வியாழன், 19 ஆகஸ்ட், 2021

உதயநிதி ஸ்டாலின் முதல் சட்டமன்ற பேச்சு .. முழு விபரம்

 Kuttimani Thala  : சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை ஆற்றினார்.*
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினின் கன்னிப் பேச்சு வருமாறு:
“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப் பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்.
I belong to the Dravidian Stock. நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். இந்தக் குரல் எப்போதோ ஒலித்த குரல் அல்ல. எப்போதும் ஒலிக்கின்ற குரல். இப்போது என்னிடமிருந்து ஒலிக்கின்ற உரிமைக் குரல்.
திராவிடன் என்ற உணர்வை எங்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார். அந்த உணர்வை அரசியல் கொள்கையாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரக்க முழங்கிய பேரறிஞர் அண்ணா. திராவிட இனத்தின்-இயக்கத்தின் தனிப் பெரும் தலைவராக விளங்கி, இந்திய அரசியலுக்கே வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்.
கலைஞரின் தோழராக, அண்ணனாக இருந்து இன உணர்வும், திராவிட இயக்க சிந்தனைகளும் கடைக்கோடி கழக தொண்டர்களை சென்றடைய செய்த பேராசிரியர் தாத்தா அவர்கள். இன்னும் எண்ணற்ற திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்த - காக்கின்ற தொண்டர்களுக்கும் என் வணக்கம்.

தலைவருக்குத் தலைவராய்-தொண்டருக்குத் தொண்டராய்-மக்களில் ஒருவராய், தமிழ்நாட்டை நோக்கி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கும் ‘திராவிட மாடல் ’அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கத்தையும், சட்டமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து, எனக்காக தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு, கழக தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களை சந்தித்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் பொறுமை காத்தார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த போது, அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில் தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விடாமல் கூட கடந்த அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது.
அப்போதிருந்த அந்த அசாதாரண சூழ்நிலையை அருகில் இருந்த பார்த்த லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்.
நம்முடைய கழக தலைவர் அவர்கள் அப்போது ஒரு சிறு கண்ணசைவை காட்டியிருந்தால் கூட அன்று நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும்.
ஆனால், நம் தலைவர் அவர்கள் பொறுப்புமிக்க அரசியல் தலைவராக சட்டப்போராட்டம் நடத்தி, முத்தமிழறிஞரின் கடைசி விருப்பம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிலைநாட்டினார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொறுமையும் – பொறுப்புணர்ச்சியும் - உழைப்புமே அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழைப்பில், அவரின் பொறுப்பிணர்வில் 1% பெற்றுவிட்டால்கூட போதும், நான் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராகிவிடுவேன்.
நம் முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் சரி, ஒட்டுமொத்த மாநிலத்துக்கே ஒரு பிரச்சினை என்றாலும் சரி, அதற்காக குரல் கொடுத்து அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.
உதாரணமாக நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மித்ராவின் அறுவை சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவை என்றதும், அதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லோரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மருத்துவ சிகிச்சைக்கான ஜி.எஸ்.டி தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள்.
அதனடிப்படையில், பலரும் நிதியளித்ததாலும், ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட்டதாலும் தற்போது மித்ராவுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
முத்தமிழறிஞர் காலத்தில் இருந்து, அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா அவருக்கு பிறகு இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணிகளில் என்னுடன் தோளோடு தோள் நிற்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்காக தொகுதியில் பணியாற்றிய தோழமை கட்சியை சேர்ந்தவர்களுக்கும், மாவட்டக் கழக பொறுப்பாளர் சகோதரர் சிற்றரசு, பகுதிக் கழக செயலாளர்களான அண்ணன்கள் காமராஜ், மதன்மோகன், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கெனவே அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி என்னுடைய பணியை எளிமையாக்கி வைத்திருந்த முத்தமிழறிஞர் கலைஞர், பெரியவர் ரகுமான்கான் அவர்கள், மதிப்புக்குரிய ஜெ.அன்பழகன் அண்ணன் உள்ளிட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவில்கொள்கிறேன்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நான் கிட்டத்தட்ட 4 அல்லது 5 நாட்களே பிரச்சாரம் செய்தேன். அப்படியிருந்தும் என் மீது முழு நம்பிக்கை வைத்து 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வைத்த என் தொகுதி மக்களுக்கு நன்றி.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, என் தொகுதியில் எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு தொகுதி மக்கள் காட்டும் அன்பும், பாசமும் அவர்களில் ஒருவனாகவே என்னை மாற்றிவிட்டது. அவர்களுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளையாகவே என்னிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நான் எப்போதும் அவர்களுக்காக உழைப்பேன் என்று இந்த நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன்.
இந்த பேரவையில் இங்கு படமாக நிற்கும் நம் கலைஞர் அவர்கள் வழியில், அவர்களது மறுவுருவமாக நம் முதலமைச்சர் அவர்கள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
கலைஞர் காட்டிய வழியில் தான் நம் கழக தலைவர் அவர்கள் தலைமையிலான அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே எண்ணற்ற சாதனைகளை செய்து முடித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயங்களை கூட செய்துகாட்டியுள்ளார்.
• கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கும் திட்டம்.
• ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
• மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணத்திட்டம்.
• மாற்றுத்திறனாளிகள் – திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டம்.
• உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை கொண்ட பொருளாதார ஆலோசனை குழு.
• மாநில வளர்ச்சிக்குழுவின் துணை தலைவராக பொருளாதார நிபுணர் அண்ணன் ஜெயரஞ்சன் அவர்கள் நியமனம்.
• தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை திட்டம்.
• உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் கண்காணிப்பிலேயே செயல்படுத்தியது.
• கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்தது.
• கொரோனாவால் பலியான மருத்துவத்துறையினர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்.
• அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டது.
• மருத்துவர் - செவிலியர்கள் / தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.
• டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஜுன் 12 அன்று மேட்டூர் அணை திறப்பு.
• கடந்த சில ஆண்டுகளாக அதிமுக அரசே, “ இந்தாண்டு ஜுன் 12 அன்று திறக்க வாய்ப்பில்லை” என கையை விரித்த வரலாறுகள் உள்ளன.
• ஆனால், நம்முடைய கழக அரசு, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணை இந்தாண்டு ஜுன் 12 அன்று உரிய தேதியில் திறக்கப்பட்டது.
• தென் சென்னைக்கென்று தனி உயர் சிறப்பு மருத்துவமனை அறிவிப்பு.
• மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்.
• இலக்கிய மாமணி விருது, தகைசால் தமிழர் விருது அறிவிப்பு.
• தமிழ் எழுத்தாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
• முத்தமிழறிஞர் கலைஞர் வளர்ந்த திருவாரூர் மாவட்டத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு.
• கோவிட் -19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என உத்தரவு.
• தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.
• கடந்த அதிமுக ஆட்சியின் போது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்தாருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை.
• பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.
• விஷன் தமிழ்நாடு திட்டம் மூலம் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு.
• முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் 28,664 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள்.
• முக்கியமாக நாடெங்கும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டலில் சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.

கோவில் சொத்துகள் மீட்பு
• கோவில் சொத்துகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை.
• நம் பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை அறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் சிறப்பு கருத்துக்கேட்பு குழு.
• இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நாட்டிற்கே முன்மாதிரியாக பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.3 ஐ குறைத்தது.
• தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் 58 பயிற்சிபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகள் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.
• இப்படி பல திட்டங்களை இந்த அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே செயல்படுத்தி, மாநிலத்தின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை
• மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில் மாண்புமிகு நிதியமைச்சர் அண்ணன் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்துள்ள முதல் இ-பட்ஜெட் மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்லவுள்ளது.
• நம்முடைய கழக அரசு இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

• இந்த கொரோனா காலத்தில் கற்றல் இழப்பை தவிர்க்கவும், இளம் வயதிலேயே மாணவர்களுக்கு கணினி திறனை அளிக்கவும், 1784 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.114.18 கோடி செலவில் உயர் ஆய்வகங்கள், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதும், நம் மாணவ – மாணவியரின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக அமையும்.
• மேலும், இந்த அரசு தொலைநோக்கு மிக்க அரசு என்பதை உணர்த்துகிற வகையில், 2025-ம் ஆண்டிற்குள், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்ய ரூ.66.70 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படுவது போற்றத்தக்கது.

• மேலும், உயர்கல்வியை பொறுத்தவரையில், இந்தாண்டு 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதை ஏதோ பெயரளவுக்கு செய்கிறோம் என்றில்லாமல், அவற்றின் தரத்தை உறுதிய செய்ய தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவின் தரநிலையை எட்டுவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பது இந்த அரசு எதையும் வெறும் எண்களாக மட்டும் செய்கிற அரசல்ல என்பதை உணர்த்துகிறது.
• இந்த கொரோனா காலத்தில் இணை நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு செல்வது என்பதே ஒரு சவாலாக உள்ளது. இதை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டே சுட்டிக்காட்டினார்கள்.
• இந்த சூழலில், அனைத்து மக்களையும் மனதில் வைத்து மக்களைத்தேடி மருத்துவம் எனும் திட்டம் ரூ.257.16 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
• இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் – செவிலியர்கள் வீட்டுக்கே சென்று மருத்துவம் அளிப்பதன் மூலம், தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு இன்னும் வலுவாகி மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழும்.

• விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் சேவையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடுதலாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு, மக்கள் நலன் மீது கழக அரசு கொண்டுள்ள அக்கறைக்கு சாட்சியாகும்.
• இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.
• இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய திறன் பயிற்சி என்பது அவசியமானது என்பதன் அடிப்படையில் கழக அரசு ரூ.60 கோடி செலவில் 15 அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் திறன் மேம்பாட்டு மையங்களை அமைக்கவுள்ளது வரவேற்கத்தக்கது.
• கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கே பெருநிறுவனங்கள் அஞ்சின. ஏனென்றால் அந்தளவுக்கு லஞ்சமும், கமிஷனும் தலை விரித்தாடியது. இங்கு லஞ்சம் கொடுத்த காரணத்தால் ஒரு பெரு நிறுவனம் அமெரிக்காவில் அபராதம் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் இருந்தன.
• ஆனால், நமது அரசு முறைகேடுகள் ஏதுமின்றி புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஒற்றைச்சாளர முறையை பின்பற்றவுள்ளது.

• முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் 2000-மாவது ஆண்டில் டைடல் பூங்கா அமைத்தார்.
• இந்நிலையில் நம்முடைய அரசு, நிலை – I மற்றும் நிலை – II ஆகிய நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்ளை அமைக்கவுள்ளது.
• இதன் மூலம் கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் அவரவர்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்களில் வேலைவாய்ப்பை பெறுகிற வாய்ப்பை பெறுவர். மேலும், வேலைவாய்ப்பு என்பது ஒற்றை நகரத்தில் குவியாமல் மாநிலமெங்கும் பரவலாக்கம் செய்யப்படும் என்பது வரவேற்க்கத்தக்கது.
• கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரை மேம்படுத்தவென எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. இந்த சூழலில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேயராக இருந்த போது அறிமுகப்படுத்திய சிங்காரச்சென்னை திட்டம், சிங்காரச்சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, சென்னையை எழில்மிகு மாநகராக்கும்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கை

• மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே. இதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.
• அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அறிவிப்பும், திட்டமும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக வேளாண் பெருங்குடி மக்களும், விவசாய இயக்கத்தவரும் நம் கழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
• விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சிறப்பான திட்டம். இந்நிலையில் அந்த திட்டம் இன்னும் ஆற்றலுடன் தொடர ஏதுவாக வேளாண் பட்ஜெட்டில் ரூ.4,508.2 கோடி செலவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
• கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வண்ணம் கழக அரசு கரும்பு கொள்முதல் விலை ரூ.2900 ஆக உயர்த்தி வழங்கவுள்ளது.

• பனை என்பது நம் பண்பாட்டில் பிரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் பனை தொழிலை ஊக்குவிக்க ஏதுவாக, பனை வெல்லத்தை அரசு நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். மேலும், பனை மரங்களை பாதுகாக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்பது பனை சார்ந்த தொழில்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
• காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் இன்றைய சூழலில், மண்ணோடு இயைந்த இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும், அதற்காக நம்மாழ்வார் பெயரில் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தை தொடங்கவுள்ளதை வரவேற்கிறேன்.
• அதேபோல நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்ற வேண்டிய தேவையும் இந்த சூழலில் உள்ளதை நம்முடைய கழக தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. அதன்பேரில் தான், தன் வாழ்நாளை பாரம்பரிய நெல் விதைகளை பெருக்கவும் அவற்றை பாதுகாக்கவும் அர்ப்பணித்த மறைந்த திரு. நெல் ஜெயராமன் அவர்கள் பெயரில் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்கும் இயக்கம் தொடங்கப்படவுள்ளது.

• இப்படி விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கவும், இளைஞர்களும், அடுத்த தலைமுறையினரும் விவசாயைத்தை நோக்கி வரவும் தேவையான அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… நான் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது என்னிடம் சொல்லப்பட்ட முக்கியமான விஷயம், ”தி.மு.கழக ஆட்சியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு முறையாக வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை அதிமுக ஆட்சியில் பலருக்கு நீக்கப்பட்டுள்ளது” என்பது தான்.
வீடிருந்தும் வருவாயின்றி, பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ – மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பெயரை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

தங்கை அனிதா, செஞ்சி பிரதீபா, ஏஞ்சலினா ஸ்ருதி, திருச்சி சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ், கோவை சுபஸ்ரீ, திருச்செங்கோடு மோதிலால், தர்மபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, தேனி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி, விழுப்புரம் மோனிஷா என 14 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி உயிரிழந்த தங்கை அனிதா, ஆதித்யா, விக்னேஷ், மோதிலால், ஜோதிஸ்ரீ துர்கா ஆகியோர் வீடுகளுக்கே நான் நேரில் சென்று அந்த மாணவர்- மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னேன்.
பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சொன்ன ஒரே வார்த்தை நீட் வேண்டாம் என்பது தான்.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி காலம் வரை வராத நீட் – அம்மையார் ஜெயலலிதா ஆட்சியின் போதும் வராத நீட் தேர்வு, கடந்த ஆட்சியில்தான் திணிக்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே நம்முடைய கழக தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் – நம் கழக தலைவர் அவர்கள் அறிவுரைப்படி கழக இளைஞரணி சார்பில் நானும், மாணவரணி சார்பில் அதன் செயலாளர் அண்ணன் சி.வி.எம்.பி எழிலரசன் அவர்களும் போராட்டங்களை முன்னின்று நடத்தினோம்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் நீட் வேண்டாம் என்பது தான்.
மக்களின் இந்த உணர்வை பிரதிபலிக்கும் விதமாகத்தான் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம் கழக தலைவர் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார்கள்.
தற்போது இதை மையப்படுத்தி, ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகிவிட்டனவே, உங்கள் வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?
எதிர்க்கட்சிகள் மட்டுமில்லை, பத்திரிகைக்களும் - ஊடகங்களும் அத்தகைய கேள்வியை எழுப்புகின்றன.
இதற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். கடந்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.

கடந்த ஆட்சிக்காலத்தின் நிர்வாக சீர்கேட்டால் அரசு என்ற ஒன்று இயங்குகிறதா இல்லையா என்றே தெரியாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் போராட வலுவற்று சோர்வடைந்து இருந்தனர்.
ஒட்டுமொத்த மாநிலமே மந்த நிலையிலேயே இருந்தது. இதை பயன்படுத்தி கடந்த ஆட்சியாளர்கள் இன்னும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர்.
ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீட் ஒழிப்பின் முதல்படியாக மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் கருத்துக்கேட்பு குழு ஒன்றை நியமித்து, அந்த குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.
இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும் போதே, நீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன.

நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது.
நீட்டால் நம் தி.மு.கழகத்துக்காரர் வீட்டு பிள்ளைகள் மட்டுமில்லை, அதிமுக, பாமக, காங்கிரஸ், வி.சி.க ஏன் பாஜகவினர் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.
கட்சி சாராத நடுநிலையாளர்களின் வீட்டு பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று உங்கள் வாயிலாக அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது போல மகளிருக்கு இலவச பேருந்து பயணம், - அதனை மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் பெயரை சொல்லித்தான் – அதாவது கலைஞர் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய போது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதே போல நம் முதலமைச்சர் அவர்கள் இலவச பேருந்து பயணம் அறிவித்த பிறகு நகர பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர்.
• ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
• பெட்ரோல் விலையை குறைத்தது உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பேசாதவர்கள் நீட்டை மட்டும் குறி வைப்பது ஏன்?

• நீட் தேர்வு தவறானது என்பதை உணர்ந்துள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் அவற்றின் உரிமையாளர்களும் நீட்டுக்கு எதிரான தங்களின் குரலை பதிவு செய்ய வேண்டும்.
• மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதனை எனது அரசு என்று சொல்லவில்லை. மாறாக நமது அரசு சொல்லியுள்ளார்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ஒழிக்க குரல் கொடுப்போம் என்று மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
நீட் போராட்ட வழக்குகள் வாபஸ்
• இந்த நேரத்தில் நான் உங்களின் வாயிலாக முதலமைச்சர் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
• முதலாவது கோரிக்கை : நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட.
• இக்கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தருவார்கள் என நம்புகிறேன்.
• இரண்டாவது கோரிக்கை:

• நம்முடைய அரசு அமைந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த அதிமுக அரசு போட்டிருந்த அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
• அதேபோல, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாஜக-அதிமுக
• மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த அதிமுக அரசு ஒருபுறம் மாநிலத்தை சீரழித்தது என்றால், இன்னொருபுறம் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டை வஞ்சித்தது.
• 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜக அசுர பலத்துடன் அதாவது மிகப்பெரிய பெரும்பாண்மையுடன் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது.
• அப்படியென்றால் அந்த அரசு எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?
• ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் நம் அனைவரின் பதிலும்.
• பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை – எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது. இன்றுவரை அது சரியாகவில்லை.

• ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூ.15,475 கோடி அளவு ஜி.எஸ்.டி பாக்கி ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது.
• இது இப்படி என்றால், மாநிலத்துக்கு பல ஆண்டுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை AIIMS ஒற்றை செங்கல் நட்டு வைத்ததோடு அப்படியே உள்ளது. இதனை பிரச்சாரத்தின் போது நான் சுட்டிக்காட்டி பேசினேன்.
• இந்த பிரச்சினை தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. அதனால் தான் திருச்சியில் உள்ள செங்கல் சூளை ஒன்றிற்கு AIIMS BRICKS என பெயர் சூட்டியுள்ளனர்.
• AIIMS பிரச்சினை இங்கு மட்டுமில்லை. நாடு முழுவதும் இருக்கிறது என்பதற்கு பிகார் பிரச்சினையே சான்று.
• நான் எப்படி பிரச்சாரத்தின் போது AIIMS மதுரைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்ட ஒற்றை செங்கலை காட்டினேனோ, அதேபோல, பிகாரிலும் அங்கு அறிவிக்கப்பட்ட AIIMS-ஐ கட்டக்கோரி செங்கலை காட்டி பிகார் பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
கொரோனா

• கொரோனாவை அறிவியல்பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், கைதட்டுங்கள், மணி அடியுங்கள், விளக்கேற்றுங்கள் என மூட நம்பிக்கை வழியே அணுகியதன் காரணத்தால் தான் கொரோனா பேரழிவு ஏற்பட்டது.
• ஒன்றிய அரசு எதை சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றும் அதிமுகவினர், மணி அடித்து, விளக்கு ஏற்றி, கைதட்டியதன் விளைவே தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வராமல் போனதற்கு காரணமாக அமைந்தது.
தனியார்மயம்
• இதுமட்டுமல்லாமல், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் தொடர்கிறது.
• விமான நிலையம், ரயில்வே, பெட்ரோலியம்.. ஏன் ராணுவத்தில் கூட தனியார் முதலீடுகளும் தனியார்மயமும் தொடர்கின்றன.
• விமானம் நிலையம், ரயில் சேவையெல்லாம் தனியார் வசம் உள்ளது போல் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நகைச்சுவையை இன்று நம் கண் முன்னே ஒன்றிய அரசு நடத்திக்காட்டுகிறது.
• மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு செயல்பட்டதால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.
மருத்துவர் மரணம்

• குறிப்பாக கொரோனா நேரத்தில் மருத்துவர்களின் மரணத்தை கூட கடந்த அதிமுக அரசு மறைத்தது.
• எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கொரோனா நோயால் மறைந்தார்கள் என்று கடந்த 03-08-2020 அன்று கூறியிருந்தேன்.
• ஆனால், அதை ஏற்காத அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், நான் வதந்தி பரப்புவதாகவும், என் மீது வழக்கு தொடருவேன் என்று கூறினார்.
• ஆனால், கடைசி வரை வழக்கு தொடரவேயில்லை. மேலும், நான் சொன்ன தகவல் உண்மை என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பும் அறிவித்தது.
• அதற்கு பிறகு அப்போதைய அமைச்சர் அமைதியாகிவிட்டார்.
• கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை தவிர்ப்பதற்காகவே அப்போதைய அரசு அப்படி செய்ததாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர்.
• ஆனால், தற்போது அமைந்துள்ள கழக ஆட்சியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கொரோனாவால் பலியான மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
• அதுமட்டுமில்லாமல், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற விதமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகிற அறைக்கே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் PPE Kit அணிந்து சென்றார்கள்.
• குளறுபடிகளால் மாநிலத்தின் நிதி நிலை எந்த அளவில் சீர்குலைந்து உள்ளது என்பதை மாண்புமிகு நிதியமைச்சர் அண்ணன் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தெளிவாக எடுத்துக்கூறியிருந்தது.
• ஒன்றிய அரசின் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. அவர்கள் நல்லது செய்தால் ஏற்கவும் பாராட்டவும் தயாராகவுள்ளோம்.

• ஆனால், தவறிழைக்கும் பட்சத்தில் முன்பைவிட இன்னும் வேகமாக அதனை சுட்டிக்காட்டுவோம் விமர்சிப்போம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
• மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களை கண்ணியமாகத்தான் நடந்துகொள்ள சொல்லியிருக்கிறார்களே தவிர அடிமையாக இருக்க சொல்லவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
கொரோனா 3ம் அலை
• மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கொரோனா 2-வது அலையை கடந்து விட்டோம். மூன்றாவது அலை எழுமா என்ற கேள்வியுள்ளது.
தடுப்பூசி
• தமிழ்நாடு முழுவதும் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 2 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரத்து 337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
• சென்னை மாநகராட்சில் மொத்தம் 44 லட்சத்து 51 ஆயிரத்து 728 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் டோஸ் 85,108-ம், 2வது டோஸ் 32,394-ம் என மொத்தம் 1,17,502 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

• இப்படி ஒன்றிய அரசிடம் போராடி தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு தடுப்பூசியிடும் பணிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகின்றன.
• இன்னொரு அலை நிச்சயம் வரக்கூடாது. அப்படி வந்தாலும் தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியிட்டுக்கொள்ள வேண்டும்.
• முக்கியமாக முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி சோப்பின் மூலம் கையை சுத்தப்படுத்துதல் போன்ற அரசு காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
• அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு மூன்றாவது அலையை தடுப்போம்.
தொகுதியின் கோரிக்கைகள்
• மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே.. கடந்த 100 நாட்களாக எனது தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம்.
• தொகுதி மக்களின் கருத்துக்களை அறிந்தோம். அதனடிப்படையில் தொகுதியில் உள்ள பிரதான கோரிக்கைகள் ஒரு சிலவற்றை இங்கே இந்த மாமன்றத்தின் முன் வைக்கிறேன்.
• எனது தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய நான்கு குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகள் பழமையானதாகிவிட்ட காரணத்தால், அவற்றிற்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

• அக்கோரிக்கைகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம்.
• தற்போது, நான்கு இடங்களிலும் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
• இந்த நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த பணிகளை ஒருங்கிணைக்கும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
• மேலும், இந்த நான்கு குடிசைமாற்று குடியிருப்பு வீடுகளுக்கும் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என்றும் மேலும், நம்முடைய இந்த நான்கு தலைவர்களின் பொதுவாழ்வை விளக்கும் வண்ணம் அந்த குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உங்கள் வாயிலாக மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

• தொகுதியில் மாட்டாங்குப்பம் பகுதியில் சில மின்மீட்டர்களில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பை பெற்று அதிக மின்சார கட்டணம் செலுத்தி வந்தனர்.
• கழக அரசு அமைந்த பிறகு, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு எடுத்து சென்று, மேற்சொன்ன வீடுகளுக்கு தனித்தனி மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
• இந்த நேரத்தில் நம் தொகுதி மக்களின் சார்பில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
• எங்கள் தொகுதியில் அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பெண்களுக்காக, பெண்களே இயக்கும் பிரத்யேக கூட்டுறவு கடன் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் வாயிலாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன். ஐ.பெரியசாமி அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
• ஆசியாவிலேயே மிக நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி எனது தொகுதியில் உள்ளது.
• சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தி மேலும் அழகுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
• எங்கள் தொகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சென்னை பள்ளிகள், அரசு பள்ளிகள் பல உள்ளன. அவற்றில் பல பள்ளிகளின் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன.
• அவற்றை சீரமைத்து தருமாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
• என் தொகுதியிலுள்ள கழிவு நீர் குழாய்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டவை.
• அதனால் அடிக்கடி, கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றை மாற்றித்தருமாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
• இவை தவிர மேலும் பல கோரிக்கைகளை மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கிறேன். அவற்றையும் நான் பேசியதாகக் கருதி அவைக்குறிப்பில் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

• ஓர் எளியவனாக இந்தக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன். இவை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.
• இப்படித்தான், காட்சிக்கு எளியவரான ஒருவர், என் வயதிலும் இளையவராக ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பேரவையில் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது வெறும் பேச்சல்ல. விவசாயிகளுக்கான உரிமைக் குரல்.
• திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்து, திருவாரூர் எனும் சிறு நகரத்தில் வளர்ந்து,
• திராவிடமே தனது இயக்கமாகவும், தமிழே தனது மூச்சாகவும் கொண்டு, இளம் வயதிலேயே பொதுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டு, மொழி காக்க சிறை சென்று,
• கலை-இலக்கியம்-நாடகம்-திரைப்படம் என அனைத்திலும் தனித்துவமான தமிழால் திராவிடக் கொள்கையை எடுத்துரைத்து,
• மக்களின் பேராதரவுடன் 1957ஆம் ஆண்டு குளித்தலைத் தொகுதியில் முதன்முறையாக இந்தப் பேரவைக்குள் வந்த அந்த எளிய மனிதர், முத்தமிழறிஞர் கலைஞர்.
• 13 முறை தேர்தல் களத்தில் தோல்வியே காணாத வீரராக-சட்டமன்றத்தை 60 ஆண்டுகள் அலங்கரித்து சாதனை படைத்தவர்.
• 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அதிக காலம் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை வழங்கியவர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர்.

• அவரை இந்திய அரசியல் திரும்பிப் பார்த்தது. டெல்லி, அவர் சொல் கேட்டது.
• 13 வயதில் தமிழ்க்கொடியை கையில் ஏந்திய அவரது கைகள், இந்திய சுதந்திரத்தின் 25 ஆம் ஆண்டு விழாவின்போது, தேசியக் கொடியை கோட்டைக் கொத்தளத்தில் ஏற்றியது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவரும் அவர்தான்.
• இந்திய சுதந்திரத்தின் 50ஆம் ஆண்டுவிழாவிலும் முதல்வராக அவர்தான் கோட்டையில் கொடியேற்றினார்.
• முத்தமிழறிஞர் கலைஞர் எனும் மகத்தான அந்தத் தலைவர் பெற்றுத் தந்த உரிமையை, இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் கொடியேற்றி நிலைநாட்டினார், நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
• கழக தலைவரின் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தந்த வெகுமதிதான் முதலமைச்சர் எனும் பெரும் பொறுப்பு.
• இந்திய ஒன்றியத்திலேயே முதல்வர்களில் முதல்வர் என்ற பாராட்டு அவரது ஓயாத உழைப்புக்கு கிடைத்துள்ள தனிச் சிறப்பு.
• நான், முத்தமிழறிஞர் கலைஞரின் மடியில் தவழ்ந்தவன், மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழியில் நடப்பவன்.

• என் தொகுதி மக்களின் உரிமைக் குரலாய் ஒலிப்பேன்.
• தமிழ்நாடு அனைத்து துறையிலும் சிறந்து விளங்கிட அயராது பாடுபடும் நம் முதல்வருக்குத் துணை நின்று உழைப்பேன் என்று உங்கள் வாயிலாக உறுதியளிக்கிறேன். நன்றி, வணக்கம்."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை: