புதன், 14 நவம்பர், 2018

25 ஆண்டுகளாக சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையனை (70 வயது) விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

tamil.thehindu.com: 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பன் சகோதரர் மாதையனை விடுவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த சில மாதங்களில் ஆயிரத்து 457 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த மனிதநேயமற்ற போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்.
வீரப்பனின் மூத்த சகோதரரான 70 வயது மாதையன் கடந்த 1987 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிலோ அல்லது அவர் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளிலோ மாதையனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாதையன் மீது தொடரப்பட்ட மற்ற வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில், பொய்யாக புனையப்பட்ட கொலை வழக்கில் மட்டும் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 1997 ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் விசாரணைக் கைதியாகவும், தண்டனைக் கைதியாகவும் கடந்த 25 ஆண்டுகளாக அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு 8 ஆண்டுகள்  முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் பலமுறை  விடுதலை செய்யப்பட்டனர். அதற்கான தகுதிகளின்படி பார்த்தால் மாதையன் பத்தாண்டுகளுக்கு  முன்பே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
வழக்கமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அந்த வகையிலும் மாதையனை தமிழக அரசு விடுவிக்கவில்லை. இதை எதிர்த்து மாதையன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி மாதையனை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு 16.12.2015 ஆம் தேதி ஆணையிட்டது.
ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு மாதையனை விடுதலை செய்ய மறுத்து விட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு  மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாதையனை விடுவிக்க சிறை நிர்வாகத்தின் பரிந்துரை வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் தான் மாதையன் விடுதலை செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மாதையனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
எனினும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையையும் தமிழக அரசு மதிக்கவில்லை. இதனால் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் மாதையன் தமது இருண்ட சிறை வாழ்வு எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
70 வயதைக் கடந்த மாதையன் நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த இரு ஆண்டுகளில் பலமுறை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த அவரது மகன் ஓராண்டுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனதளவிலும் அவர் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் விடுதலையும், சொந்த ஊர் வாசமும் மட்டுமே அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.
ஆனால், ஏனோ இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுக்கிறது. சிறைத் தண்டனை என்பது குற்றம் செய்தவர்களை திருத்துவதற்காகத் தான். மாதையனைப் பொறுத்தவரை அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, 70 வயதைக் கடந்து, உடல்நலக் குறைவால் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக  சிறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு அப்படி என்ன இன்பம்? என்பது தான் தெரியவில்லை.
எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஆயிரத்து 775 கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்து ஆயிரத்து 457 பேரை விடுதலை செய்த அரசு, மீதமுள்ளோரையும் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யவுள்ளது. அவர்களுடன் சேர்த்து மாதையனையும் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது? என்பது தான் புரியவில்லை.
மாதையனின் வயது மற்றும் உடல்நிலையையும், அவர் செய்யாத குற்றத்துக்காக ஏற்கெனவே 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார் என்பதையும் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக அரசு  விடுதலை செய்ய வேண்டும்.
மாதையனைப் போலவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்தோரையும், வயது முதிர்ந்தவர்களையும் விடுதலை செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளா

கருத்துகள் இல்லை: