ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ரூ.10 கோடி ! அதில் 7 கோடியை மிரட்டி பறித்த ரவுடிகள்!

அமைச்சர் வீட்டிலிருந்து போனது ரூ.10 கோடி: 7 கோடியை மிரட்டி பறித்த ரவுடிகள்!
மின்னம்பலம் :திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் முசிறி எம்எல்ஏ மகன் காரில்  பணம்
பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்  திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த  மார்ச் 23ஆம் தேதி இரவு,  திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை
பகுதியில் 2 காரில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக அவ்வழியே
சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும்
படையினரைப் பார்த்ததும், ஒரு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்று
விட்டதாகவும், காரில் இருந்தவர்கள், ஒரு மூட்டையை வெளியே வீச முயன்றதாகவும்
 அதிகாரிகள் அதை சோதனையிட்டபோது அதில், 500 ரூபாய் கட்டுகளாக ஒரு கோடி  ரூபாய் இருந்ததாகவும்,  காரில் இருந்து 2 கோடி ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு நின்றிருந்த கார், முசிறி எம்.எல்.ஏ செல்வராஜின் மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்று தெரியவந்திருக்கிறது. அதில், முசிறியைச் சேர்ந்த, அதிமுக பிரமுகர்கள் ரவிச்சந்திரன் (55), சத்தியராஜா(43), எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ஜெயசீலன்(46), ஓட்டுநர் சிவகுமார் (36) ஆகியோர் இருந்தனர்.

பிடிபட்ட போது, அந்த பணம் தங்களுடையது இல்லை என்று காரில் இருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அந்த பணம் மாவட்ட கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை உயரதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என, ஆட்சியராக இருந்த சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டனர்.

தற்போது மயில்வாகனன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கில் திருப்பங்களும், பல்வேறு தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து இந்த பணம் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அப்போது அமைச்சர் வீட்டில் ரவுடி சாமிரவி இருந்திருக்கிறார். இவர் அதிமுகவின் மீனவரணி மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். இந்த பணம் வெளியே வந்ததும், தனது கும்பலுக்கு தகவல் கொடுத்திருக்கிறார் சாமிரவி. காரில் பணம் எடுத்து வரப்படுவதை தெரிந்துகொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் வழிமறித்து, காரில் இருந்தவர்களை மிரட்டியிருக்கின்றனர்.

இரு தரப்பும் போராடிக் கொண்டிருக்கும் போது, அவ்வழியை கடந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் போலீஸ் வருவதற்குள் காரில் இருந்த 10 கோடி ரூபாயில், 7 கோடியைப் பிடுங்கிச் சென்றிருக்கின்றனர். 1 கோடி ரூபாய் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. 2 கோடி ரூபாய் காரில் இருந்து போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். கைதானவர்கள் சாமிரவியிடம் தான் பணம் இருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் சாமி ரவியை போலீசார் தேடி வருகின்றனர். அதுபோன்று, காரில் வந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஓட்டுக்கு 500 வீதம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தொகுதிக்கு 10 கோடி ரூபாய் கட்சித் தலைமை அனுப்பியிருக்கிறது. அந்த 10 கோடி ரூபாயை கொண்டு சென்றதில் தான் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்கிறது.

-பிரியா

கருத்துகள் இல்லை: