திங்கள், 8 ஜூன், 2020

மருத்துவமனையில் இடமில்லை: ஆம்புலன்சிலேயே இறந்த கர்ப்பிணி பெண்


BBC : உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நீலமும் அவரது கணவர் விஜேந்தர் சிங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள்.
30 வயதாகும் நீலம் எட்டு மாத கர்ப்பிணி. இவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.
வெள்ளிகிழமையன்று நீலமுக்கு வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி, அரசு மருத்துவமனை உட்பட எட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.
ஆனால் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லாத காரணத்தினால் அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.
“முதலில் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர் ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

பின்னர் கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் அரசு மருத்துவமனையான ஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் ஆனால் எங்கேயும் அவரை அனுமதிக்கவில்லை”, என நீலமின் கணவர் தெரிவித்துள்ளார்.
கடைசியில் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டபோது, அவரது உயிர் ஏற்கனவே பிரிந்திருந்தது.
இது குறித்து விசாரணை நடத்த கௌதம் புத் நகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: