வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

சங்க கால கல்வெட்டுகளுக்கு ஆபத்து!

மின்னம்பலம் : -நிலவளம் கு.கதிரவன்

ஓர் இனத்தின் நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை வரலாற்றோடு கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறியமுடிகிறது. அந்த வகையில் சங்ககால வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் அதைச் சார்ந்த ஊரகப் பகுதிகளாகும்.சங்க கால கல்வெட்டுகளுக்கு ஆபத்து!

கி.மு.5ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சங்க காலம் என பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அக் கால வரையறையின் வாயிலான பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர். இதுவரை 32 இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த 95 கல்வெட்டுகளில் 5 விழுப்புரம் மாவட்டத்திலும், குறிப்பாக செஞ்சி மற்றும் செஞ்சி வட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 4 கல்வெட்டுகள் இருப்பது செஞ்சி பகுதியின் சிறப்பாகும். திருக்கோவலூர் ஜம்பையில் 1 கல்வெட்டு உள்ளது. இதன் வாயிலாக செஞ்சி சங்க காலத்தில் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது இவ்வாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செஞ்சி பகுதியானது இயற்கையிலேயே கற்குவியலாகவும், பாறைகளாகவும், கனிம வளம் கொண்டவையாகவும் விளங்கும் இயற்கையான மலைகள் நிறைந்ததாகும். இத்தகைய மலைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியங்கள், சமணக் கல்வெட்டுகள் வாயிலாக, இம் மலைப் பகுதிகள் தமிழகத்தின் தொன்மை கல்வி நிறுவனங்களாக, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் அறப் பள்ளிகளாக விளங்கியிருக்கின்றன. இதற்கு சான்றாதாரமாக சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சமணர்களின் தலைமை பீடமாக விளங்கும் ‘ஜின கஞ்சி மடம்’ செஞ்சி அருகில் மேல்சித்தாமூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

செஞ்சியின் சுற்றுப் பகுதி ஊர்களான சிறுகடம்பூர், தொண்டூர், நெகனூர் பட்டி, பறையன்பட்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால கல்வெட்டுகளில் சமண முனிவர்களுக்கு அறப் பள்ளிகள் அமைத்துக் கொடுத்ததை தொண்டூர், நெகனூர்பட்டி கல்வெட்டுகள் வாயிலாகவும், சமண முனிவர்கள் வடக்கிருந்த நிகழ்வு, திருநாதர் குன்று, பறையன்பட்டு கல்வெட்டுகள் வாயிலாகவும் நம்மால் அறிய முடிகிறது. இங்கு காணப்படும் குகைக் கல்வெட்டுகள் வாயிலாக அமைந்த அறப் பள்ளிகள் மூலம் கணிதம், வானியல், விஞ்ஞானம், உயிர் ஞானம், மொழியறிவு, மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானம், புகலிட தானம் அளித்த செய்திகளையும் அறிய முடிகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக செஞ்சி வட்டம் நெகனூர்பட்டி கல்வெட்டும் ஒன்றாகும்.

நெகனூர்பட்டி கல்வெட்டு:

இக் கல்வெட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கி.மு 3 – 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக் கல்வெட்டு சமணர் இருக்கை செய்வித்துக் கொடுத்ததை கூறுகிறது.

பெரும் பொகய்

செக்கந்தி தாயியருசெக்கந்தண்ணி ச

யிவித்த பள்ளி

பெரும் பொகய் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவனின் தாயார் செக்கந்தண்ணி செய்வித்த பள்ளி ( சமணர் இருக்கை ) என்று கல்வெட்டு கூறுகிறது என்பது பேராசிரியர் சு.ராஜவேலு அவர்களின் கருத்தாகும். நெகனூர்பட்டி மேற்கே உள்ள அடுக்கண்கல் என்ற குன்றின் கீழ் அருகில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூரைப் பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது.

சங்ககால கல்வெட்டிற்கு ஆபத்து :

சங்க காலத்தோடு தொடர்புடைய இக் கல்வெட்டிற்கு தனியார் கல்குவாரி ஆட்கள் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இம்மலையில் முறைகேடாக பாறைகளை வெடி வைத்து தகர்த்து வருகின்றனர். இதனால் பொக்கிஷமான வரலாற்றுச் சின்னங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டு விழுப்புரம் கலைக் கல்லூரி பேராசிரியரும், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான பேராசிரியர் ரமேஷ், ஜினக்கஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதுபற்றி பேராசிரியர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “செஞ்சி பகுதியின் பல பகுதிகளில் எனது தலைமையிலான குழுக்களோடு ஆய்வு செய்துள்ளேன். அதில் சங்க காலத்தோடு தொடர்புடைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னம் நெகனூர்பட்டி கல்வெட்டு, இவ்வூரின் அருகில் உள்ள தொண்டூர் கல்வெட்டுகளாகும். தற்பொழுது நெகனூர்பட்டி கல்வெட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மிகப் பெரிய பாறைகளை வெடிவைத்து தகர்த்து வருகின்றனர். இதனால் அருகில் உள்ள பாறை ஓவியங்கள், கல்வெட்டுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர், முனைவர்.ரவிக்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர் துரிதமாக செயல்பட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இப் பகுதிகளை உடனடியாக பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து தொல்லியல் துறை ஆணையர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்டு 6 ஆம் தேதி, இம்மலைகளை பாதுகாத்திடுவதை முன்னிட்டு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிகழ்வில் துரிதமாக செயல்பட்ட தொல்லியல் துறை ஆணையர் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எங்களின் சார்பாகவும், ஊர்ப் பொதுமக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறினார்.

இந்த ஒரு நடவடிக்கை போதாது. இம் மலையில் முறைகேடாக கல்குவாரிப் பணிகளுக்கு பாறைகளை வெடிவைத்து தகர்க்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணப் படுக்கைகள், பாறை ஓவியங்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட, வரலாற்று சிறப்புமிக்க இம்மலையினை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று தெரியாது என்பது பழமொழி. அதேபோல பணத்தை மட்டுமே குறி வைக்கும் வர்த்தக வெறியர்களுக்கு கல்லா, கல்வெட்டா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அரசு இதில் உடனே தலையிட்டு சங்க கால கல்வெட்டுகளைக் காக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: