சனி, 14 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்

 தமிழ் இந்து  :  சென்னை தமிழ்நாட்டின்  வரலாற்றில் வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு குறித்த அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படும். இதில், அரசின் அனைத்து துறைகளின் வரவு- செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வேளாண்மை துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.


அந்த வகையில், தமிழ்நாட்டின்  பொதுநிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில்,தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, முதல்வர் அறிவுறுத்தல்படி விவசாய சங்கங்கள், வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும் வணிகர்கள் சங்கங்கள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக்கேட்டு, அதனடிப்படையில் நிதிநிலை அறிக்கையை இறுதி செய்துள்ளார்.

இதில், வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த அறிவிப்புகள், வேளாண் காப்பீட்டுத்திட்டம், வேளாண் இயந்திர உற்பத்தியை அதிகரித்தல், சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், சிறுதானியங்களுக்கான ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம்,உணவு தானிய உற்பத்தி, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் உள்ளிட்டவற்றுக்கான திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

வேளாண் துறைக்கு கடந்த2011 முதல் 2026 வரை ரூ.23,960.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதன்பின், 2016-21 வரை ரூ.35,588 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2020-21-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.11,982.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சூழலில், பல்வேறு புதிய திட்டங்கள் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: