ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

ஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணராத மக்கள் மீது கோபம் வருகிறது

May be an image of 1 person, beard and standing

ஜேம்ஸ் வசந்தன் : விடை கிடைக்காமல் என்னைத் திகைக்க வைக்கிற ஒரு சமீபத்திய சமூக-அரசியல் விஷயம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழ்மொழி கற்றவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு வேலை என்கிற இயல்பான,
காலங்காலமாய் தொடர்ந்து வந்த நம் உரிமையைம்
-கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல், மனசாட்சி இல்லாமல், நம் மண்ணின் மக்கள் என்கிற நேசம் கூட இல்லாமல்,
துரோகம் செய்கிறோமே, என் சுயநலத்துக்காக இந்த மாநிலத்தின் அடிப்படை நலனையே அழிக்கிறேனே, பல கோடி இளைஞர்களின் எதிர்காலத்தையே நாசமாக்குகிறேனே,
என்கிற குற்ற உணர்வு கூட இல்லாமல், அந்த சட்டத்தையே மாற்றி "தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை" என்று அரசாணை தயாரித்து அதில் கையெழுத்து இட்ட OPS மேல் வருகிற கோபத்தை விட -
தங்களைச் சுற்றிலும் இருக்கிற தமிழ் சொந்தங்களின் உரிமையை, வாழ்க்கை ஆதாரத்தை, வருமான உத்திரவாதத்தை அழித்த இவர்களுக்கு ஓட்டுபோடத் தயாராக இருக்கிற தமிழர்கள் மேல்தான் அதிக கோபம் வருகிறது!


நானோ, என் பிள்ளைகளோ, என் குடும்பத்தைச் சார்ந்த யாருமோ அரசாங்க வேலையை எதிர்பார்க்கவுமில்லை,
இந்தப் புதிய அரசாணை என் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதுமில்லை.
ஆனால், பலகோடி ஏழைகளின், இளைஞர்களின், நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகள் தகர்ந்துப் போகிறதே என்று நினைக்கும்போது என் மனம் நொறுங்குகிறது.
அரசு வேலைக்கு ஏங்கும் வாழ்க்கைத் தரத்தில் வாழ்கிற சக தமிழர்களுக்கு ஏன் இந்த உணர்வு  இல்லை என்று என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை!  - ஜேம்ஸ் வசந்தன்

கருத்துகள் இல்லை: