3. இந்த ஒப்பந்தக் கூலி முறையில் தமிழர்கள் இந்தோனேசியாவை அடைந்தது சுவாரசியமானது. ஏனெனில், இந்தியா பிரிட்டிக்ஷாரின் காலனியாக இருந்த போது இந்தோனேசியாவோ அவர்களின் வைரியான டச்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதிலும் பிரிட்டிக்ஷார் ஐரோப்பாவில் நடந்த நெப்போலிய போரையும் அதன் பிண்ணனியில் நிகழ்ந்த இதர நிகழ்வுகளையும் பயன்படுத்தி டச்சுக்காரர்களை இந்தியாவிலிருந்து 1825-க்குப் பிறகு முழுவதுமாக அகற்றி விட்டிருந்தனர்.
4. இங்கிலாந்தில் அடிமை முறைமை ஒழிக்கப்பட்ட பின்பு அதன் நடைமுறை பிரிட்டிஷ் காலனிகளுக்கும் விரிந்தது. இதனால் டச்சுக்காரர்களும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர் நோக்கியிருந்தனர். இந்தோனேசியாவில் உருவாக்கப்பட்ட புகையிலை, ரப்பர் தோட்டங்களில் பூர்வக்குடினர் உழைக்க மறுத்தனர். வெள்ளையர்களாலோ தென்கிழக்காசியாவின் தட்பவெப்ப நிலையில் வேலை செய்ய இயலவில்லை. சீனர்களோ தங்களுக்குள் கட்டமைப்பையும் கொங்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதிக கூலிகளை வற்புறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்துவதும் தலைவலியாக இருந்தது. இதனால் இந்தோனேசியாவில் உருவாக்கப்பட தோட்டங்கள் அழியும் அபாயத்தை எட்டின. ஏற்கனவே போர்களால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்த டச்சு அரசு விழி பிதுங்கி நின்றது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஷாமா, புகையிலை வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இப்படி சொல்கிறார் "the smell of the Dutch Republic was the smell of tobacco". இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைத்த செல்வத்தில்தான் டச்சு நாடு செல்வத்தில் கொழித்தது. அந்த சமயத்தில்தான் வெள்ளையர்கள் தமிழர்களை ஒப்பந்த கூலிகளாக அமர்த்துவதை பார்க்கின்றனர்.
5. தங்களின் சிக்கலுக்கு தமிழர்களே நிவாரணி என உணர்ந்து வேறு வழியே இல்லாமல் 1873-இல் பிரிட்டிக்ஷாரிடமிருந்து தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக எடுக்க முடிவெடுத்தனர். இதற்கு விலையாக மேற்கு ஆப்பிரிக்காவில் டச்சுக்காரர்களுக்கு சொந்தமாக இருந்த பல கோட்டைகளை விட்டுத் தந்தனர். அதன்படி 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யபட்ட கூலிகளாக தமிழர்கள் தருவிக்கப்பட்டனர். 5 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் மீண்டும் வீடு திரும்பவும் டச்சுக்காரர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் பிரிட்டிஷ் இந்தியர்கள் என்று டச்சுக்காரர்களால் பொதுவாக சுட்டப்பட்டனர்.
6. இதன் அடிப்படையில் ஜூன் 1873-க்கு பிறகு 7 கப்பல்களில் தமிழர்கள் டச்சு காலனித்துவ இடங்களுக்கு பயணப்பட்டனர். இவர்களில் 25 பேர் முதல் கட்டமாக மேடானை வந்தடைந்தனர்.
7. நிற்க. மேடானில் இவர்கள் வேலையை துவக்கும் முன் இதற்கு முந்தைய தொடர்புகளை சற்று பார்த்து விடுவோம்.
8. இந்தோனேசிய தீவுகளுடனான தமிழர்களின் தொடர்பு நூற்றாண்டுகளைக் கடந்தது. இந்தப் பகுதியில் நகர அரசுகள், அரசுகள், பேரரசுகள் உருவாக தமிழர்களின் பங்கும் பாதிப்பும் அதிகம். இந்தோனேசியத் தீவுகளின் வர்த்தக பெருமானத்தை வளர்த்து அனைத்துலக சந்தையோடு தொடர்புபடுத்திக் கொடுத்ததில் அவர்களின் பங்கு அளப்பரியது.
9. 1017 மற்றும் 1025-இல் சோழ மாமன்னர் முதலாம் இராசேந்திரனின் தென்கிழக்காசிய படையெடுப்பு நிகழ்ந்தது. சோழரின் படையெடுப்பு ஸ்ரீ விஜய பேரரசுக்கு எதிராக இருந்தாலும் அதன் விளைவு தென்கிழக்காசியா முழுவதும் எதிரொலித்தது. இந்த படையெடுப்பில் சோழர்கள் 13 நகரங்களை தாக்கியதாக ராசேந்திர சோழரின் மெய்கீர்த்தி உரைக்கின்றது.
10. சோழரின் படையெடுப்பை அடுத்து தமிழர்களின் செல்வாக்கு தென்கிழக்காசியாவில் குறிப்பாக இன்றைய இந்தோனேசியத் தீவுகளில் மேலும் உறுதியடைந்தது. இதை தென் சுமத்திராவில் 1873-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட பாரூஸ் தமிழ் கல்வெட்டு வழிமொழிகிறது. தமிழர்கள் துறைமுக நகரான பாரூஸில் வர்த்தகர்களாகவும் கைவினைஞர்களாகவும் இருந்துள்ளனர். புகழ்பெற்ற பண்டைய தமிழர் வர்த்த சங்கமான திசையாயிரத்து ஐநூறுவர் பாரூஸில் நிலைக் கொண்டிருந்ததை கல் வெட்டு எடுத்துரைக்கிறது. அவர்கள் அந்த நகரில் கோயில் கட்டியிருந்ததாகவும் தெரிகிறது. இது தமிழரின் நிலையான குடியிறுப்பு அங்கு இருந்ததற்கு சான்றாக அமைகிறது.
11. மேலும் பாரூஸில் உள்ள காரோ மற்றும் ஆச்சே பூர்வகுடியினருடன் தமிழர்கள் புழங்கியும் இருக்ககூடும் என்பதற்கான சான்றுகள் தெரிகின்றன. மேற்குறிப்பிட்ட பூர்வகுடியில் சோழியா, பிராமணா, பாண்டியா, மெலியாலா, முகம் என்ற தமிழ்ப்பெயர்களில் உட்பிரிவுகள் இன்றும் உள்ளன. மேலும் சுமத்திராவில் பண்ணை நதி, மப்பாளம், கிரிஞ்சி (குறிஞ்சி) போன்ற பெயர்களில் இடங்களும் உள்ளன.
12. பாரூஸ் கல்வெட்டைத் தவிர ஆச்சேவின் நியுசுவில் 12-ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. தமிழ் கிரந்த எழுத்தில் உருவாக்கப்பட்டிருந்த இக்கல்வெட்டில் வர்த்தகம் தொடர்பான விதிகள் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தவிர்த்து குறைந்த பட்சம் 8 சமஸ்கிருத கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இவை 4-ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது.
13. வர்த்தகம் தவிர்த்து கலை கலாச்சார மொழியியல் சமய வளர்ச்சியிலும் தமிழர்களின் பங்கு பெரியது. இந்தோனேசியாவில் தமிழர்களின் பாதிப்பை இன்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம். இந்தோனேசியர்கள் தங்களது தமிழர், இந்திய, இந்து, புத்த தொடர்பை மறைக்காமல் இன்றும் கொண்டாடுவதை நாம் அவதானிக்கலாம்.
14. இப்போது மீண்டும் 1873-க்கு செல்லலாம். மேடான் வந்து சேர்ந்த தமிழர்கள் கடின உழைப்பாளிகளாக இருந்தனர். 1875-இல் இவர்களது எண்ணிக்கை 1000-த்தை தொட்டது. 1884-இல் 2000 தமிழர்கள் மேடானில் இருந்தனர். படிப்படியாக தோட்ட வேலைகளை தவிர்த்து சாலை கட்டுமானம், மாட்டு வண்டி ஓட்டுதல் செய்யவும் வந்தனர். இந்த சமயத்தில் ஒப்பந்தமில்லாமல் தொழில் செய்ய வந்த தமிழர்களும் இருந்தனர்.
15. டச்சுக்காரர்கள் தமிழர்கள் குடியமர நிலங்களை தந்தனர். அதில் ஒரு இடம்தான் இப்போது கம்போங் மதராஸ் என பெயர் பெற்றுள்ள Medan Little India. 1884-இல் தங்கள் வழிபாட்டு தேவைகளுக்காக ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை அமைத்துக் கொண்டனர். தனி நபர்கள் அடுத்தடுத்து வந்த பெண்களை மணந்து கொண்டு குடும்பம் அமைத்தனர். இந்தப் பெண்களை பெற தொழிலாளர் முகவர்களகுக்கு தனியாக பணம் வேறு கட்டினர்.
16. 1920-இல் டச்சுக்காரர்கள் ஒப்பந்த கூலி முறையை முறித்தனர். இதற்கு பிண்ணனியில் அமெரிக்கா இருந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் தன்னுரிமையில்லாத நாடுகளில் இருந்து வரும் புகையிலை இறக்குமதியை தடை செய்ய சட்டம் நிறைவேற்றினர். அமெரிக்க சந்தையை இழக்க விரும்பாத டச்சுக்காரர்கள் கூலி ஒப்பந்த முறையை ஒழித்தனர். இதன் விளைவாக தமிழர்கள் தன்னுரிமை கொண்ட தொழிலாளர்களாக மாறினர். சிலர் நாடு திரும்பினர். பலர் அங்கேயே தங்கிவிட்டனர்.
17. 1930-இல் ஏறத்தாழ 30,000 தமிழர்கள், சீக்கியர் மற்றும் இதர இந்தியர்கள் நீங்கலாக மேடானில் இருந்தனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்தல் (செட்டியார்கள்), சிறு தொழில், வர்த்தகம், பொற்கொல்லர், பண்ணை வைத்தல் முதலிய தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். தன்னுரிமை பெற்ற பிறகு சுதந்திரமாக மாற்று வேலையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றிருந்தனர்.
18. இரண்டாம் உலகப் போர் தமிழ் சமூகத்தில் முக்கிய மாறுதல்களை கொண்டு வந்தது. அவர்கள் பெருவாரியாக தோட்டங்களை விட்டு நகரத்தை நோக்கி நகர்ந்தனர். சப்பானியர்கள் மேடானில் இந்திய தேசிய இராணுவத்தின் கிளையை உருவாக்கி தமிழர்களை இணைத்தனர். அப்படி இணைந்தவர்களை பார்மாவில் சண்டையிட அனுப்பினர். சண்டைநிட போனவர்கள் திரும்பவேயில்லை. போர் முடிந்த பின் பிரிட்டஷாரின் இந்திய பிரிவுப் படைதான் முதலில் சுமத்திரா உட்பட இந்தோனேசியாவில் இறங்கியது. பின்பு டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவை மீட்டுக் கொண்டனர். இதற்கிடையில் சில ஆயிர தமிழர்கள் நாடு திரும்பி விட்டனர்.
19. இந்தோனேசியத் தமிழர்கள் தமது மொழியை வளர்க்கவும் அடுத்த தலைமுறைக்கு அதனை கடத்தவும் எடுத்த முயற்சிகள் குறித்த தரவுகள் சரிவர கிடைக்கவல்லை. தொடக்கத்தில் தமிழ்மொழி குடும்பங்களிலும் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர்.
20. ஆனால் சீக்கியர்கள் 1930-இல் ஆங்கில வழி பள்ளியை ஆரம்பித்தனர். இதில் பஞ்சாபி மொழியையும் கற்றுத் தந்தனர். 1931-இல் இரண்டாவது பள்ளியை துவங்கினர். இந்தப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களும் சேர்ந்து பயின்றனர். எண்ணிக்கையில் மிகுதியான தமிழர்களோ 1952-இல் தான் தனிப் பள்ளியை துவங்கினர். பாரதி ஆங்கிலப் பள்ளி என்ற பெயரில் ஆங்கிலத்தை மூல மொழியாக கொண்ட பள்ளியை துவங்கினர்.
21. இந்தப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக பாடத்திட்டத்தோடு கற்று தரப்பட்டது. கோயில்களும் பள்ளிகளை நடத்தி தமிழ் படிப்பதை ஊக்குவித்தன. சிலத் தமிழ்பாடசாலைகளும் உருவானது. இந்த பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான தமிழ் சிறார்கள் தமிழ் படித்தனர்.
22. இந்தப் பள்ளிகள் 1969 வரைதான் நீடித்தன. 1966-இல் இந்தோனேசியாவின் ஆட்சியை கைப்பற்றி அதிபரான சுகார்த்தோ 1969-இல் இந்தோனேசிய மொழிப் பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை இந்தோனேசிய பள்ளிகளாக மாற்ற உத்தரவிட்டார். இந்தப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மொழியாக இந்தோனேசிய மொழியை வைத்தனர். தாய்மொழிக் கல்வி அகற்றப்பட்டது. இது அவரின் New Order என்ற சித்தாந்த அடிப்படையில் எடுக்கபட்ட முடிவு. அதாவது இந்தோனேசியர்கள் அனைவரும் எந்த பூர்வீகத்தை கொண்டிருந்தாலும் ஒற்றை அடையாளத்தை ஏற்று தங்களது பூர்விக அடையாளத்தை துறக்க அழுத்தப்பட்டனர்.
23. பாரதி பள்ளி இன்று தர்ம புத்திரா என்ற பெயரில் இயங்குகிறது. இது போல மோகன், தர்மா போன்ற தமிழ்பாடசாலைகளும் இன்றும் வேறு பெயரில் வேறு நிலையில் உள்ளன. அரசின் கொள்கை நிறுவனப்படுத்தப்பட்ட தமிழ் கல்வி கற்றல் கற்பித்தலுக்கு தடையாக இருந்தது. ஆனால், சுய முயற்சியில் தாய்மொழி கல்வியை படிக்க அரசு தடையாக இருக்கவில்லை. தமிழ் படிப்பதற்கான ஆர்வம்தான் மேடான் தமிழர்கள் மத்தியில் படிப்படியாக குறைந்தது. மூன்றாம் நான்காம் தலைமுறையினர் அடுத்த தலைமுறைக்கு தமிழை கடத்துவதில் கருத்தூன்றி இருக்கவில்லை. பள்ளியில் இந்தோனேசிய ஆங்கில மொழியை கற்க, தமிழை வீட்டில் மட்டும் கற்றுத் தரலாம் என்றருந்து விட்டனர். இதன் விளைவு இரண்டே தலைமுறையில் அவர்கள் கண்டனர்.
24. மேடான் தமிழர்களின் மத்தியில் உருவான தலைவர்களில் ஐயா என்றழைக்கப்பட்ட குமாரசாமி தனித்துவமானவர். இவர் டெலி இந்து சபா என்ற அமைப்பின் மூலம் தமிழர்கள் மத்தியில் ஆன்மீகம், மொழி, கலை மூலமாக மறுமலர்ச்சியை ஏற்படுத்த பாடுபட்டார். குறிப்பாக தமிழ் கல்வியை வளர்க்க கவனம் கொண்டார். தமது உழைப்பினால் சில பள்ளிகளை உருவாக்கி மேடான் தமிழர்கள் தமது மொழியில் சரளமாக பேசவும் படிக்கவும் எழுதவும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார். இப்பொழுது மேடானில் வாழும் முதிர்ந்த தமிழர்கள் தங்களது தமிழ் வளமைக்கு இவரையே நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றனர். தினகரன் என்ற பெயரில் தமிழ் மாத இதழ்களையும் வெளியிட்டு வந்துள்ளார்.
25. அது மட்டுமல்லாமல் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தார். திருமண மற்றும் நீத்தார் கடன் சடங்குகளை எளிமையாக்கி பார்ப்பனர் இல்லாமலே நடத்த வழிவகை செய்தார். இந்த மாற்றங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
26. மேடானில் முக்கிய கோயில்களாக ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், காளியம்மன் ஆலயம் மற்றும் தண்டாயுதபாணி ஆலயம் உள்ளன. ஓரளவு அரசு அங்கீகாரம் பெற்ற சமுதாய மையமாக மாரியம்மன் ஆலயம் விளங்குகிறது. மேடானில் தைப்பூசத் நடத்த தடையுள்ளது. இந்த தடை ஏற்பட மாரியம்மன் கோயில் ஒரு காரணமாக இருந்தது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. இந்த கோயில்களில் சமய விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன. மக்கள் சமயம் சார்ந்த விழிப்புணர்வோடு உள்ளனர்.
27. காலமாற்றத்தில் தமிழர்கள் மேடானை விட்டு வாழ்வாதார வாய்ப்புகளை தேடி ஜகார்த்தாவை நோக்கி நகர்ந்தனர். இதில் திரு சீனிவாசன் மாரிமுத்து என்ற மேடான் தமிழருக்கும் பங்குண்டு. சீனிவாசன் Texmaco Jaya என்ற துணியகத்தை துவங்கி இந்தோனேசியாவின் முக்கியமான தொழில் முனைவர்களில் ஒருவரானார். இந்தோனேசியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களுள் ஒருவராக இருந்தார். இவர் மேடான் தமிழர்களை தன் தொழிலகத்தில் வேலை பார்க்க அழைத்ததோடு இளம் தொழில் முனைவர்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார். இவரது தொழிலகங்களில் வேலை செய்யவே பலர் மேடானை விட்டு வெளியேறினர்.
28. இந்தோனேசிய தமிழர்கள் தொழில்துறையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மொழியையும் தமிழ் அடையாளங்களையும் பறி கொடுத்து வருவது வருத்தமளிப்பதாக வயசாளிகள் சொல்கின்றனர். புதிய தலைமுறையினரோ குடும்பத்தில் இந்தோனேசிய மொழியையே பேசுகின்றனர். இவர்களால் தமிழ் பேச முடிவதில்லை ஆனால் ஓரளவு விளங்கிக் கொள்கின்றனர். தனி நபர்கள் வழிநடத்தும் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டினாலும் வகுப்புக்கு வெளியே தமிழ் பயன்பாட்டில் இல்லாததால் பெரிய பயனில்லை என குறைபட்டு கொள்கின்றனர்.
29. 2011-இல் நிறுவப்பட்ட இந்தோனேசியாத் தமிழ் சங்கம் ஜகார்த்தாவில் மையம் கொண்டு இயங்குகிறது. தமிழர்களின் நலனபிவிருத்தியை குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதாக அதன் அகப் பக்கத்தில் இடப்பட்டுள்ளது. அதன் நோக்கமாக
i. தமிழ்கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை வளர்ப்பது
ii. தமிழர்களிடையே ஒற்றுமையை பேணுவது
iii. தமிழர் திருநாட்களை கொண்டாடுவது
போன்றவைகளை இட்டுள்ளனர்.
இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு அவர்களது அரங்கில் தமிழ் வகுப்புகளும் தமிழ் நூலகத்தையும் அமைத்துள்ளனர். ஆனால் தமிழ் மாணவர் பற்றாக்குறை ஏற்படுவதை அதன் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
30. மேடான் தமிழர்கள் தங்களது சமய அடையாளங்களையும் உடை உணவு போன்ற புற அடையாளங்களையும் பேணி வருகின்றனர். தமிழ்த் திரைபடங்களை பார்க்கவும் தமிழ் பாடல்களை கேட்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு தமிழ்ச்சூழல் தமிழ் இல்லாமல் இருக்கின்றது. மொழியை வளர்க்க ஆங்காங்கே முயற்சிகள் நடந்தாலும் ஒரு கட்டமைக்கப்பட்ட முன்னெடுப்பாக இல்லாதது பெரும் குறையாகவே தோன்றுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இரு தலைமுறைகளில் அங்கு தமிழ் இல்லாமல் போகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக