சனி, 17 நவம்பர், 2018

இலங்கையில் கஜா!.. வடமாகாணத்தில் ...

இலங்கையில் கஜா!மின்னம்பலம்: கஜா புயலினால் தமிழகத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகமுள்ள வடக்கு மாகாணத்திலும் கஜா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயல் நேற்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில், திருவாரூர், தஞ்சை, நாகை உட்பட 6 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. அங்கு சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
கஜா புயல் காரணமாக இலங்கையிலுள்ள வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பரவலான மழை பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அங்கு, சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், ஊர் காவல் துறை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 100-லிருந்து 200 மீட்டர் வரையிலும் கடல் நீர் உள்வாங்கியிருந்தது. இதனால் இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன.
புயல் கரையைக் கடந்த பின்னரும் மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அனேகமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
காற்றின் வேகம் சற்று அதிகமாகக் காணப்படுவதனால் பல வீடுகளின் வேலிகள் மற்றும் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளன. மின்சாரக் கம்பிகள் புயலினால் சேதமடைந்ததால் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்களும் புயல் காரணமாக வேரோடு சாய்ந்துள்ளன.

கருத்துகள் இல்லை: