வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஸ்டாலினைச் சுற்றி... பாஜக பின்னும் வலை!

மின்னம்பலம் : இந்நிலையில் செல்வத்தை பாஜக பக்கம் திசை திருப்பியது அவரது கட்சி அதிருப்தி என்றாலும்.... அதற்கு பாதை அமைந்தது எப்படி என்று திமுக, பாஜக என இரு தரப்பிலும் விசாரித்தோம்.திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திடீரென பாஜகவில் சேர்ந்துள்ளார். பாஜகவில் சேரவில்லை என்று அவர் மறுத்தாலும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை ஒட்டி கமலாலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கு.க. செல்வம் கலந்து கொண்டார்.மனம் விட்டு பேச வைத்த அறிவாலயம் “மே 22ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவர் சேர்ந்ததுமே அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை, திமுகவில் இருக்கும் முக்கியமான அதிருப்தியாளர்களை உங்களது இத்தனை வருட அனுபவத்தை கொண்டு அடையாளம் கண்டு சொல்லுங்கள். அவர்களோடு பேசிப் பார்ப்போம். அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் நாம் செய்து தந்து பாஜகவுக்கு வர வைப்போம் என்பதுதான் விபி துரைசாமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.

வி.பி. துரைசாமி திமுகவில் இருந்தபோது காலை 9 மணிக்கெல்லாம் அறிவாலயம் வந்துவிடுவார். அவர் வந்த அரை மணி நேரத்துக்குள் தலைமை நிலையச் செயலாளரான கு.க.செல்வம் காலை 9.30க்கு வந்து விடுவார். இந்த இருவரும் சுமார் 2 மணி நேரம் தினமும் தனிமையில் கட்சி வட்டாரங்கள், நடப்பு விவகாரங்கள், அரசியல் சூழல்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். 11 மணிக்கு மேல் தான் மற்ற நிர்வாகிகள் எல்லாம் வர ஆரம்பிப்பார்கள். அதனால் இயல்பாகவே துரைசாமியும் செல்வமும் நெருங்கி பழகினார்கள். குடும்ப விஷயங்கள் முதல் கட்சி விஷயங்கள் வரை அனைத்தையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் தலைமை மீது தனக்கு இருக்கும் வருத்தங்களை துரைசாமி செல்வத்திடம் எடுத்து வைக்க, ‘இங்க மட்டும் என்ன வாழுதுண்ணே’ என்று செல்வமும் துரைசாமியிடம் தனது விரக்திகளை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வி.பி. துரைசாமியின் அழைப்பு

ஜூன் 10ஆம் தேதி சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் காலமான பிறகும் கூட செல்வமும் துரைசாமியும் இயல்பாகவே பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அறிவாலயத்தில் பேசிக் கொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும் இருவருக்கும் ஏற்கனவே நல்ல புரிந்துணர்வு உள்ளதால் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமா கிடைக்காதா என்பது பற்றிய கருத்துக்களை துரைசாமியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் செல்வம். சுமார் ஒன்றரை மாதம் கழித்து சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசு நியமிக்கப்பட்டதும் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான எதிர்ப்பு நிலவியது. அறிவாலயத்தை உள்ளடக்கிய மாவட்டம் என்பதால் அங்கே நிலவும் கட்சி முரண்பாடுகளை துல்லியமாக அறிந்து வைத்திருந்தார் துரைசாமி.

சிற்றரசு அறிவிக்கப்பட்டதும் செல்வம் அதிர்ச்சியின் உச்சத்தில் இருப்பார் என்பதை அறிந்து அவருக்கு தொடர்பு கொண்டு, ‘இனிமே அங்கே இருந்து என்ன பண்ண போறீங்க?’ என்று உரிமையாகவே அழைத்திருக்கிறார் துரைசாமி. இனிமேல் மாவட்ட செயலாளராக வாய்ப்பே இல்லை, அதை விட அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதிக்கோ, சிற்றரசுவுக்கோதான் வாய்ப்பு போகப் போகிறது என்பதையும் நன்கு உணர்ந்த செல்வம், விபி துரைசாமியிடம் தன்னுடைய பிரச்சினைகளையெல்லாம் புலம்பியிருக்கிறார். சென்ற தேர்தலில் நின்ற செலவு, சென்னை திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் ஏற்பட்டு வரும் இயல்பான செலவு ஆகியவை பற்றி மனம் திறந்து துரைசாமியிடம் சொன்ன செல்வம்... மதுரவாயலில் தன்னுடைய பெரிய அளவிலான சொத்து ஒன்று பிரச்சனையில் சிக்கி கொண்டிருப்பதையும் சொல்லி புலம்பியிருக்கிறார்.

முருகனை முடுக்கினார்

இது போதாதா விபி துரைசாமிக்கு? கு.க. செல்வம் விரக்தியின் விளிம்பில் நிற்பதை தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு தெரிவித்த துரைசாமி, ‘ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் பாஜகவுக்கு வருவது என்பது மிகப்பெரிய விஷயம். இதை உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று உரிமையாக கூறியிருக்கிறார்.

காத்திராமல் அடுத்தடுத்து களத்தில் இறங்கிய எல்.முருகன், செல்வத்தின் உறவின்முறை மூலமாகவும் ஒருமுறை அவரது திமுக மீதான அதிருப்தியையும் பாஜகவுக்கு வரும் விருப்பத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த சில தினங்களில் முருகன், வி.பி. துரைசாமி பாஜகவின் இன்னொரு துணைத் தலைவர் எம்.என். ராஜா ஆகியோரோடு டெல்லிக்கு புறப்பட்டு விட்டார் செல்வம்.


ஸ்டாலினைச் சுற்றியுள்ளவர்கள்...நட்டாவின் திட்டம்

ஜே.பி. நட்டாவுக்கு நெருக்கமான தமிழக பாஜகவில் இருக்கும் பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்..

"செல்வம் விவகாரத்தில் உண்மையிலேயே பாஜக எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை. வந்தார் வரவேற்றோம். அதேநேரம் தமிழகத்தில் எங்கள் தேசிய தலைவர் நட்டாவின் உத்தரவுப்படி ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வேலையே திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் சந்திக்கும் கட்சிப் பிரமுகர்களில் சிலரை பாஜகவுக்கு இழுப்பதுதான். செல்வத்தோடு பெரிய அளவில் திமுகவினர் வரவில்லை. ஆனால் செல்வத்துக்கும் ஸ்டாலினுக்கும் இடையே கட்சி தாண்டி நிறைய தொடர்புகள் இருக்கின்றன. செல்வம் பாஜகவுக்கு வருகிறார் என்று அறிந்ததுமே ஸ்டாலின் முதலில் ஆலோசனை நடத்தியது மூத்த வழக்கறிஞர்களிடம்தான். அரசியல் ரீதியாக செல்வத்தின் விலகல் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அரசியலைத் தாண்டி ஸ்டாலினுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவரது அரசியல் பணி பாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் நோக்கம

ஸ்டாலினைச் சுற்றி அவருக்கு மிக நெருக்கமான வளையத்திலிருந்து ஒரு சிலரை திமுகவில் இருந்து வெளியேற வைத்து அவர்கள் மூலமாக ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி தருவது தான் நட்டாவின் திட்டம். இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வதற்கும் தயார். இதற்கான விலையை இறக்கிவிட்டு தான் இந்தக் குழுவும் களத்தில் இறங்கியிருக்கிறது" என்று முடித்தார்.

-ஆரா

கருத்துகள் இல்லை: