திங்கள், 9 ஆகஸ்ட், 2021

தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!” – விளக்கும் வேளாண் அதிகாரி

தண்ணீர் மேலான்மை பயிற்சி
BBC - சிந்து ஆர் : சமதள நிலம் மற்றும் சரிவான நிலங்களில் உள்ள தென்னை மரங்களுக்கு எப்படி நீர் மேலாண்மை மேற்கொள்ளலாம் என்பதையும். அதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் விதத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். >கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது தென்னை மரம். இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது. கேரளா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக தென்னை மரங்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை மரம் பயிரிடப்பட்டுள்ளன. ஆடி மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவு தென்னை மரங்கள் நடப்படுவது வழக்கம். எனவே தென்னை மரத்தில் அதிக காய்பிடிப்புக்கு இயற்கை முறையில், அதிக செலவு இல்லாமல் நீர்மேலாண்மை மேற்கொள்வது குறித்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதாவிடம் பேசினோம்.
தென்னை மரத்திற்கு நீர் மேலான்மை
தென்னை மரத்திற்கு நீர் மேலான்மை

“தென்னை மரம் செழித்து வளர்ந்து திரட்சியான காய்களைக் கொடுக்கவும், வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கவும், ஒளிச்சேர்க்கை நடைபெறவும் தேவையான பயிர் உணவை மண்ணில் இருந்து கிரகித்துக் கொள்ள நீர் அவசியம். தண்ணீர் குறைபாடு ஏற்பட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிப்புக்குள்ளாகும். தென்னை மரங்களை நடவு செய்த முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் பத்து லிட்டர் தண்ணீர் விடவேண்டும். இரண்டு முதல் மூன்று வயது கன்றுகளுக்கு வாரம் இரண்டு முறை 40 லிட்டர் தண்ணீரும், அதன் பிறகு வாரம் 60 லிட்டர் தண்ணீரும் விட வேண்டும்.

தமிழகம் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற அரசு செய்யவேண்டியவை என்னென்ன? விரிவான அலசல்!

சமதள நிலத்திற்கு தென்னை மரத்தின் மூட்டில் 1.8 மீட்டர் ஆழத்தில் வட்டப்பாத்தி ஏற்படுத்தி வாய்க்கால் மூலம் தண்ணீர் விடலாம். தென்னைமரங்களுக்கு இடையே வாய்கால் ஏற்படுத்தி ஒவ்வொரு தென்னை மரத்தின் மூட்டிலும் தனித்தனியாக தண்ணீர் கட்டும்படி விடவேண்டும். இதனால் ஒரு தென்னை மரத்திற்கு இட்ட உரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைத் தடுக்கலாம்.

விவசாயிகளுக்கு நீர் மேலான்மை பயிற்சி
விவசாயிகளுக்கு நீர் மேலான்மை பயிற்சி

சரிவான நிலப்பகுதிகள், சமதள மணற்பாங்கான இடங்களுக்குச் சொட்டுநீர் பாசனம் சிறந்தது. சொட்டுநீருடன் உரங்களைக் கலந்து வேரில் பாய்ச்சுவதன் மூலம் உரம் வீணாவதையும், களைகள் ஏற்படுவதையும் தடுக்கலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் 30 சதவீதம் தண்ணீரைச் சேமிக்கலாம்.

அதுபோல செறிவூட்டப்பட்ட நார்க்கழிவுகள் மண்ணின் ஈரப் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. அதுபோல கூரஞ்சி மற்றும் பாளைகள் கடினத்தன்மை மிக்கதாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு நீண்ட நாட்களுக்குக் கிடைக்கின்றது. இவற்றை தென்னை மரத்தைச் சுற்றி மூன்று சென்டிமீட்டர் உயரத்துக்கு அடுக்கி மண்போட்டு மூடிவிடலாம். அல்லது மூடாமலும் விட்டுவிடலாம். இதற்காக ஒரு தென்னைக்கு கூரஞ்சி 800 எண்ணிக்கையும், பாளை 300 எண்ணிக்கையும் தேவைப்படும். இதனால் களை கட்டுப்படும், மண்ணில் நீர்ப்பிடிப்பும், தென்னையில் காய்ப்பிடிப்பும் அதிகரிக்கும்.

தென்னை மரத்திற்கு சொட்டுநீர் பாசனம்
தென்னை மரத்திற்கு சொட்டுநீர் பாசனம்

இதுபோன்ற மண் ஈரப் பராமரிப்பு முறைகளால் அதிக செலவு இல்லாமல், தென்னை மரத்தில் எப்போதும் பசுமையான மட்டைகள் இருக்கவும், பாளைகளில் அதிக குரும்பைகள் உதிர்வது குறையவும், ஒல்லி காய்கள் குறைந்து அதிக மகசூல் பெறவும் முடியும். திருப்பதிசாரம் தென்னை வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் ஜல் சக்தி அப்யான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மைக் குறித்த பயிற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டும் பயன்பெற்று வருகின்றனர்” என்றார்.

கருத்துகள் இல்லை: