புதன், 14 நவம்பர், 2018

அமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்!

மின்னம்பலம் : அமெரிக்காவிடமிருந்து அதிகமாக எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை வாங்கத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்!ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வர்த்தகத் தடை விதித்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுடன் டெஹ்ரானின் அணு ஆயுத ஒப்பந்தங்களை எதிர்த்து ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான தடையை அமெரிக்கா நீக்கியது. இந்நிலையில் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற கிழக்காசிய மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடையே பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரான விஜய் கோகலே, “அமெரிக்காவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அந்நாட்டிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலர் மதிப்புக்குக் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா தனது உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கான தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: