மின்னம்பலம் : "உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு அனைத்து கட்சிகளிடமும் தொற்றிக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுடனும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் திமுகவின் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே .எஸ் .அழகிரி, 'முதல்வர் ஸ்டாலின் இப்போது அதிகமாகப் பேசுவதில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட அவரிடம் அதிகமாக பேச முடிவதில்லை' என தனது ஆற்றாமையை வெளியிட்டிருந்தார். இந்த விழாவிலேயே முதல்வர் ஸ்டாலின், 'நான் பேசுவதைக் காட்டிலும் எனது திறமையை செயலில் காட்ட விரும்புகிறேன்' என்று பதில் அளித்திருந்தார்.
சற்றும் எதிர்பார்க்காத கே. எஸ். அழகிரி மறு நாளான ஜனவரி 28 காலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகையோடு அறிவாலயம் சென்றார். கூடவே சென்னை மாவட்டத் தலைவர்களும் சென்றிருந்தனர்.
அனைவரையும் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வாசலில் வரவேற்று அழைத்துச் சென்றார். காங்கிரஸ் தலைவருக்காக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என் .நேரு, டிகேஎஸ் இளங்கோவன் எம்பி ஆகியோர் அறையில் காத்திருந்தனர்.
அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் சென்றதும் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் சார்பில் அறிவாலயத்துக்கு பேசவந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று அவர் ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்தது அன்று பரபரப்பானது.
அப்படி எந்த நெருடலும் இல்லாமல் மு. க. ஸ்டாலின், துரைமுருகன், நேரு, டிகேஎஸ் இளங்கோவன் என அனைவரும் எழுந்து நின்று அழகிரியை வரவேற்றுள்ளனர்.
'முதலில் டீ சாப்பிடுங்க அப்புறம் பேசுவோம்' என்று ஸ்டாலின் அனைவருக்கும் டீ கொடுக்க சொல்லியுள்ளார். அனைவரும் சில நிமிடங்கள் டீ சாப்பிட்டனர்.
பின்பு துரைமுருகன், 'தேர்தல் பணிகளை எல்லாம் தொடங்கிவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம கூட்டணி பெரிய வெற்றி அடையணும். இதுக்கு உங்களோட கோஆபரேஷன் வேணும்' என்று கூறியுள்ளார்.
'நிச்சயம் எங்க ஒத்துழைப்பு உங்களுக்கு என்றும் உண்டு' என்று அழகிரி பதில் சொல்லியுள்ளார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின்...'தமிழ்நாடு ஃபுல்லா ஒரே கட்டமாக நடத்தறோம். அதனால வேகமா அந்தந்த மாவட்ட அளவில் பேசி உடன்பாடுகளை எட்டச் சொல்லி இருக்கோம். நீங்கதான் நம்ம கூட்டணியில் முக்கியமான கட்சி. அதனால உங்களுக்கான இடங்களை தருவதில் எந்த கசப்பும் இருக்கக் கூடாதுன்னு மாவட்ட செயலாளர்கள்கிட்ட சொல்லியிருக்கேன். நிச்சயமாக அப்படித்தான் நடந்துப்பாங்க' என்று அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது செல்வப் பெருந்தகையும், அழகிரியும்... ' ரொம்ப நன்றிங்க. ஆனால் ஏற்கனவே ரூரல் பஞ்சாயத்து தேர்தலில் கொஞ்சம் கசப்பான அனுபவம் இருக்கு...' என்று இழுத்திருக்கிறார்கள்.
அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், 'அதை விடுங்க. இந்த முறை அப்படி எதுவும் நடக்காது. உங்களுக்கு எங்கேயாவது கசப்போ பிரச்சினையோ இருந்துச்சுன்னா எப்ப வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க... நான் பேசி உடனடியாக தீர்த்து வைக்கிறேன்' என பதில் சொல்லியிருக்கிறார்.
'ஏற்கனவே காங்கிரஸுக்கு மேயர் பதவிகளை கொடுத்தீங்க. இந்த முறையும் எங்களுக்கு வேணும்னு எதிர்பார்க்கிறோம்' என அழகிரி கூற.... 'அதையெல்லாம் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நாமளே உட்கார்ந்து பேசிக்கலாம்' என்று பதிலளித்திருக்கிறார் ஸ்டாலின்.
அதன் பிறகு கொஞ்ச நேரம் மாநில, தேசிய அரசியல் பற்றி பேசிவிட்டு சுமார் 25 நிமிட சந்திப்பு முடிந்து காங்கிரஸ் குழுவினர் அறிவாலயத்தில் இருந்து விடை பெற்றிருக்கிறார்கள்.
காங்கிரசுக்கு எத்தனை சதவிகித இடங்கள் என எதுவும் இந்த சந்திப்பில் பேசப்படவில்லை. கசப்பு வராது என்ற உத்திரவாதத்தை மட்டும் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் அறிவாலய வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய அழகிரி, 'துரைமுருகன் அன்பாக பேசினார். தேநீர் குடிக்கச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும்' என்று சொல்லி விட்டு புறப்பட்டார்.
ஸ்டாலின் சந்திப்பு முடிந்த அன்று பிற்பகல் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் அனைவரையும் காணொலியில் தொடர்புகொண்ட கே. எஸ். அழகிரி, ' சென்றமுறை போல இந்த முறை கசப்பான சம்பவங்கள் நடக்காது என ஸ்டாலின் உறுதி சொல்லியிருக்கிறார். அவர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதை தெரிவித்திருப்பதாக என்னிடம் சொன்னார். எங்கேயாவது பிரச்சனை என்றால் உடனடியாக என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அதை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்று பிரச்சினையை தீர்த்து வைப்போம்' என்று கூறியுள்ளார்" என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக