எழுகதிர் : பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வெளியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும தெரிவித்தார்.
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப்புத்தகங்களை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டது எனவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அதற்கமைய, திணைக்களத்தினூடாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு, இஸ்லாம் பாடநூல்கள் பரிசீலிக்கப்பட்டன எனவும், இதன்போது விநியோகிக்கப்பட்டுள்ள பாடநூல்களை மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
06, 07, 08, 10, 11ஆம் தர மாணவர்களுக்கான இஸ்லாமிய பாட நூல்களையே திரும்பப் பெறுமாறும், இதுவரை பாடநூல்கள் விநியோகிக்காத மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் பாடப் புத்தகங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும், அதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்று, துரிதகதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இஸ்லாம் பாடப்புத்தகங்களில், சில வகுப்புகளுக்கான புத்தகங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக