மாலைமலர் : ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
காபூல்: தலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர்.
தூதரை வாபஸ் பெற்றதால் தலிபான்களுக்கு இந்தியா மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளனர். அதே போல இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்து இருக்கிறார்கள்.
இது சம்பந்தமான இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் ஷகாய் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
அதே போல ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.
உலர் பழங்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக பொருட்கள் வருவது வழக்கம். கண்டெய்னர்களில் இவை அனுப்பப்படும். இந்தியாவுக்கு வரும் இந்த பொருட்களின் வாகனத்தை தலிபான்கள் தடுத்து விட்டனர்.
எனவே அங்கிருந்து இனி பொருட்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. மேலும் துபாய் வழியாகவும் இந்தியாவுக்கு பொருட்கள் வந்தன. அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை தடைப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே இவற்றின் விலை மிகவும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுவரை ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மிகுந்த நட்புணர்வை மேற்கொண்டது. ஆனால் இனி அதற்கான வாய்ப்புகள் குறைந்து இருப்பதால் அந்த நாட்டுடன் உள்ள வர்த்தகங்கள் முடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக