தான் கை விடப்படுகிறதே தவிர, அந்த கோரிக்கைக்கான... போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன.
அந்த கோரிக்கைகளை... அதாவது எங்கள் உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் ரீதியாக நாங்கள் வென்றெடுப்போம் என்ற உறுதியோடு கைவிடுகின்றார்..!
அதன் பிறகு தனி திராவிடநாடு கோரிக்கைக்கு மாற்றாக...
திமுக முன்னெடுத்த விஷயம் தான் அதன் கொள்கை முழக்கங்களில் முக்கியமான ஒன்றாக மாறிப்போனது. அது தான்...
மாநில சுயாட்சி..!
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுகழக தலைவராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர்...
தன்னுடைய ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக... திமுகழகத்தின் மிக முக்கிய, முதன்மையான ஐந்து கொள்கை முழக்கங்களில் ஒன்றாக...
மத்தியிலே கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுத்து, அதற்காகவே தெள்ளத்தெளிவாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துவிட முடியாது, அதனால் நீண்ட கால இலக்குடன், படிப்படியாக... அதிகார மையத்தின் ஒவ்வொரு செங்கல்லாக உறுவி... இதன் தேவையை அனைத்து மாநிலங்களும் உணர வைத்து... இது ஏதோ தமிழக மக்களுக்கான தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல... மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து பிராந்திய மக்களுக்குமான அத்தியாவசிய கோரிக்கை என்பதையும்...
படிப்படியாக இந்திய அளவில் உணர வைத்து, தேசியக் கட்சிகளையும் இந்த புள்ளியை நோக்கி நகர வைத்து... மாநில சுயாட்சியை சாத்தியப்படுத்தும் பணிக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.
இந்தப் பணியில் மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் ஐயா முரசொலி மாறன் அவர்களின் பங்கு அளப்பறியது.
அந்த திட்டத்தின் அடிப்படையில்...
திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பிராந்திய... அதாவது மாநில கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள் தோன்றுவதையும் அவைகள் ஆட்சியை பிடிப்பதற்குமான அனைத்து வகையான உதவிக் கரங்களையும் நீட்டுவது. அவர்களுடன் நட்புறவாக செயல்படுவது...
இது முதல் நிலை..!
அடுத்ததாக, அந்த மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல்களிலும் தீவிரமாக போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் ஒரு தனி தேசியக் கட்சியின் ஆட்சி என்ற நிலையினை மாற்றி அமைப்பது...
இது இரண்டாம் நிலை..!
தொடர்ந்து மத்தியில் ஒரு தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவுடனான கூட்டணி அரசை அமைப்பது. அந்த கூட்டணி ஆட்சியினை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து எந்த சிக்கலும் இன்றி நடத்திக் காட்டுவது. அதேப் போன்று தொடர்ந்து கூட்டணி ஆட்சியையே அடுத்தடுத்து மத்திய அரசில் ஏற்படுத்துவது....
இது மூன்றாம் நிலை..!
இப்படியான நிலை தொடரும் பொழுது, இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களும் அவரவர்க்கு உரிய உரிமைகளையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும்... எந்த சேதாரமும் இல்லாமல் பேணிப் பாதுகாத்து... தனித்தன்மையுடனும் அதே சமயம் இந்தியர் என்று நல் உணர்வுடனும் இருப்பதை உணர வைப்பது.... இது
நான்காம் நிலை..!
இப்படியாக தொடரும் பட்சத்தில் தேசிய கட்சிகளே மாநில கட்சிகளின் சிந்தனைகளோடு.... அந்த சித்தாந்தத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினார் கலைஞர்... இதுவே இறுதி நிலை..!
தலைவர் கலைஞரின் இந்த திட்டத்தின் படி... அவர் முதல் மூன்று நிலையினை, நாற்பது ஆண்டு கால கடும் போராட்டத்திலும், விடா முயற்சியிலும், உழைப்பினாலும் அவர் எட்டி விட்ட நிலையில்....
மதவெறி எனும் நயவஞ்சக ஆயுதத்துடன் கலைஞரின் கூட்டாட்சி கனவுக்கு, ஆர் எஸ் எஸ் ஒரு முட்டுக்கட்டையை போட்டு, தனது சனாதன ஆட்சியை ஒன்றிய அரசில் நிறுவி விட்டது..!
ஏற்கனவே காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்குள் ஊடுறுவி... மறைமுகமாக தனது சனாதன கொள்கைகளை தட்டுத்தடுமாறி நிறுவி வந்த ஆர் எஸ் எஸ்...
இப்பொழுது தங்கள் நேரடி ஆட்சியே அமைந்து விட்ட எகத்தாளத்தில்... தங்கள் சனாதன கொள்கைகளை நிறுவுவதற்காகவே தான் மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியதாக எக்காளமிட்டுக் கொண்டு...
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே உடை, ஒரே நிறம்.... ஒரே ஆண்டான் மற்றோரெல்லாம் மீண்டும் பழைய அடிமை கோலம்....
என்ற செயல் திட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கும் நிலையில் தான்...
திமுகழகத்தின் மூன்றாம் தலைவராக தலைவர் தளபதியார் பொறுப்பேற்கிறார்...
அவர் பொறுப்பேற்ற பொழுது, அவர் முன்னே இருந்த முதல் சவால்... திமுகவை மீண்டும் அரியணையில் அமர வைக்க வேண்டும். அப்பொழுது தான், ஒன்றிய பாசிச பாஜக அரசின் சனாதன படையெடுப்பிலிருந்து தமிழகத்திற்கு ஒரு தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்பதாகும்..!
அதற்கான வியூகங்களை வகுத்து, முதலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை கழகத்திற்கு ஈட்டித்தந்து... நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுகவை நிலை நாட்டிய பிறகு...
அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் கழக செயல்வீரர்களை வெற்றிபெற வைத்து...
உச்சக்கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தலில், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, மூன்று இலக்கத்தில் திமுகழக உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் நுழைந்து, ஆட்சியையும் கைப்பற்றி....
இன்றைக்கு தன்னிகரில்லாத தமிழக தலைவராக... தமிழ்நாட்டு முதலமைச்சராக... இந்திய அளவில் தன்னை ஒரு மாபெரும் சக்தியாக... தன்னை நம்பர் ஒன் முதலமைச்சராக....
சட்டப்போராட்டத்தின் மூலம் 27 சதவிகித இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பெற்றுத் தந்து...
சமூகநீதியின் ருசியை வி.பி.சிங்குக்குப் பிறகு இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உணர்த்திக் காட்டி....
தங்கள் மாநில உரிமைக்கு ஒன்றிய அரசினால் பங்கமோ, அவமானமோ, உதாசீனமோ ஏற்படும் பொழுது... அப்பொழுது நம் மாநில மக்களுக்கு ஏற்பட்ட வலியை விட பன்மடங்கு அதிகமான வலியை சனாதனவாதிகளுக்கு வழங்கிடும் விதமாக...
நீ தடுத்ததை, நான் எங்கள் மாநிலம் முழுக்க காட்சிப் படுத்துகிறேன்... அதில் யார் பெயரைச் சொன்னால் உனக்கு பதற்றம் வருமோ... அவரை சிலையாகவே நிறுவி முன்னால் கொண்டு வருகிறேன் பார் என்று.... திருப்பி அடித்து....
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், தத்தமது மாநில, பிராந்திய உணர்வு எழுச்சியை இப்படியாத தூண்டி எழச்செய்து....
இதோ இன்றைக்கு...
இந்திய அளவில் சமூகநீதியும், மாநில சுயாட்சியும் விரும்புகின்ற அனைவரையும் ஒருங்கிணைப்போம்... அதற்கான அமைப்பினை விரைவில் உருவாக்குவோம்....
என்று ஆர் எஸ் எஸ் வாதிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் பிரகடனத்தை முன் மொழிந்திருக்கின்றார்..!
பாஜகவை எதிர்ப்பது என்பது... அவர்கள் திணிக்கும் ஒவ்வொரு அடிமை சாசனத்திற்கும் குழாயடிச் சண்டை போல கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது என்பதாகாது..!
மாறாக அவர்கள் நிறுவ நினைக்கும் ஆண்டான் அடிமைதனத்தை வேரறுக்கும் விதமாக... இந்திய அளவில் இயக்கங்களையும், தலைவர்களையும், மக்களையும் ஒன்றிணைத்து.... பாஜக என்னும் விஷச்செடியின் வேரில் வெந்நீரை ஊற்ற வேண்டும்..!
இப்பொழுது தலைவர் தளபதியார் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பின் மூலம் அந்த விஷச்செடியின் வேரில் வெந்நீரை ஊற்றவில்லை.... மாறாக ஆசிட் அடித்திருக்கின்றார்..!
அதனால் தான் அவர்கள் புலம்புகின்றார்கள்.... ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கலைஞர்..!
தலைவர் தளபதியார் அண்ணா போட்ட வரைபடத்தை (Map) மனதில் ஏற்றிக் கொண்டு.... தலைவர் கலைஞர் ஒரு எல்லை வரை போட்ட பாதையில்.... பெரியாரை தோளில் தூக்கிக் கொண்டு.... இந்தியாவின் தென் முனையிலிருந்து புறப்பட்டு... இமயமலை நோக்கி பயணத்தை துவங்கி விட்டார்...!
Sowmian Vaidyanathan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக