சனி, 10 ஏப்ரல், 2021

சைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கிற்கு பணம் கொடுக்கவிலை! அதிசயம் ஆனால் உண்மை! வாழ்த்துக்கள்

சைதையில் நடந்த அதிசயம் என்ன?
minnambalam : நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுதும் பல தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியும், எதிர்க்கட்சியான திமுக கூட்டணியும் வாக்காளர்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுத்திருக்கின்றன.

அதிமுக சார்பில் குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் ஓட்டுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று அமர்க்களப்பட்டிருக்கிறது. சற்றும் சளைக்காமல் திமுகவினர் 200 ரூபாயில் ஆரம்பித்து 700 ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று வாக்குக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஏப்ரல் 4,5 தேதிகளில் இந்த பணப் பட்டுவாடா சம்பவங்கள் தமிழகம் முழுக்க நடந்திருக்கின்றன.    குறிப்பாக மாநகரமான சென்னையிலும் பல தொகுதிகளில் பணப் பட்டுவாடா தடபுடலாகவே நடந்திருக்கிறது. சென்னையின் அடித்தட்டு மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் இந்த பண விநியோகம் அடர்த்தியாகவும் அதிகமாகவும் நடந்திருக்கிறது.

அதேநேரம்... ஆச்சரியம் ஆனால் உண்மை என்ற வகையில் சென்னையின் முக்கியமான ஒரு தொகுதியான சைதாப்பேட்டையில் திமுக, அதிமுக என இரு தரப்பும் வாக்காளர்களுக்கு பணம் வழங்காமலேயே தேர்தலை சந்தித்திருக்கின்றன என்கிறார்கள் அத்தொகுதி வாக்காளர்களும், சமூக ஆர்வலர்களும்.

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியும், திமுக சார்பில் சென்னை மாநகர முன்னாள் மேயரும் தற்போதைய சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியனும் தேர்தலில் மோதினார்கள். இருவருமே ஏற்கனவே சென்னை மாநகர மேயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் இருவரும் மாநகரம் முழுதும் அறிமுகமானவர்கள். அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதிக்கு இருவருமே நல்ல பரிச்சயமானவர்கள்.

சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறவர். மா.சுப்பிரமணியனும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பதவி மூலம் தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இருவருமே பொதுவாழ்வில் தங்களுடைய நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்ற முடிவை எடுத்து அதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

களத்தில் சைதை துரைசாமிக்கும், மா. சுப்பிரமணியத்துக்கும் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள், பரஸ்பர புகார்கள் சூடு பறந்தன.

”என்னிடத்தில் பதவி இருந்தால் மாற்றத்தை கொண்டு வருவேன். வாய்ப்பு இல்லையென்றால் என்னுடைய சேவையை தொடருவேன். சேவையாளர்களை அங்கீகரிக்கிறார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்கு ஜனநாயகத்துக்கு உணர்த்தும் தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது. சேவையாளர்களை தான் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறுக்கு வழியில் பதவி பெறாமல் நேரடியாக மக்களை சந்திக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி நிற்பேன். தேவையென்றால் களத்தில் நிற்பேன்” என்று சைதை துரைசாமி பிரச்சாரத்தின் போது கூறினார்.

மா.சுப்பிரமணியனும், “நான் இந்தத் தொகுதிக்கு செய்த சேவைகளை தொடர எனக்கு வாக்களியுங்கள்” என்று கேட்டார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை முழுதும் பரவலாக பணப் பட்டுவாடா நடந்த நிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவோ, திமுகவோ ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: