திங்கள், 4 மே, 2020

கொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு

savukkuonline.com - சவுக்கு : மும்பை தாராவி - கொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
 கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.   ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, கொரொனா சோதனை, கண்காணிப்பு ஆகியவற்றுக்கான எவ்வித தயாரிப்புகளும் செய்யப்படவில்லை.
 மத்திய அரசின் விஞ்ஞானிகள் கொரொனா நோய் பரவலை எதிர்கொள்ள அளித்த அறிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது என்பது குறித்து இக்கட்டுரைத்தொடரின் முதல் பாகத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
 அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மருந்தியல் துறையின் தலைவர் நவீத் விக், “நடவடிக்கைகளை எடுத்தால் நாம் தப்பிக்க முடியும்” என்பதை, கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிடம் 29 மார்ச் 2020 அன்று  வலியுறுத்தினார்.

 “விவாதம் விவாதம் என்று நாம் மிகவும் காலம் தாழ்த்தி விட்டோம்.  ஆனால் செயலில் எதுவும் செய்யவில்லை.   இல்லை.  நாம் உண்மையை சொல்லியே ஆக வேண்டும்” என்று நவீத் விக் அக்கூட்டத்தில் கூறினார்.
 “மும்பை, பூனா, டெல்லி, அல்லது பெங்களூரு மக்களுக்கு அவர்கள் நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரியப்படுத்தாமல் விட்டால்,  700 மாவட்ட மக்களுக்கு நாம் எப்படி உண்மையை வெளிப்படுத்த போகிறோம்” என்று அக்குழுவின் மற்றொரு உறுப்பினர் அதே கூட்டத்தில் கூறினார்.
 24 மார்ச் அன்று பிரதமர் மோடி நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்த நான்கு நாட்களுக்கு பிறகு, மருத்துவ வல்லுனர்கள் கொரொனா தடுப்புக்கான சிறப்பு குழு, டெல்லியின் அகில இந்திய மருத்துவ கழகத்தில் கூடியது.
 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்  நோய் பரவல் தடுப்புத் துறையின் தலைவர் ராமன் கங்கேட்கர், இக்கூட்டத்தில் பங்கேற்றார்.  அவரோடு,  அரசின் முக்கிய மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
 அக்கூட்டத்தின் பதிவுகளை ஆராய்கையில், முன்கூட்டிய திட்டமிடல் அல்லாத லாக்டவுனை அறிவித்த பின்னால் கூட, அரசு, கொரொனா பரவலை தடுப்பதற்கான சோதனை குறித்த தயாரிப்பு வேலைகளை முழுமையாக செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.  அந்த நிலையில் பெரிதும் குழப்பம் நிலவியது. மருத்துவத் துறை நிபுணர்கள், முன்கூட்டியே உரிய திட்டங்களை அளித்தும் அதை செயல்படுத்தத் தவறிய  அரசின் நிலைபாட்டால் விரக்தியடைந்தனர்.
 லாக்டவுனை செயல்படுத்தும் சமயத்தில், அரசு, அதன் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே உதாசீனப்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது.  பிப்ரவரி மாதம் அரசிடம் ஒரு விரிவான ஆராய்ச்சி அறிக்கையை நிபுணர் குழு அளித்தது.   அந்த அறிக்கையில், முழுமையான மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட லாக்டவுனுக்கு பதிலாகசமூகம் தானாக முன்னெடுக்கும் சுய தனிமைப்படுத்தலை அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
இந்தியாவில் கொரொனா அதிக அளவில் பரவும் என்று எச்சரித்த விஞ்ஞானிகள், அரசு அது வரை எடுத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று தெரிவித்தனர். கொரோனா சோதனைகள், தனிமைப்படுத்தலுக்கு தேவையான இட வசதிகள், நாடு முழுக்க கண்காணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.  இந்த அறிக்கையை தயாரித்த பல விஞ்ஞானிகள், பின்னாளில் அரசு அமைத்த கொரோனா தடுப்புக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.
 ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த விஞ்ஞானிகள் அளித்த பரிந்துரைகள் கேட்பாரற்று கிடந்தது.  இந்த அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல், அரசு, எவ்வித முன்னறிவிப்புமின்றி, நான்கு மணி நேர அவகாசத்தில், ஆயிரக்கணக்கான ஏழைகள், புலம் பெயர் தொழிலாளர்களை கடும் சிரமத்துக்கு ஆளாக்கிய லாக்டவுனை அறிவித்தது.
 இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் தெரிவித்தபடி,  நிதி ஆயோக் அமைப்பின் மருத்துவ ஆலோசகர் வினோத் கே பால், இந்த லாக்டவுன், தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படும். கொரொனா பரவலை முழுமையாக தடுக்க பயன்படாது என்று கூறினார்.
 அவர் பரிந்துரைத்த திட்டங்களின்படி, நெருக்கடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில், அதிக அளவில் தனிமைப்படுத்தலை செய்ய இட வசதிகள், ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கே அத்தியாவாசிய பொருட்களை வழங்குதல், நோய்தொற்று பரவல் தொடர்பாக உடனடி தகவல் பரிமாற்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவல் கண்காணிப்பு குழு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மற்றும், தீவிர சிகிச்சை பிரிவுகளை அதிகரித்தல், ஆகியவை செய்யப்பட வேண்டும், இவற்றை செய்ய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
 வினோத் பால் பரிந்துரைத்த இந்த நடைமுறைகள், புதிதானவை அல்ல.   பிப்ரவரி மாதமே, அரசின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலானது என்பது, ஆவணங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.  நோய் அறிகுரி உள்ள  ஒவ்வொரு இரண்டாவது நபரையும் 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்தினால், 62 சதவிகித நோய் பரவலை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்தனர்.  நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், இத்தகைய நடவடிக்கை பெரிதும் உதவும் என்று அவர்கள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தனர்.
இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, இவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் ஏற்றுக்கொள்ளவே அரசு ஒரு மாதம் எடுத்துக் கொண்டது.
 இக்கட்டுரைக்காக, மத்திய அரசின் சுகாதாரத்துறைஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், ஆகியோருக்கு அனுப்பிய கேள்விகளுக்கு பதில் வரவே இல்லை.  நினைவூட்டுத்ல்கள் அனுப்பியும் பதில் வரவில்லை.
 கொரொனாவை கையாள்வதில் என்னென்ன குளறுபடிகள் நடந்தது என்று பார்ப்போம்.
 பிப்ரவரி : ஆராய்ச்சியின் முடிவில் அளிக்கப்பட்ட எச்சரிக்கை
 ஜனவரியில், உலக சுகாதார நிறுவனம் உலகை கொரொனா குறித்து எச்சரித்தது. இந்தியாவில் முதல் கொரொனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பாகவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள், தங்களைப் போன்ற மற்ற விஞ்ஞானிகள், இதர அமைப்புகளோடு சேர்ந்து, இந்தியா இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆராயத் தொடங்கினர்.
 பிப்ரவரி இறுதி வாரத்தில், அவர்கள் இரண்டு ஆய்வறிக்கைகளை தயார் செய்தனர்.  ஒரு அறிக்கை ஆய்வு அறிக்கை. மற்றொரு அறிக்கை, கொரொனா பரவல் எப்படி இருக்கும் என்று தரவுகளின் அடிப்படையில் உருவான மதிப்பீட்டு அறிக்கை.  இவ்விரு அறிக்கைகளும், இந்திய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.  இந்த இதழின் ஆசிரியர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்க்கவா.   இந்த இரு ஆய்வறிக்கைகளும் அரசின் வசம் இருந்தன.
முதல் அறிக்கை, இவ்வாறு கூறியது. இந்த அறிக்கையை, மத்திய அரசின் விஞ்ஞானிகள் பிரணாப் சேட்டர்ஜி, அனூப் அகர்வால் மற்றும் ஸ்வரூப் சர்க்கார், மவுலானா மருத்துவ கல்லூரியை சேர்ந்த நாஸியா நாகி, இந்திய நுண்ணியிரியல் துறையின் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த பாபதோஷ் தாஸ், உலக சுகாதார நிறுவனத்தின் சயந்த்தன் பேனர்ஜி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிவேதிதா குப்தா மற்றும், ராமன் கங்கேத்கர் ஆகியோர் தயாரித்தனர்.
அந்த அறிக்கை, சீனாவைப் போல, லாக்டவுன் நடவடிக்கைகளை கையாளக் கூடாது என்று வலியுறுத்தியது.  சீனாவில் செய்வதை போல, லாக்டவுன் மேலிருந்து உத்தரவிடுவதன் மூலம் செயல்படுத்தபடாமல், சமூகமே தானாக முன்வந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை செய்ய ஊக்குவித்தல், அதிக அளவில் பயன் தரும்.  இதை எளிதாக செயல்படுத்த முடியும். இதன் மூலம் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

கட்டாய பொது முடக்கத்துக்கு எதிராக அறிவுரை வழங்கிய விஞ்ஞானிகளின் அறிக்கை. 
இரண்டாவது அறிக்கை, கணிதத்தின் அடிப்படையில், கொரொனா பரவல் எப்படி இருக்கும் என்பது தொடர்பான மதிப்பீடு.   மருத்துவ ஆராய்ச்சித் துறையை சேர்ந்த சந்தீப் மண்டல், அனூப் அகர்வால், அமர்த்தியா சவுத்ரி,  ஸ்வரூப் சர்க்கார், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை சேர்ந்த, தருண் பட்நாகர், மனோஜ் முர்ரேக்கர், ராமன் கங்கேத்கர், மற்றும் லண்டன் இம்பீரியல் காலேஜை சேர்ந்த நிமலன் அரினமின்பதி ஆகியோர் இந்த இரண்டாவது அறிக்கையை தயாரித்தனர்.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் பெருநகரங்களான, டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரில் கொரொனா பரவல் எப்படி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.   எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், நோய் தொற்று உச்சத்தில் இருக்கும் நேரத்தில் டெல்லியில் மட்டும் 15 லட்சம் மக்கள் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டறியப்பட்டது.   நோய் தொற்று ஏற்பட்டவர்களில் இரண்டில் ஒருவரை தனிமைப்படுத்தி வைத்தால், நோய் பரவலை 62 சதவிகிதம் கட்டுப்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கை கூறியது.

கணிதத்தின் அடிப்படையில், கொரொனா எப்படி பரவக்கூடும் என்ற விஞ்ஞானிகளின் பரிந்துரை 
இந்த இரண்டு அறிக்கைகளையும் தயாரிப்பதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில், சர்க்கார், கங்கேத்கர், குப்தா, முர்ரேக்கர் மற்றும் பட்நாகர் ஆகியோர் அரசு கொரொனா தடுப்புக்காக அமைத்த 21 நபர் குழுவின் உறுப்பினர்களாவர்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் சர்க்கார், மற்றும் இந்த குழுவின் உறுப்பினர் செயலர் கங்கேத்கர் ஆகியோர், அரசின் அறிவியல் ஆலோசகர்களில் முக்கியமானவர்கள்.  இவர்களில் கங்கேத்கர், அரசு கொரொனா பரவல் குறித்து தினமும் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பவர்.   இவர் ஊடகங்களையும் இது தொடர்பாக சந்திக்கிறார்.
இந்த அறிக்கைகளை தயாரித்த விஞ்ஞானிகளில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள்,  சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  “இந்தியா போன்ற நாடுகளில், இது போன்ற லாக்டவுன் நடவடிக்கைகள் பணக்காரர்களுக்குத்தான் தனிமையை கொடுக்கும்.   அவர்கள் அதிக பரப்பளவு கொண்ட பகுதிகளில் வசிக்கிறார்கள்.  உயர் அடுக்கு குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். அவர்களால் இந்த வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஏழைகளுக்கு இது எந்த பாதுகாப்பையும் தராது.  அவர்களை நேரடியாக அணுகி, சோதனைகள் செய்து, நோய் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தினால் மட்டுமே, இது பயன் தரும்.  இதுபோன்ற லாக்டவுன்கள்,  ஒன்றாக தங்கியிருக்கும் ஏழைகளுக்குள் நோய் பரவ வகை செய்யும்.  நகரங்களில் வசிக்கும் ஏழைகள், மிக குறுகிய பகுதிகளில் வசிக்கிறார்கள்.   அவர்களில் பலருக்கு தனி கழிப்பிடங்கள் இல்லை.  பொதுவான கழிப்பிடங்களையே பகிர்ந்து கொள்கிறார்கள்.   இந்த லாக்டவுன் காரணமாக பல வாரங்களுக்கு அவர்கள் பொது கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
கொரொனா தொற்று உள்ள ஒருவரோடு நூற்றுக்கணக்கானோர்  பொது கழிப்பிடத்தை பல வாரங்களுக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.  இந்த லாக்டவுன் கட்டுப்பாட்டினால் அவரால் நோய் தொற்று ஏற்பட்டால் மருத்துவனைக்கோ, அதிகாரிகளை அணுகவோ கூட முடியாமல் போகும்” என்றனர்.
அரசு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட இந்த அறிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
மார்ச் : கொரொனா தடுப்புக் குழு மற்றும் லாக்டவுன்
18 மார்ச் அன்று அரசு, இந்தியாவின் சிறந்த பொது சுகாதார நிபுணர்களை கொண்ட ஒரு கொரொனா தடுப்புக் குழுவை நியமித்தது.   நிதி ஆயோகின் உறுப்பினர் வினோத் பால், இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.  இந்த குழு ஆலோசனைகள் செய்து கொண்டிருக்கும்போதே, 24 மார்ச் அன்று பிரதமர், நாடுதழுவிய 21 நாள் லாக்டவுனை அறிவித்தார்.
நான்கு நாட்கள் கழித்து, கொரொனா தடுப்புக் குழு கூடியது.
இந்த தருணத்தில்தான், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் மருந்தியல் துறையின் தலைவர் நவீத் விக் “கொரொனா பரவல் தொடர்பாக இந்த சிறப்பு குழு என்ன செய்ய போகிறது இது வரை நாம் என்ன செய்து விட்டோம்.   ஏதாவது இது வரை செய்திருக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கோபமாக கூறினார்.
 இவருக்கு பதில் சொன்ன அகில இந்திய மருத்துவக் கழகத்தின் தொற்றுநோய் பிரிவு தலைவர் கங்கேத்கர், “நல்ல கேள்விதான்.  என்னிடம் கேட்காதீர்கள்.  நான் இந்த குழுவுக்கு தலைவர் இல்லை.  (நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால்,  மத்திய சுகாதாரத் துறை செயலர் ப்ரீத்தி சுதன், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநர் பார்க்கவா ஆகியோர்தான் குழுவுக்கு தலைவர்கள்.  ஆனால் இம்மூவரில் ஒருவர் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை)
 நானும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார் கங்கேத்கர்.
 அக்கூட்டத்தில் பங்கேற்ற தொற்றுநோய் நிபுணர் ஒருவர், “லாக்டவுன் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை.  யார் யாருக்கு மூச்சுத் திணறல் இருக்கிறது என்பதை நாம் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.  ஆனாலும் மருத்துவமனைகளுக்கு மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே நோயாளிகள் வருகிறார்கள்.  இதனால், நாம்தான் மக்களை வீடு தேடிச் சென்று சந்திக்க வேண்டும்.
ஆனால் இதை எப்படி செய்வது ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் மூலமாகத்தான் இதை செய்ய முடியும்.  இதற்கு மாவட்ட நிர்வாகங்களின் உதவியும் வேண்டும்.  அது ஒன்றுதான் வழி”  என்றார்.   
இவர்களின் கூற்றுப்படி, நோய் பரவல் கண்காணிப்புக்கு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  நோய் பரவலை கண்காணிக்கும் பணிகளை, லாக்டவுன் நடவடிக்கை முடக்கி விட்டது.   மேலும், நோய் கண்காணிப்பை எப்படி செய்வதென்று எந்த திட்டமிடலும் இல்லை.
இந்த கருத்தை, இக்கூட்டத்தில், பங்கேற்ற மற்ற சில உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டனர்.   காய்ச்சல், சளி போன்ற உபாதைகளோடு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள், லாக்டவுன் காரணமாக வருவதேயில்லை என்பதை சுட்டிக் காட்டினார்கள்.
ஒரு மூத்த தொற்றுநோய் நிபுணர் தன் பெயரை  வெளியிட வேண்டாம் கேட்டுக்கொண்டு பேசினார்.  “நோய் கண்டறிய சோதனைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான வடிவமோ, முறையோ இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இனி வரும் நாட்களில்தான், நாடு முழுக்க சோதனைகளை எப்படி மேற்கொள்வது என்பது அகில இந்திய மருத்துவக் கழகத்தில்   விவாதித்து முடிவெடுக்கப்படும்.
 ஒருவருக்கு நோய் உள்ளது என்று எந்த சமயத்தில் முடிவெடுப்பது, (case definition) என்பது குறித்தும், எத்தகைய கண்காணிப்புகளை மேற்கொள்வது என்பது குறித்தும் நீண்ட விவாதம் நடந்தது.   இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை யார் மேற்கொள்வது, வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொள்வது சரியா, நோய் தொற்று உள்ளவர்களை மருத்துவமனைக்கு வரவழைப்பது சரியா, லாக்டவுன் காலத்தில் எப்படி ஒருவர் மருத்துவமனைக்கு வருவார் என்பவை குறித்தெல்லாம் விவாதங்கள் நடந்தன” என்றார்.
அக்குழுவின் மற்றொரு உறுப்பினர் அக்கூட்டத்தில், “லாக்டவுன் தொடங்கும் முன்பே நாம் இதை கூறி வருகிறோம்.  மக்கள் மருத்துவமனைகளை தேடி செல்ல மாட்டார்கள்.  இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் என்ன செய்யப் போகிறது.  பல மாநிலங்கள், பாதிக்கப்படும் மக்களே சுயமாக தகவல் தெரிவிக்க வகை செய்யும், செல்பேசி செயலிகளை உருவாக்கி விட்டன” என்று தெரிவித்தார்.
“சோதனை செய்வதற்கான  நடைமுறைகள் இது வரை உருவாக்கவில்லை  இது குறித்து, அகில இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநரோடு விவாதிக்கிறேன்” என்று கங்கேத்கர் அதே கூட்டத்தில் தெரிவித்தார்.
 ஏப்ரல் : வினோத் பால்.  புத்துயிர் அளிக்கப்பட்ட பிப்ரவரி ஆய்வறிக்கைகள்.
ஏப்ரல் முதல் வாரத்தில்,  நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், அரசிடம் தொடர் நடவடிக்கைகளுக்கான திட்டத்தை பரிந்துரைத்தார்.  அகில இந்திய மருத்துவக் கழகத்தின் கங்கேத்கர் மற்றும் இதர விஞ்ஞானிகள் அளித்த ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினர்.
மேலும் சமூக கண்காணிப்பு, சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
லாக்டவுன் நீக்கப்பட வேண்டும் என்று பால் கூறவில்லை.  மாறாக அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, இந்த லாக்டவுன் காலத்தை நோய் பரவலை சமாளிக்க தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பால். வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வினோத் பால் பரிந்துரைத்தார்.
தொடர் கண்காணிப்பு மற்றும், சோதனைகள்,  நோய் தொற்று உள்ளவர்களை, அரசே தனிமைப்படுத்தி வைக்க உதவும்.  முடியாத இடத்தில், சுய தனிமை செய்து கொள்ளலாம் என்றும் பால் கூறினார்
6 ஏப்ரல அன்று, இந்த கொரொனா தடுப்புக் குழு,  அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய தனித் தனி குழுக்களை அமைத்தது.  14 ஏப்ரல் அன்று, வீடு வீடாக சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.  படிப்படியாக சோதனைகளை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.  ஆனால்  எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில்தான் மிகக் குறைவான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கசப்பான உண்மை.  இந்த குழப்பமான சூழலில்தான் திட்டமிடப்படாத, முன்னறிவிப்போ, முன்தயாரிப்போ இல்லாத  பொதுமுடக்கம் 3 மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எழுதியவர்கள்
நிதின் சேத்தி @nit_set
குமார் சம்பவ் @kum_sambhav,
ஆங்கில மூலத்தின் இணைப்பு
https://www.article-14.com/post/no-action-taken-frustration-in-national-covid-19-task-force

கருத்துகள் இல்லை: