மின்னம்பலம் :முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தன்னிடம் மூன்றரை கோடி ரூபாய் கமிஷனாக கேட்டதாக பிரபல ஹோட்டலின் பங்குதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து ஆகஸ்ட் 10ஆம் தேதி, காலை முதல் மாலை வரையில் ரெய்டு செய்தனர்.
இந்த ரெய்டுக்கு பின்னால் அமைச்சரின் டெண்டர் முறைகேடுகள்தான் காரணம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்...
ரெய்டுக்கு முன்பே ஹோட்டல் பங்குதாரரும் விஜிலென்ஸிடம் வேலுமணி மீது புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
அவர் யார் என்று விசாரணையில் இறங்கினோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் நெருக்கமாக இருந்த சென்னை வேளச்சேரி சங்கீதா ஹோட்டல் பங்குதாரர் முரளிதான் அந்த ஹோட்டல் அதிபர் என்பதை அறிந்து முரளியிடமே இதுகுறித்துப் பேசினோம்.
அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இருவரும் கொட்டேஷனை கொஞ்சம் குறைத்து போடச் சொன்னார்கள். சரி என்று 350 ரூபாய்க்கு கொடுத்தேன்.
இந்த வகையில் சுமார் ரூ.
19 கோடிக்கு சப்ளை செய்தேன். அதில் 7.2 கோடி கொடுத்துவிட்டார்கள். மீதி 11.8 கோடி வரவேண்டியிருந்தது. அதை ரிலீஸ் செய்வதற்கு மொத்தமாக 3.5 கோடி ரூபாய் கமிஷன் கேட்டார்கள். அதுவும், ‘ உங்கள் பணத்தைக் கொடுக்கவேண்டாம். 11.8 கோடியை 14.8 கோடியாக பில்போட்டு கொடுங்கள். அந்த பணத்தில் 3.5 கோடி கமிஷனாக கொடுங்கள்’ என்று அதற்கு யோசனையும் சொன்னார்கள். நான் கமிஷன் கொடுக்கமாட்டேன் என்றும், அதற்காக சாப்பாடு பில்லை அதிகமாக எழுத மாட்டேன் என்றும் சொல்லிவிட்டேன்”என்றவரிடம்,
“உங்களிடம் நேரடியாக யார் கமிஷன் கேட்டது?” என்று கேள்வி எழுப்பினோம்.
“சென்னை மாநகராட்சி இ.இ முருகன், கமிஷனர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணி மூவரும் தான் என்னிடம் கேட்டார்கள். என்னிடம் இதுகுறித்து மூவருமே பேசினார்கள்” என்று பதில் சொன்னார் முரளி.
தொடர்ந்த அவர், “ஆட்சி மாறியதும் இந்த அரசு 7 கோடி பில் கிளியர் செய்தார்கள். மீதி 4.8 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது. அந்த பில்லை கிளியர் செய்ய இ.இ முருகன் இப்போதும் கமிஷன் கேட்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக இ.இ.முருகன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அமைச்சர் வேலுமணி மூவர் மீதும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே சிபிஐ, பிரதமர், விஜிலென்ஸ் அனைவருக்கும் புகாராக அனுப்பினேன். இந்தப் புகாரையடுத்து விஜிலென்ஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் நேரடியாக என்னிடம் விசாரித்தார். நான் இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் கொடுத்தேன்” என்று கூறினார் முரளி.
“அமைச்சர் வேலுமணியும், நீங்களும் நெருக்கமான நண்பர்கள் என்றும், பண மதிப்பிழப்பு நடந்தபோது சில பரிமாற்றங்கள் உங்கள் மூலமாக நடைபெற்றதாக அப்போதே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டதே... வேலுமணிக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்த நீங்கள் அவர் மீதே புகார் கொடுக்கும் அளவுக்கு சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?”என்று முரளியிடமே கேட்டோம்.
“வேலுமணி மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எனக்கு நண்பர்தான். அதனால் என்ன? அமைச்சர் வேலுமணியைப் பார்த்துச் சொன்னேன்... ‘எனக்கு ஒழுங்கா பணம் கொடுங்கள். என்னோட பணத்தைக் கொடுக்க, நான் எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கமுடியாது. நான் எதற்காக உங்களுக்கு கொடுக்கணும்? நீங்கள் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மீதே கேஸ் ஃபைல் பண்ணுவேன்’ என்று நேரடியாக அவரிடமே சொல்லிவிட்டுதான் புகார் செய்தேன்” என்றார் அழுத்தமாக.
ஹோட்டல் சங்கத்தினர்களிடம் விசாரித்தபோது, “முன்னாள் சி எம், அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆதரவில்தான் முரளியின் சங்கீதா ஹோட்டலுக்கு அதிகமான ஆர்டர் கொடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் முரளி அமைச்சரின் பினாமி என்று சங்கத்தில் கூட அப்போதே பேசினார்கள். ஆனால் வேலுமணி கமிஷன் கேட்டார் என்று போன ஆட்சியிலேயே அவர் புகார் கொடுத்திருக்கிறார். ஒருவேளை பெண்டிங் இருக்கும் பணத்தைக் கொடுப்பதற்காக இப்போதைய நிர்வாகத்தினர் முரளியை கையில் போட்டுக் கொண்டு இந்த புகாரை வெளிப்படையாக்கி வேலுமணிக்கு நெருக்கடியை அதிகரிக்கவும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது” என்கிறார்கள்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக