Suren Chandran : இந்த நிகழ்வு நடந்து இரண்டு வாரங்கள் கடந்தாயிற்று ஆனால் அது என்மீது ஏற்படுத்திய மனரீதியான தாக்கம் இன்றளவும் குறைந்தபாடில்லை.
வெளிநாடுகளில் மருத்துவப்பட்டம் பெற்ற 80 மாணவர்களுக்கு மட்டும் Internship கட்டணம் 5.5 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைத்ததை அடுத்து,
அதை எல்லாருக்குமாக குறைக்கக்கோரி மீண்டும் மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கச் சென்றிருந்தோம்.
வெளிநாடுகளுக்கு MBBS கனவோடு செல்லும் மாணவர்களின்மீதான அவரது புரிதல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
*எல்லாருக்கும் எப்படி குறைக்க முடியும்? அப்பறம் எப்படி அரசாங்கம் நடத்தமுடியும்?
ஒரு கோடி ரெண்டு கோடி செலவு செஞ்சு வெளிநாட்டுல படிச்சுட்டு வறீங்க, இங்க 5.5 லட்சம் கட்டமுடியலேன்னு வந்து சொல்றீங்க* என்று கேட்டார்.
இப்படி பேசியபின் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அமைதியாக மனுவை தந்துவிட்டு வந்துவிட்டேன். நான் செய்தி ஊடகங்களில் பேசிய வீடியோக்களின் கீழ் இப்படியான கமெண்ட்டுகள் தான் குவிந்துக் கிடக்கும்
ஆனால் அதேபோன்ற கேள்விகளை நம் அமைச்சரிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு 5.5 லட்சம் என்பது ரஷ்யாவில் நான் படித்த கல்லூரியில் என்னுடைய 3 வருட Tuition Fee ஆகும். கோடிகளில் பணம் இருந்தால் நாங்கள் ஏன் மைனஸ் டிகிரிகளில் கிடைத்ததை சமைத்து சாப்பிட்டுக்கொண்டு அவதிப்படப்போகிறோம்?
இங்கேயே தனியார் கல்லூரிகளில் சேர்ந்திருப்போமல்லவா ? இங்கே தனியார் கல்லூரிகளில் கேட்கப்பட்ட Donation தொகையை ஒரேமொத்தமாக கட்டமுடியாத நடுத்தர குடும்ப மாணவர்கள்தான் கடன் வாங்கி, சீட்டு போட்டு எப்படியாவது வெளிநாடுகளில் சென்று படித்து முடித்து மீண்டும் தாயகமே வருகிறோம். இப்படி செல்வதற்கான காரணத்தில் Abroad Educational consultancyகளின் ஆசை வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
எப்படியோ எல்லாத்தையும் வைத்து படித்துமுடித்து வந்து இங்கே தகுதித் தேர்விலும் தேர்ச்சியாகி அடுத்தக்கட்டத்திற்கு செல்லப்போகிறோம் என்று நினைக்கையில் எங்களின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இவ்வளவு பெரிய தொகை வந்து நிற்கிறது. தேர்ச்சியடைந்த பின்னும் இவ்வளவு பெரிய தொகை கட்டவேண்டுமென்ற அறிவு பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே நிதர்சனம், மற்றும் இந்த தொகையே கடந்த ஐந்து வருடங்களாகத்தான் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு இப்படி அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் Internshipக்காக மட்டும் வேறு மாநிலங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் தான் மிகவும் அதிகம், யாரும் விரும்பிப்போவதில்லை, அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
உண்மையான நிலை இப்படியிருக்க அமைச்சர் அவர்கள் கூறியது என் நெஞ்சில் நீங்காத வடுவாகிப் போனது. இப்போது தமிழ்நாட்டில் இண்ட்டர்ன்ஷிப் செய்ய பிறரிடம் கையேந்தி நிற்கும் சூழலில் தள்ளப்பட்டிருக்கின்றேன்.
மேலும் இரண்டாவது அலையின்போது தற்காலிகமாக மருத்துவர் பணிகளுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது, ஈரோட்டில் Internshipக்கு விண்ணப்பித்திருந்ததால் எனக்கும் அழைப்பு வந்திருந்தது - நானும் என்னைப்போன்ற நண்பர்களும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்டணத்திற்காக ஓரளவுக்கு சேமித்து வைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
இது கொரோனா எதிர்ப்பு பணியில் எங்களது மூன்றாவது மாதம் இதுவரை ஒரு ரூபாய்க்கூட எங்களுக்கு சம்பளம் போடப்படவில்லை, எப்போது கேட்டாலும் நிதிப் பற்றாக்குறை என்பதே ஒரே பதில். இப்போது மூன்றாவது அலைக்கு வேறு ஆள் எடுப்பதாகத் தகவல்கள் வருகிறது. கொரோனா பணிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பதாக அறிவித்த அரசு இப்படி மாதக்கணக்கில் சம்பளமே போடாமல் மருத்துவர்களை அலைக்கழிப்பது மிகப்பெரிய முரண், அநீதி. (இது எங்களது internship காலக்கட்டத்தில்கூட கழிக்கப்படமாட்டாது)
இந்த கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையே பணையம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் நியாயமான விமர்சனங்களை தமிழ்நாடு அரசு நேர்மறையாக எடுத்துக்கொண்டு விரைவில் பரிசீலித்து அதற்கான தீர்வையும் தருமென்றே நம்பிக் கொள்ள விரும்புகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக