ஞாயிறு, 11 நவம்பர், 2018

15 முக்கிய தொழிலதிபர்களுக்கு ரூ.3.50 லட்சம் கோடி கடன் தள்ளுபடி’: பிரமதர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

tamil.thehindu.com : நாட்டில் உள்ள 15 முக்கியத் தொழிலதிபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்திருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக சத்தீஸ்கரில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சாரம்மா பகுதியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 4 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி, தனக்கு வேண்டப்பட்ட 15 முக்கிய தொழிலதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த ரூ.35 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால், அதேஅளவு 10 மடங்கு நிதியைப் பிரதமர் மோடி பெரும் பணக்காரர்களுக்குக் கடனாக வழங்கி தள்ளுபடி செய்திருக்கிறார்.
 என்னைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேசத்தையும், சத்தீஸ்கரையும் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வேளாண் மையங்களாக உருவாக்க இருக்கிறேன். இதன் மூலம் நாட்டுக்கே உணவு, பழங்கள், காய்கறிகள் வழங்க முடியும்.
பிரதமர் மோடி அரசின் கஜானா சாவியை 15 முக்கிய பணக்காரர்களின் கையில் கொடுத்திருக்கிறார். ஆனால், கஜானாவின் சாவியை விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், பழங்குடிகள் ஆகியோரிடம் வழங்க காங்கிரஸ் இருக்கிறது. மோடியோ 15 முக்கிய தொழிலதிபர்களை நம்புகிறார், நாங்கள் கோடிக்கணக்கான மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
முதல்வர் ராமன் சிங் ஊழலில் சிக்கி இருக்கிறார். சிட்பண்ட் ஊழலில் ரூ.5 ஆயிரம் கோடியைக் காணவில்லை. இந்த ஊழலில் 60 பேர் இறந்திருக்கிறார்கள். 310 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, ஆனால், யாரும் சிறைக்குச் செல்லவில்லை. முதல்வரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொது வழங்கல் திட்டத்தில் ரூ.36 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழலில் முதல்வர் ராமன் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், முதல்வர் பதில் அளிக்க மறுக்கிறார்.
சர்வதேச ஊழல்வாதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த பனாமா பேப்பரில் ராமன் சிங் மகன் பெயர் இருக்கிறது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தானில்கூட இந்த ஊழலில் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறையில் தள்ளப்பட்டுவிட்டார்.
 கடந்த 15 ஆண்டு கால ராமன் சிங் ஆட்சியில் 40 லட்சம் இளைஞர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். 60 சதவீத நிலங்களுக்கு முறையான நீர்ப்பாசன வசதி இல்லை. 56 ஆயிரம் ஏக்கர் நிலம் பழங்குடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, முதல்வரின் நண்பர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட இந்த மாநிலத்தில் இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்காமல், வெளிமாநிலத்தில் இருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து வேலை வழங்குகிறது அரசு. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்குத்தான் வேலையில் முன்னுரிமை தரப்படும். சொந்தமாக நிலம் இல்லாத குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும்''.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

கருத்துகள் இல்லை: