சனி, 4 ஜூலை, 2020

ஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்த ஜெ.அன்பழகன்

ஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்த ஜெ.அன்பழகன்மின்னம்பலம் : மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான அன்பழகனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை இன்று ஜூலை 4 காணொளி காட்சி முறையில் நடத்தியது திமுக.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெ. அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரிய அரங்கத்தில் நடக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி காணொலி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1000 நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்ட செயலாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான சூம் மீட்டிங் கோடிங், பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் மற்ற நிர்வாகிகளுக்கு இந்த கோடிங் பாஸ்வேர்டு ஆகியவற்றை பகிருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படியே சுமார் 1000 நிர்வாகிகள் இந்த காணொலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர் எஸ் பாரதி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திமுகவின் சீனியர்கள் ஆன துரைமுருகன், ஐ பெரியசாமி உள்ளிட்ட பலரும் கூட ஜூம் ஆப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பதுடன் எப்போது ஆடியோவை ஆன் செய்ய வேண்டும் எப்போது ம்யூட் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூட அறிந்து அதன்படி நடந்து இந்த கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
பட்டத்து யானை
பக்கத்து மாவட்டச் செயலாளரான மா. சுப்பிரமணியன் பேசும்போது ஒரு இனிய நண்பரை இழந்து விட்டேன் என்றார். சட்டமன்ற உறுப்பினரும் மாசெவுமான சேகர்பாபு பேசும்போது, " அன்பழகன் ஒரு பட்டத்துயானை. போர் என்று வந்துவிட்டால் பட்டத்து யானை தான் கம்பீரமாக முன்னால் செல்லும். அதுபோல் அன்பழகன் கம்பீரமானவர்"என்று குறிப்பிட்டார்.
கனிமொழி எம்பி பேசும் போது, "அவருடன் கட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன். கட்சியின் நம் நன்மைக்காக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டுமென்றால் இப்ப சொல்லலாமா அப்புறம் சொல்லலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார். உடனடியாக அதைச் சொல்லி ஒரு தீர்வுக்கு வழி காட்டுவார்" என்று குறிப்பிட்டார்.
துரைமுருகன் பேசும் போது, "எல்லோரும் சொன்னதுபோல் ஜெ அன்பழகன் இழப்பு நமது கழகத்திற்கும் தலைவருக்கும் பேரிழப்பு தான். ஆனாலும் நான் சொல்கிறேன்...நமது தலைவர் அன்பழகன் போன்ற செயல் வீரர்களை மேலும் மேலும் உருவாக்குவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதற்கு முன்பாக இந்த கூட்டத்தில் ஜெ அன்பழகன் குடும்பத்தின் சார்பாக அவரது மகன் ராஜா அன்பழகன் பேசினார். "எங்களுக்கு இனி கழகம் தான் ஆறுதல். கழகம் தான் எல்லாமே. அப்பாவின் வழியில் அவர் விட்டுச் சென்ற பணிகளை கழகத்துக்காக செய்து முடிக்க காத்திருக்கிறோம். எங்களுக்கு உங்களை விட்டால் யாருமில்லை" என்று கண் கலங்கினார்.

கண்கலங்கிய கலைஞர்
அனைவரும் பேசி முடித்த பின் இறுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் கண் கலங்கிய படியே பேசினார். "தலைவர் கலைஞர் மேடையில் இருக்கும் போது ஜெ‌ அன்பழகன் தலைவா நான் உங்கள் கண்ணெதிரே உயிர் விட வேண்டும். என் உடலின் மீது உங்களின் கண்ணீர் துளிகள் விழ வேண்டும் அதுதான் எனது ஆசை என சொல்லும்போது தலைவர் கண் கலங்குவார். ஆனால் இப்போது தலைவர் கலைஞரும் இல்லை ஜெ. அன்பழகனும் இல்லை. என்ன சொல்லி என்னை நான் தேற்றிக் கொள்வேன்.கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர், கொரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும் நடராசனையும் இழந்தோம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம் அரங்கநாதனை இழந்தோம்... என்பதைப் போல கொரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். கழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு தொண்டன், நூறு பேருக்குச் சமம். கழகத்தின் ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் ஆயிரம் பேருக்குச் சமம் என்கிற அளவுக்கு யானை பலத்துடன், அதிக பலத்துடன் வலம் வந்த வேங்கைதான் நம்முடைய ஜெ.அன்பழகன்.
உடல்நலமில்லை என்றதும் நேராகத் தலைவர் கலைஞர் அவர்கள் துயில்கொள்ளும் கடற்கரைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மருத்துவமனைக்கே சென்றார் என்பதை விடக் கழகத்தின் மீதும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் அவர் வைத்திருந்த அன்புக்கு வேறு ஆதாரம் சொல்ல வேண்டியதில்லை.
மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது முதல், நான் நிலைகொள்ளாமல் இருந்தேன். மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். ஆனாலும் அவரால் மீளமுடியவில்லை. நம்மை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்று விட்டார்" என்று சொல்லும்போது ஸ்டாலினின் கண்கள் குளமாகின.
புதிய மாவட்ட நிர்வாகம் பற்றி ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர், "மாவட்டக் கழகத்தை அவர் எத்தகைய கம்பீரத்துடன் நடத்தினாரோ அதேபோல் இனியும் மாவட்டக் கழகம் நடத்தப்பட வேண்டும். ஜெ.அன்பழகனோடு தோளோடு நின்ற தோழர்கள் அனைவருமே ஜெ.அன்பழகனைப் போலவே உற்சாகமாக, கம்பீரமாக, தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும். கழகக் கோட்டையாக இருக்கும் தலைநகர் சென்னையைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
ஜெ.அன்பழகன் நம்மோடு இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும். ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் அனைவர்க்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது துன்ப துயரங்களில் நாங்களும் பங்கெடுக்கிறோம். என்றென்றும் துணை நிற்போம். மறைந்த ஜெ.அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல;
எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர். ஜெ. அன்பழகனின் சிரித்த முகத்தை யாரும் மறக்க முடியாது. அவர் சிந்திய வியர்வையும் இரத்தமும் வீண்போகாது"என்று தன் உரையை முடித்தார் ஸ்டாலின்.
மறைந்தும் புதுமை செய்த அன்பழகன்
இந்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் விஜய் வெங்கடேசன் மின்னம்பலத்திடம் பேசினார்.< "எங்கள் மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் எப்போதுமே புதுமையும் நவீனமும் கட்சிக்கு பயன்படவேண்டும் என்ற உத்தி வகுத்துக் கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக பொதுக் கூட்டங்கள், மாநாடுகளில் அவர் அமைக்கும் மேடை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பேசப்படும் ஒரு சாதனை விஷயமாகும். அவர் அமைக்கும் ஒவ்வொரு மேடையும் பிரம்மாண்டத்தின் புதுமையின் முகவரியாக இருக்கும். அந்தத் தொடர்ச்சியை தான் இல்லாதபோதும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஜெ அன்பழகன்.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் காணொலி வடிவத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிகள் மைதானங்களில் அரங்கங்களில் நடத்த முடியாத நிலையில் காணொலி களிலேயே நடத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஒரு காணொலி காட்சி கூட்டம் ஜெ அன்பழகன் அவர்களுக்காகவே முதன்முதலில் நடந்திருக்கிறது. மேடை அமைப்புகளில் புதுமை செய்த அன்பழகன் தான் இல்லாத நிலையிலும் தன்னை மையமாக வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு நவீன அறிவியலின் மின்னணு மேடையை பயன்படுத்தும்படி செய்துவிட்டார். திமுக எல்லா விதமான தகவமைப்பு களிலும் தன்னை ஈடுபடுத்தி எதிர்நீச்சல் போடும் இயக்கம் என்பதை அன்பழகன் நினைவேந்தல் நிகழ்ச்சி மூலம் மீண்டும் நாங்கள் நிரூபித்துள்ளோம். அடுத்த கட்ட ஆன்லைன் கூட்டங்களுக்கு தமிழகத்தில் இது ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும் "என்கிறார்.
தேசிய அளவில் பாஜக காணொலி வழியாக கூட்டங்களை நடத்தி வருகிறது. மாநிலக் கட்சிகளிலேயே திமுக காணொலி முறையில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டியதன் மூலம் அடுத்த கட்ட அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது.
-ஆரா

கருத்துகள் இல்லை: