அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரியாரின் ஆசை
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியாரின் ஆசையாக இந்த திட்டத்தை கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றத்தில் இருந்து இந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை ஆகிய நடவடிக்கைகளுடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் வரலாற்று சாதனையையும் திமுக சாத்தியமாக்கியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக