வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

ஆப்கன் விவகாரத்தில் அதிக பாதிப்பு இந்தியாவுக்கே!

ஆப்கன் விவகாரத்தில் அதிக பாதிப்பு இந்தியாவுக்கே!

மின்னம்பலம் : தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருபது வருடங்களுக்குப் பின்னால் இப்போது கொண்டுவந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி க்ளைமாக்ஸாக அவர்கள் அந்நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றி அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
இப்போது வரை தாலிபான்களின் தலைமையில் அரசாங்கம் முறைப்படி அமையவில்லை என்றாலும், ‘முழுமையான இஸ்லாமிய அரசாக ஆப்கான் இருக்கும். ஷரியத் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்’ என்று தாலிபான் அறிவித்துள்ளது.
பொதுப் பார்வையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா சூடுபட்டு பின்வாங்கியுள்ளது என்றும்,வியட்நாமுக்கு அடுத்து ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது என்றும் விமர்சனங்கள் மேலெழுகின்றன. ஆனால், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய விவகாரத்தில் அமெரிக்காவை விட அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியாதான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள்.

அமெரிக்க அரசியல் அறிவியல் பேராசிரியரும், தெற்காசிய அரசியல் விவகாரத்துறை நிபுணருமான பெண்மணி கிறிஸ்டின் ஃபேர் இதுகுறித்து, ‘மனிகன்ட்ரோல்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தாலிபான்கள் தலைமையேற்றதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் உள்ள எட்மண்ட் வால்ஷ் வெளிவிவகார அகாடமியில் பாதுகாப்புத் துறை பிரிவில் இணைப் பேராசிரியராகவும் இருக்கிறார் கிறிஸ்டியன் ஃபேர்.

“தாலிபான்களால் இப்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சூழலில் உலக நாடுகளிலேயே சிறப்பாக செயல்பட்டிருப்பது இந்தியாதான். மேற்கு நாடுகள் கூட செய்யத் தவறிய விஷயங்களை சிறப்பாக செய்து தங்கள் குடிமக்களை கவனமாக காப்பாற்றியிருக்கிறது இந்தியா.

அதேநேரம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் மோசமாக பாதிக்கப்படப் போவது இந்தியாதான். அதேநேரம் இந்த ஆளுகை மாற்றத்தால் அதிகபட்ச சாதகம் பெறுபவர்கள் சீனாவும், ரஷ்யாவும், பாகிஸ்தானுமாக இருப்பார்கள். சீனாவை பொறுத்தவரை தனது பெல்ட் அண்ட் ரோடு இன்ஷியேட்டிவ் என்ற சாலை உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு ஆப்கானிஸ்தான் பெரும் தேவையாக இருப்பதால் ஆப்கானிஸ்தானை தன் கையில் வைத்துக் கொள்ள முயல்கிறது.

தாலிபான்களின் இந்த எழுச்சிக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் பெரும் சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தானின் உளவுத்துறை உதவிகளும், ராணுவ உதவிகளும் இல்லாமல் தாலிபான்கள் வலிமையான போராட்ட சக்தியாக உருவெடுக்க வாய்ப்பு குறைவே. எனவே தாலிபானின் இந்த மீளெழுச்சி பாகிஸ்தானுக்கும், சீனாவுக்குமே அதிக சாதகம் பயக்கும்.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் எண்ணற்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, பயிற்சி அளிப்பது போன்ற செயல்பாடுகளை பாகிஸ்தான் செய்து வந்திருக்கிறது. ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹஃபீஸ் சயீத் போன்றவர்களை நாயகர்களாக சித்திரித்து வந்திருக்கிறது பாகிஸ்தான்.

முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானின் பாதுகாவலராக செயல்பட வைத்தது அமெரிக்கா. இப்போதும் அதே தவறை மீண்டும் செய்திருக்கிறது. தாலிபான்களின் அரசை உருவாக்கியதே பாகிஸ்தான் தான். அதை அங்கீகரிக்க சீனாவும், ரஷ்யாவும் தயாராகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நிலப்பரப்புகளும், அரசுகளும் இந்தியாவுக்கு எதிரான சக்தியாகவே ஒருங்கிணைகின்றன. இதனால் இந்த விவகாரத்தில் மிக மோசமான பாதிப்பு இந்தியாவை எதிர்கொண்டிருக்கிறது” என்கிறார் கிறிஸ்டியன் ஃபேர்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: