hindutamil.in : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு நேற்று கூடிய அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு, இடையர்பாளையத்தில் உள்ள அவரது சகோதரர் அன்பரசன் வீடு உள்ளிட்ட கோவையில் 42 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 60 இடங்களில் போலீஸார் நேற்று (ஆக.10) சோதனை நடத்தினர்.
சுகுணாபுரத்தில் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் தகவல் அறிந்தவுடன் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அடுத்தடுத்து அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் ஒரே மக்கள் கூட்டமாகக் காணப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டன.
இந்நிலையில், ''அதிமுகவினர் சட்ட விதிகளை மீறி ஒரே இடத்தில் ஒன்றுகூடி, காவல்துறைக்கும், அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறிவிட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் குனியமுத்தூர் போலீஸார் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், ஜெயராமன், மகேந்திரன், அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், எம்.எஸ்.எம் ஆனந்தன், வி.பி.கந்தசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு வழக்கு
அதேபோல், எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு கூட்டத்தைக் கட்டுப்படுத்த டிவைடர் தடுப்பை வைக்க முயன்றபோது, அதிமுகவினர் அதை எட்டி உதைத்துத் தடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவலர் ரதீஷ்குமார் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், வேணுகோபால், ஜெகதீஷ், கரும்புக்கடை முஜி, ரியாஷ் கான், முத்தாலி, தங்கராஜ், ஹரி, கதிர், சதீஷ், ஜெகன் ஆகியோர் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது வழக்கு
எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த அய்யாகண்ணு, சரவணன் ஆகியோர் மீதும் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக