Veerakumar - Oneindia Tamil : காபூல்: ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா, கத்தார், ஐக்கிய நாடுகள் சபை, சீனா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, நார்வே, தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஒன்றுகூடி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் முன்னேறுவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் கத்தார் நாட்டின் தலைநகர், தோஹாவில் நடைபெற்றது.
இதில்தான் இந்த முக்கியமான முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.
அமைதி நடவடிக்கை தேவை அமைதி நடவடிக்கை தேவை இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் முன்னேறி வருகிறார்கள். முக்கிய மாகாண தலைநகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். நாட்டின் தலைநகர் காபூலுக்கு 50 கி.மீ. தூரம் வரை அவர்கள் முன்னேறி வந்து விட்டதாக செய்திகள் வெளியாகும் நிலையில், 12 நாடுகள் இவ்வாறு ஒரு முடிவை அறிவித்துள்ளன.
காபூலுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களான ஹெராட் மற்றும் காந்தஹார் ஆகியவற்றை தாலிபான் தீவிரவாதக் குழு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவம் படிப்படியாக தங்கள் நாட்டுக்கு திரும்ப தொடங்கியதும், தாலிபான்களும் பாயத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் "கிடைக்கக்கூடிய விமானங்களைப் பயன்படுத்தி உடனடியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்" என்று அமெரிக்கர்களை வலியுறுத்தியது.
இந்த நிலையில்தான், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் மேலும் கூறுகையில், இது மிகவும் எளிமையான விஷயம். ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எந்த சக்தியும் அங்கீகரிக்கப்படாது, அது சட்டபூர்வமானதாக இருக்காது, சர்வதேச அங்கீகாரத்தை பெறாது என்றார். சர்வதேச சமூகங்கள் இந்த விஷயத்தில் ஒரே குரலில் பேச ஒன்றாக முன் வந்துள்ளன. கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், தீர்மானம் 2513 ஐ நினைவு கூர்ந்தனர், மோதலுக்கு ராணுவம் தீர்வு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர், மேலும் அவர்கள் மறுசீரமைப்பை ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர் என்று பிரைஸ் மேலும் கூறினார்.
இந்தியா பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் பிரிவின், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) இணைச் செயலாளர் ஜேபி சிங், தோஹாவில் நடந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். ஆப்கானிஸ்தானின் நிலைமை கவலைக்குரியது என்றும், அந்த நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான போர்நிறுத்தத்தை தொடர்ந்து நம்புவதாகவும் இந்தியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பிரிவினருடனும், இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், உள்நாட்டு வன்முறை, போர்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் கள நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் கூறினார்.
சமீபத்தில், தாலிபான்கள் குழு ஒன்று சீனா சென்றது. அங்கு வெளியுறவு துறை மட்டத்திலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை யார் எடுத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது தாலிபான் குழு கூறியது. ஆனால் இப்போது, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளோடு சேர்ந்து சீனாவும், தாலிபான்கள் பலவந்தமாக அரசு அமைத்தால் ஏற்க மறுப்போம் எனக் கூறியுள்ளது. இதனிடையே, தாலிபான்களுடன் சமாதானமாக அதிகாரப் பங்கீடு செய்ய ஆப்கன் அரசு விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக