RSS-ன் சேவாபாரதிதான் இன்றய Friends of Police- என்ற அமைப்பு . இது பற்றி பல பயங்கர செய்திகள் உலா வருகிறது . விரைவில் எல்லா செய்திகளும் வெளியே வரும் . இவர்களின் குற்ற பின்னணி மிகவும் அதிர்ச்சிகரமானவை ..
tamil.oneindia.com :சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. அத்தனை சீக்கிரம் யாராலும்
ஜீரணிக்க முடியாத மிக கொடுமையான சம்பவம்..
இந்த விவகாரம் தற்போது கோர்ட்டுக்குப் போய் விட்டதால் யாரும் இதைப் பற்றி விரிவாகப் பேச முடியாதுதான்.. ஆனால் காவல்துறைக்கு ஒரு சிலரால் ஏற்பட்டு விட்ட இந்த கொடும் களங்கத்தைத் துடைக்க அதிமுக அரசு உறுதியான நடவடிக்கையில் இறங்குவதுதான் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெயர் கெடாமல் காக்க அவர்கள் செய்யும் செயலாக இருக்க முடியும். இல்லாவிட்டால் நாளை ஜெயலலிதா பெயரில் நடந்த ஆட்சியில் காவல்துறையின் செயல் என்றுதான் வரலாறு பேசும். அது மறைந்த ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்ப்பதாக ஆகாது
குமரி முதல் டெல்லி வரை அத்தனை
பேருமே பதறிப் போய் விட்டார்கள்.. இந்த கொடூர சம்பவத்தில் ஒவ்வொருவரிடமும்
கேள்விகள்தான் அதிகம் இருக்கிறது. எந்த கேள்விக்கும் முறையான பதில்
இல்லாமல் அத்தனை பேரும் துடித்து போயுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகள். ஊரடங்கு காலத்தில்
வணிக நிறுவனங்களை திறந்து வைப்பதில் சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை அரசு
அறிவித்துள்ளது. அதை கடைப்பிடித்து மக்களும், வியாபாரிகளும் செயல்பட்டு
வருகின்றனர். இதில் குழப்பமே இல்லை.
ஆனால் சில இடங்களில் கடைகளை மூடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதற்கேற்ப
போலீஸாரும் ரோந்து வாகனத்தில் சென்று கடையை மூடுங்க என்று
எச்சரிக்கிறார்கள். இதிலும் குழப்பமில்லை. இதுவும் இயல்பானதே.
சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம்தான் இதற்கு முற்றிலும் நேர் மாறாக
இருக்கிறது. கடையை விதிமுறைக்கு மீறி திறந்து வைத்திருந்ததால், அவர்களிடம்
விசாரித்ததாகவும், அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அப்பாவும், மகனும்
தாங்களாகவே தரையில் புரண்டு அடிபட்டுக் கொண்டதாகவும் போலீஸ் தரப்பில்
கூறப்பட்டது. ஆனால் திடீரென நேற்று வெளியான சிசிடிவி கேமரா பதிவில்
டோட்டலாக நிலைமையே வேறு மாதிரி இருந்தது.
அதாவது போலீஸ் தரப்பில் வந்து விசாரணை நடத்திய நேரம் 8 மணிக்குள்ளாக
இருந்தது. அதாவது கடையை மூடுவதற்கான நேரத்துக்கு முன்பே போலீஸ் அங்கு
வந்துள்ளது. கடையை மூட நேரம் இருந்தபோதும் ஏன் முன்கூட்டியே கடையை மூடச்
சொன்னார்கள் என்பது முதல் கேள்வி.. கடையை மூட மறுத்து வாதம் புரிந்து
தரையில் படுத்து உருண்டார்கள் என்ற போலீஸின் அடுத்த குற்றச்சாட்டும்
பொய்யானது என்று சிசிடிவி கேமரா பதிவு காட்டி விட்டது.
அதாவது அந்த
இடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. இயல்பாகவே இருக்கிறது அத்தனை
நிகழ்வுகளும். பிறகு ஏன் போலீஸ் பொய் சொன்னது என்பது அடுத்த கேள்வி.
இருவரும் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது ஏன்.. அவர்களை கொடூரமாக
தாக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது. போலீஸாரை தாக்கினார்களா
அல்லது போலீஸாருடன் ஏதாவது தேவையில்லாத வாதம் புரிந்தார்களா.. அப்படி
நடந்திருந்தால் அதை போலீஸார் தங்களது விசாரணை அறிக்கையில்
சொல்லியிருப்பார்களே.. அப்படி ஏதும் இல்லையே.. அப்பாவும், மகனும் உடல்
ரீதியாக பலம் வாய்ந்தவர்களாகவும் இல்லை.. அப்படி இருக்கும்போது அவர்கள்
எப்படி போலீஸாரிடம் முரண்டு பிடித்திருப்பார்கள்.. அதுபோல ஏதும் நடக்காத
நிலையில் போலீஸார் எதற்காக அவர்களைத் தாக்க வேண்டும் என்பது அடுத்தடுத்த
கேள்விகள்.
மாஜிஸ்திரேட் பாரதிதாசன்..
காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கும் பின்னர் ரொம்ப தூரத்தில் உள்ள
கோவில்பட்டி கிளைச் சிறைக்கும் இருவரையும் கொண்டு சென்றனர். மாஜிஸ்திரேட்
முன்பும் ஆஜர்படுத்தியுள்ளனர். டாக்டர் என்ன சர்ட்டிபிகேட் கொடுத்தார்
என்று தெரியவில்லை.. எதைப் பார்த்து அவர்களை ரிமாண்ட் செய்யச் சொன்னார்
மாஜிஸ்திரேட் என்றும் புரியவில்லை. கோவில்பட்டி கிளைச் சிறையில்,
படுகாயத்துடன் வந்தவர்களை எந்த கணக்கில் அனுமதித்தனர் என்பதற்கும் பதில்
இல்லை.
காவல்துறையினர் இந்த விவகாரத்தில் பெருத்த அமைதி காத்தனர். அதாவது மாவடட்
எஸ்பி முதல் சாதாரண காவலர் வரை கப்சிப்பென்று இருந்தனர். அரசும் கூட
ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காமல்தான் இருந்தது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றக்
கிளைதான் இதை முதலில் கையில் எடுத்தது. அடுத்தடுத்து அது சாட்டையை
சுழற்றச் சுழற்றத்தான் அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் வர ஆரம்பித்தன. ஏன்..
ஒவ்வொன்றுக்கும் அரசு காத்திருந்தது என்பது அடுத்த கேள்வி. இதற்கும் பதில்
இல்லை.
இன்று மாவட்ட எஸ்பி வரை மாற்றம் செய்தாகி விட்டது. சாதாரண ஒரு காவலர்,
மாஜிஸ்திரேட்டைப் பார்த்து உன்னால ஒன்னும் பிடுங்க முடியாதுடா என்று
தைரியமாக காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளை வைத்துக் கொண்டே திட்டுகிறார்
என்றால் மிகப் பெரிய பயங்கரம் பின்னணியில் இருப்பதாகவே அஞ்ச வேண்டியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் காவல்துறை அவர்களின் செல்லப் பிள்ளையாக
இருந்து வந்தது. அவர்களுக்கு ஒரு களங்கம் கூட கற்பித்து விடாமல் காவல்துறை
மிகவும் உயர்வாக செயல்பட்டு வந்தது. ஜெயலலிதாவும் காவல்துறையை அப்படி
கனிவுடன் கவனித்தார். இன்று அவரது பெயரால் நடைபெறும் எடப்பாடியாரின்
ஆட்சியிலும் கூட காவல்துறைக்கு நல்ல மரியாதை கொடுத்துத்தான்
வைத்துள்ளார்கள். ஆனால் ஒரு மாஜிஸ்திரேட்டை சாதாரண காவலர் இழிவுபடுத்தி
பகிரங்கமாக பேசியிருப்பது தமிழகம் இதுவரை காணாத அதிர்ச்சி சம்பவம்.
நடு ரோட்டில் வைத்து "ஹைகோர்ட்டாவது....." என்று ஒரு அரசியல்வாதி
பேசினாரே.. அப்போதே ஹைகோர்ட் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால்
நிச்சயம் இந்தக் காவலர் அந்த மாஜிஸ்திரேட்டை அசிங்கப்படுத்தியிருக்க
மாட்டார்.
ஆனால் அன்று ஹைகோர்ட் அந்த அரசியல்வாதியை மன்னித்து விட்டதாலும்,
காவல்துறை அந்த அரசியல்வாதியை கடைசி வரை கைது செய்யாமல் விட்டதாலும் இன்று
ஒரு மாஜிஸ்திரேட் அவமரியாதைக்குள்ளாகியுள்ளார். இது நிச்சயம்
நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள பகிரங்க சவாலாகவே பார்க்கப்படுகிறது.
சம்பவத்தன்று, காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் 7 முறை
பென்னிக்ஸ் லுங்கி மாற்றப்பட்டதாக சொல்கிறார்கள்..
தொடர்ந்து ரத்த
போக்கால், லுங்கி ஈரமாகி கொண்டே இருந்திருக்கிறது.. வாசலிலேயே காத்து
கிடந்த மனைவியிடம், " மாத்தறதுக்கு துணி வேணும்.. வேட்டி வேணாம், லுங்கி
எடுத்துட்டு வாங்க" என்று கேட்டு கேட்டு வாங்கி வந்துள்ளனர்.. அப்போதே
வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்ததாம்.
இதை விட இன்னும் ஒரு அதிர்ச்சியாக தந்தை மகனின் உடலில் அத்தனை காயங்கள்
இருந்தும் கூட அவர்களை சிறையில் அடைக்கலாம் என்று மனசாட்சியே
இல்லாமல்உத்தரவிட்ட அரசு பெண் டாக்டர் வெண்ணிலா இன்று மருத்துவ விடுப்பில்
போயுள்ளார்.
இத்தனை அமளிகள் நடக்கும் நிலையில் அவர் எப்படி மருத்துவ
விடுப்பில் அனுமதிக்கப்பட்டார் என்பது இன்னொரு கேள்வியாக எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மனதை பதை பதைக்க வைக்கும்
அறிக்கையை கொடுத்துள்ளார்.
அப்பாவையும் மகனையும் விடிய விடிய அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பெண்
காவலர் ஒருவர் சாட்சியம் அளித்திருப்பதாக அவர் அதிர வைத்துள்ளார்.
விடிய
விடிய அடித்ததால்தான் இருவரும் இறந்தனர் என்பதற்கு இதை விட வலுவான
சாட்சியம் இருக்க முடியாது என்பதால் இது காவல்துறைக்கு பெரும் பின்னடைவாக
பார்க்கப்படுகிறது. சக காவலர்களின் செயலைப் பார்த்து வெதும்பிப் போய்த்தான்
அந்த பெண் காவலரே சாட்சியம் அளித்திருக்கிறார். என்ன இருந்தாலும் அவர்
பெண்தானே.. மனதில் கொஞ்சமாவது ஈரம் இருக்கத்தானே செய்யும். அதனால்தான்
உயிரைப் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் சொல்லியுள்ளார். அவரைப்
பாராட்டியாக வேண்டும். கூடவே பாதுகாக்கவும் வேண்டும்.
இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில்
தற்காலிகமாக,அவசரமாக சிபிசிஐடி வசம் இந்த வழக்கை ஹைகோர்ட் கிளை
ஒப்படைத்துள்ளது. சாட்சியங்கள் அழிக்கப்படும் என்றும் ஹைகோர்ட் கிளை அச்சம்
தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே சிசிடிவி கேமராவை தானாக அழியும் வகையில்
செட் செய்து வைத்து விட்டதாக மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதை வைத்துப் பார்த்தால் அப்பா மகனை அடித்த விஷூவல் தடயம்
அழிக்கப்பட்டிருக்கலாம் என்றுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. இதெல்லாம்
மிகப் பெரிய குற்றச்சாட்டுக்களாக மாறி நிற்கின்றன.இந்த விவகாரம் தற்போது கோர்ட்டுக்குப் போய் விட்டதால் யாரும் இதைப் பற்றி விரிவாகப் பேச முடியாதுதான்.. ஆனால் காவல்துறைக்கு ஒரு சிலரால் ஏற்பட்டு விட்ட இந்த கொடும் களங்கத்தைத் துடைக்க அதிமுக அரசு உறுதியான நடவடிக்கையில் இறங்குவதுதான் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெயர் கெடாமல் காக்க அவர்கள் செய்யும் செயலாக இருக்க முடியும். இல்லாவிட்டால் நாளை ஜெயலலிதா பெயரில் நடந்த ஆட்சியில் காவல்துறையின் செயல் என்றுதான் வரலாறு பேசும். அது மறைந்த ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்ப்பதாக ஆகாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக