வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட முறைகேடு பன்னீர்செல்வம் சிறை செல்வாரா? கிரிமினல் வழக்கு தொடரவேண்டும்: திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் !

மின்னம்பலம் : புளியந்தோப்பு கட்டட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் திமுக எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள கே.பி பார்க் பன்னடுக்கு கட்டிடம் தரமற்று இருப்பதாக அங்குக் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டிடத்தில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் விழுவதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த கட்டிடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் பணத்தில் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.


இந்த சூழலில் நேற்று கட்டிடத்திற்கு நேரில் சென்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, தொட்டா சிணுங்கி செடி தெரியும், ஆனால் தொட்டாலே உதிரும் சிமெண்ட்டை கண்டுபிடித்தவர்கள் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் தான் என்று விமர்சித்தார்.

மேலும் அந்த கட்டிடத்தை கட்டியது யார் என்று கண்டுபிடித்துக் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் எங்கெல்லாம் கட்டடம் கட்டி உள்ளார்களோ அங்கெல்லாம் கட்டடங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர் , தரமற்ற கட்டடங்களைக் கட்டிய துறைக்கு அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். அதோடு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அனைத்துக் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதில் அளித்து பேசிய குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தவறு செய்தது அதிகாரியாக இருந்தாலும், ஒப்பந்ததாரர்களாக இருந்தாலும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: