வியாழன், 15 நவம்பர், 2018

பணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Savukku

சவுக்கு : மிகப் பெரிய கொள்கை முடிவுகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாவது ஆண்டை அரசு கொண்டாடவில்லை. மற்ற அனைத்து பெரிய கொள்கை முடிவுகளின் ஆண்டு நிறைவையும் அரசு கொண்டாடி இருக்கிறது. ஏன் இந்த மாற்றம்?
நிதி அமைச்சர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அவரது அறிக்கையை, 2016 நவம்பர் 8, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பரிந்துரை செய்த, ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டத்தின் விவரங்களை பொருத்திப்பார்த்து அணுக வேண்டும். கறுப்புப் பணம் அல்லது கள்ள நோட்டை ஒழிக்க பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்றது அல்ல என வாரியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆக, பிரதமர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தபோது குறிப்பிட்ட இரண்டு முக்கிய நோக்கங்கள், இந்த முடிவு அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே அர்த்தமற்று போயின. எனவே, வங்கிகளில் பணம் வந்து குவிவது தெளிவானவுடன் அரசு ரொக்கமில்லாச் சமூகம் பற்றி பேசத் துவங்கியதில் வியப்பில்லை.  அதன் பிறகு, குறைந்த ரொக்கம் கொண்ட பொருளாதாரம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத பொருளாதாரத்தை அமைப்பு சார்ந்ததாக மாற்றுவது பற்றி பேசப்பட்டது. இந்த டெபாசிட்கள் காகிதத் தடத்தை உருவாக்கி, கறுப்புப் பணப் புழக்கத்தைக் கடினமாக்கும் என்று சொல்லப்பட்டது.

துவக்கத்தில், மின்னணுப் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கவே செய்தது என்றாலும், ரொக்கம் மேலும் சரளமாகத் துவங்கியதும் இதைத் தக்க வைக்க முடியவில்லை. எப்படி இருந்தாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னதாகவே நாடு குறைவான ரொக்க பொருளாதாரத்தை நோக்கி நகரத் துவங்கியிருந்தது, அது தொடர்கிறது. 2016, நவம்பர் 7இல் இருந்ததைவிட, ரொக்கத்தின் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டது. ஆனால், பண மதிப்பு நீக்கத்திற்கு முன் இருந்த ரூ.18 லட்சம் கோடியைவிட இப்போது புழக்கத்தில் உள்ள ரொக்கம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. பணமதிப்புக்கு முன்னர் இருந்த அளவு நீடித்தால் இருந்திருக்ககூடிய அளவைவிட இது குறைவானது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
நிதி அமைச்சர், பணமதிப்பு நீக்கத்தின் சாதனைகளாக மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். முதல் விஷயம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பது. இரண்டாவது விஷயம், வரி தாக்கல் பரப்பு அதிகரித்து வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது. மூன்றாவது விஷயம், காகிதத் தட உருவாக்கம் எதிர்காலத்தில் கறுப்புப் பண உருவாக்கத்தை தடுக்கும் என்பதாகும். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ரிசர்வ் வங்கி கருத்தை எதிரொலிப்பது போல, ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்வது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் அல்ல என்று அவர் உணர்த்தியிருக்கிறார்.
காகிதத் தடத்தை உருவாக்கும் என்பதால், அதிக மதிப்புள்ள நோட்டுகளாக இருந்த கறுப்புப் பணம், மீண்டும் வங்கிகளுக்கு வராது என்று கருதப்பட்டது. அப்போதைய அரசு வழக்கறிஞர், ரூ.3 முதல் ரூ.4 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பாது என உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார். எல்லா பணமும் வங்கிக்கு திரும்பி வரும் என விரைவிலேயே தெரியவந்தது. ஏனெனில், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றும் வழியை கண்டறிந்திருந்தனர். இது நல்லதுதான், ஏனெனில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பற்றி விசாரிக்க முடியும் என அரசு கூறத் துவங்கியது.
வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேருக்கு மேல் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆனால், ரொக்கத்தை கறுப்புப் பணத்திற்கு சமமாகக் கருதும் தவறான கருத்து இருக்கிறது. வர்த்தகங்களுக்கு ரொக்கம் செயல்முறை மூலதனமாக தேவை. இல்லங்கள் ரொக்கத்தைப் பரிவர்த்தனைக்காகவும், அவசரத் தேவைக்காகவும் வைத்திருக்கின்றன. ஆக, ஒரு பெட்ரோல் நிலையம் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு 50 நாட்களில் தினசரி கலெக்‌ஷன் அடிப்படையில் ரூ.20 கோடி டெபாசிட் செய்திருக்கலாம். இது கறுப்புப் பணம் அல்ல. அதிக ரொக்கம் டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலானோர், அந்தத் தொகையைக் கையில் உள்ள ரொக்கமாக பாலன்ஸ் ஷீட்டில் கொண்டுவர வழி கண்டறிந்திருப்பார்கள். எனவே, டெபாசிட் செய்த பணம் கறுப்பு பணம் என நிருபிப்பது வருமான வரித்துறைக்குக் கடினமானது. மேலும், வழக்கமாகச் செய்யப்படும் சோதனைகளைத் தவிர, இந்த அளவுக்குக் கணக்குகளை சோதனை செய்வதற்கான திறன் வருமான வரித்துறைக்கு இல்லை என்றே தரவுகள் உணர்த்துகின்றன.
வருமான வரி தாக்கம் அதிகரித்து, வருமான வரி உயர்ந்துள்ளது உண்மைதான். ஆனால், நேரடி வரி மற்றும் ஜிடிபிக்கான விகிதம் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு அதிகரித்துவிடவில்லை. கறுப்புப் பண பொருளாதாரம் ஜிடிபியில் 60 சதவீரம் என்று சொல்லப்படுகிறது. இதில் 10 சதவீதம் வருமான வரி பரப்பில் வந்திருந்தால்கூட, கூடுதல் வரியாக ஜிடிபியில் 2 சதவீதம்  வந்திருக்கும். அது நடக்கவில்லை.
வருமான வரி தாக்கலில் 67 சதவீதம் வரி இல்லாத அல்லது குறைந்த வரிக் கணக்குகள் என்பது தெரிந்த விஷயமாகும். உண்மையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் குறைவுதான். ஜிஎஸ்டியில்கூட 5 சதவீதத்தினர் 95 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்துவதாக நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். 1.1 கோடிப் பேர் பதிவு செய்துகொண்டிருந்தாலும், 67 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துவதாகவும் அவர் குறைபட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு முதல் தாமதமான வரி தாக்கலுக்காக அறிமுகம் செய்யப்பட்ட அபராதம் வரி தாக்கல் உயர்வுக்கு காரணமாக இருக்கலாம். எனவே அதிகமானவர்கள் இந்த முறை வரி தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன் பலரும் வரி தாக்கல் செய்ய மார்ச் 31 வரை காத்திருப்பார்கள். ஏழாவது ஊதிய கமிஷன் அறிக்கை பரிந்துரையிலான ஊதியம் அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாகும். வரி வலைக்குள் வந்துள்ள பிரிவிலேயே பெரும்பாலான உயர்வு ஏற்பட்டிருக்கும். எனவே வரி உயர்வு அதிகம் இருக்காது. வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை உயர மற்ற காரணங்கள் இருக்கின்றன. பணமதிப்பு நீக்கம் இதற்கு ஓரளவு மட்டுமே காரணம்.
டிஜிட்டல்மயமாக்கல் அதிகரிப்பு பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாமல் செய்யப்பட்டிருக்கலாம். நைஜிரியா குறைந்த ரொக்க ஜிடிபி கொண்டிருந்தாலும், பெரிய கறுப்புப் பண பொருளாதாரம் கொண்டுள்ளது. ஜப்பான் அதிக ரொக்க ஜிடிபி கொண்டிருந்தாலும் குறைந்த கறுப்புப் பணப் பொருளாதாரம் கொண்டுள்ளது. எனவே டிஜிட்டல்மயமாக்கல் கறுப்புப் பண உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில்லை.
இறுதியாக, பொருளாதார அமைப்புமயமாக்கல் கறுப்புப் பணப் பொருளாதாரத்தை குறைக்க உதவுவதில்லை. ஏனெனில் அமைப்பு சாராத துறை கறுப்புப் பணத்தை உருவாக்குவதில்லை. இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான வருமானம், வரி வரம்பைவிட குறைந்தவை. இந்த வரம்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. தனிநபர் வருமானத்தைவிட மூன்று மடங்காக உள்ளது. சலுகை மற்றும் கழிவுகளை சேர்த்துக்கொண்டால் இது தனிநபர் வருமானத்தைவிட ஐந்து மடங்காக இருக்கும்.
அருண் குமார்
(கட்டுரையாளர் இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயன்சஸ், மால்கம் ஆதிசேஷையா துறை பேராசிரியர் மற்றும் பணமதிப்பு நீக்கம் மற்றும் கறுப்புப் பணப் பொருளாதாரம் புத்தக ஆசிரியர்.)
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/opinion/columns/arun-jaitley-demonetisation-indian-economy-rbi-note-ban-5441626/

கருத்துகள் இல்லை: