புதன், 5 ஆகஸ்ட், 2020

அடிப்படை கல்வி வாய்ப்பை இழக்க போகும் குழந்தைகளின் கண்ணீர் நம்மை தூங்க விடப்போவதில்லை.

சுமதி விஜயகுமார் :ஒரு விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். நாடு முழுக்க உள்ள ஆசிரியர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல்
நிகழ்த்தி, வரைவு திட்டம் கொண்டு வந்து, அதை விவாதித்து, திருத்தங்களை மேற்கொண்டு அதை சட்டம் ஆக்குவது. NEP போல. இன்னொன்று விதம், வெளியில் பயணிக்கும் பொழுது வழியில் வேலைக்கு செல்லும் சிறுவர்களை பார்த்து, படிக்க போகாம வேலைக்கு எதுக்கு போற என்று கேள்வி கேட்டு, அந்த குழந்தையை பள்ளிக்கு எப்படி கொண்டு வருவது என்று சிந்திப்பது. முதலமானது ஏற்கனவே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கானது. இரண்டாவது பள்ளி செல்ல வாய்ப்பற்ற குழந்தைகளுக்கானது. இன்று தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்க முக்கியமான காரணங்களில் ஒன்று வாய்ப்பற்ற குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தது.

இப்போது புதிதாக ஒரு போக்கு உருவாகி இருக்கிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு திருத்த சட்டத்தை விமர்சிப்பவர்கள் ஒரு சூழலியளராகும் , புதிய கல்வி கொள்கையை விமர்சிப்பவர்கள் ஒரு கல்வியாளராகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் , நீ என்ன கல்வியாளரா ? வரைவு திட்டத்தை முழுசா படிச்சுட்டியா என்ற கேள்விகள் எழுகிறது. ஆனால் அந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் ஒரு சூழலியளராகவோ அல்லது கல்வியாளராகவோ இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை . குறைந்தபட்சமாக அந்த வரைவு திட்டங்களை படித்திருக்க கூட தேவையில்லை.

இந்த புதிய கல்வி கொள்கை எதை நோக்கி நம்மை தள்ளுகிறது என்பதை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் , பேராசிரியர் கருணாநந்தனும் , மருத்துவர் எழிலன் நாகநாதனும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ஆராய்ந்து அதில் உள்ள சூட்சமத்தை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த புதிய கல்வி கொள்கையில் அபாய மணியாக உள்ள வார்த்தை Equality. அதாவது சமத்துவத்தை வலியுறுத்துகிறது. பொதுவாக பார்த்தால் நியாயமாக தோன்றலாம். Equal opportunity, அதாவது சம வாய்ப்பு இல்லாத இடத்தில் இந்த equality என்பது வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை மறந்து விடுகிறோம். Equality என்று சொல்லி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் equal opportunity இல்லாத குழந்தைகள் மிக அதிக மதிப்பெண் எடுத்திருந்தம் மருத்துவ கல்லூரியில் நுழைய முடியாமல் தங்களை மாய்த்து கொண்டதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.இன்று வீட்டில் onlineல் படிக்கவசதி இல்லாத குழந்தைகள் மனஉளைச்சலில் இருப்பதையும் பார்க்கிறோம். இது போன்ற குழந்தைகளிடம் போய் equality பற்றி பேசுவது நியாயமானதாக இருக்குமா?

நெ து சுந்தரவடிவேலு என்பவர் தலைமை கல்வி ஆலோசகராவும் தமிழ்நாடு அரசு துணைவேந்தராகவும் இருந்தவர். அவரின் சுய சரிதையான 'நினைவு அலைகள்' என்ற நூல் இன்று கட்டாயம் வாசிக்க பட வேண்டிய ஒன்று. காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்ற ஒற்றை வரிக்கு பின்னால் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உழைப்பும் பங்களிப்பும் அளப்பரியது. சுந்தரவடிவேலு, திரவியம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் அறிவுரையின் படியும் வழிகாட்டுதலின் படியும் காமராஜர் ஆட்சியையும் அதன் பின் வந்த திராவிட ஆட்சியும் குழந்தைகளின் கல்வி தேவையை எப்படி பூர்த்தி செய்ய முயன்றார்கள் என்பதை விலகுவது அவ்வளவு சுலபம் அல்ல. ஒரு ஊரில் எல்லா குழந்தைகளும் படிக்க ஊரில் உள்ள பெரியவர்கள் தங்களால் முயன்ற பொருள் உதவியை செய்து துவங்கப்பட்ட பள்ளிகள் ஏராளம். அந்த வரலாறை எல்லாம் படித்துவிட்டு இந்த புதிய கல்வி கொள்கையை படித்தால் தான் தெரியும் அதன் சாரம்.

இந்த புதிய கல்வி கொள்கையில் ஒரு இடத்தில் கூட பள்ளியில் சேர வாய்ப்பில்லாத குழந்தைகள் பற்றிய ஒரு திட்டம் இல்லை. இருக்கும் கல்வியை மேம்படுத்துவதாக இருக்கிறது. உண்மையில் இருக்கும் கல்வியையாவது மேம்படுத்துகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊரார் பிள்ளைகளும் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க தங்களால் இயன்றதை கொடுத்து உதவிய பெற்றோர்களுக்கு பிறந்ததால் தான் இன்று நாம் வளர்ச்சியை கண்டிருக்கிறோம். ஆனால் இன்று உள்ள பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானது இந்த NEPயில் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துவிட்டு திருப்தி அடைந்து விடுவதை எப்படி எடுத்து கொள்வது என்பது விளங்கவில்லை.

தமிழகத்தில் கூலி வேலை செய்ய ஆளில்லை என்று பாஜகக்காரர் வெளிப்படையாக சொன்ன பின்பும் இந்த NEPஐ ஆதரிப்பவர்கள் அதன் விளைவை இன்னும் 15 -20 ஆண்டுகளில் உணர்ந்து விடுவார்கள். அதுவரை அடிப்படை கல்வி வாய்ப்பை இழக்கும் குழந்தைகளின் கண்ணீர் நம்மை தூங்க விடப்போவதில்லை.

கருத்துகள் இல்லை: