புதன், 16 ஆகஸ்ட், 2017

கலைஞர் உடல் நிலை மருத்துவ அறிக்கை ... வீடு திரும்பினார் !

கருணாநிதி:  ஹெல்த் ரிப்போர்ட்!
கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக முதுமை காரணமாக கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆகஸ்டு 16 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தான் வழக்கமாக சிகிச்சை பெறும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘கலைஞருக்கு என்னாச்சு... கலைஞருக்கு என்னாச்சு?” என்று வாட்ஸ் அப் மெசேஜ்கள், போன் அழைப்புகள் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே இன்று காலை 11 மணிக்கெல்லாம் சிகிச்சை முடிந்து காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி.
’’திமுக தலைவர் கருணாநிதிக்கு PEG எனப்படும் செயற்கை உணவுக் குழாய் மாற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல் நலம் இப்போது எப்படி உள்ளது என்பதைதெரிந்துகொள்ளும் முன் அவரது மெடிக்கல் ஹிஸ்டரியைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

கடந்த 2016 டிசம்பர் 1 ஆம் தேதி நீர் சத்து குறைப்பாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இல்லம் திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு முதுமை காரணமாக சளித்தொல்லையும், சுவாசக் கோளாறும் இருந்தது. அதனால் அப்போது அவருக்கு “டிரக்கியோஸ்டோமி” சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.
முதுமை காரணமாக கருணாநிதியின் நுரையீரல் தனது செயல் திறனைக் குறைத்துக் கொண்டிருப்பதால் அவரது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும் சளித் தொல்லையும் அவரது சுவாசத்துக்குப் பிரச்னையாக இருந்தது. இதனால், “டிரக்கியோஸ்டோமி எனப்படும் செயல்முறைப்படி அவரது தொண்டையில் துளையிடப்பட்டு சுவாசக் குழாயோடு செயற்கை குழாய் ஒன்று இணைக்கப்பட்டது. இதன் மூலம் சளி உறிஞ்சப்பட்டு வெளியே எடுக்கப்படும். மேலும் நுரையீரலின் செயல்பாட்டை இந்த கருவி ஊக்கப்படுத்துவதால் சுவாசம் சீராகும். இந்த சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார் கருணாநிதி.
அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கருணாநிதி உணவு எடுத்துக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டதால், அவரது வயிற்றின் வலது மேற்பகுதியில் துளையிட்டு PEG (Percutaneous Endoscopic Gastrostomy) என்ற செயல்முறைப்படி குழாய் பொருத்தப்பட்டது. இதற்கு ’தோல்வழி இரைப்பை துளைப்புக் குழாய்’ என்று பெயர்.

அனுமதிக்கப்பட்ட அளவு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு... abdomen எனப்படும் வயிற்றின் மேற்பகுதியில் சிறிய கோடு அளவில் தோல் கத்திரிக்கப்பட்டு சிறுகுழாய் இரைப்பைக்குள் செலுத்தப்படும். இந்த சிகிச்சை முடிந்து சில மணி நேரத்திலோ அல்லது மறுநாளோ பேஷண்ட் வீடு திரும்பலாம். கருணாநிதி விஷயத்தில் இன்றே வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
முதுமை காரணமாக கருணாநிதியால் திட உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாததால், திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடிகிறது. அதையும் மேற்குறிப்பிட்ட செயல் மூலம் நேரடியாக இரைப்பைக்குள் செலுத்துவதற்காகத்தான் அக்கருவி பொருத்தப்பட்டது. தோலில் துளையிடப்பட்டு, தோலுக்கு கீழே இருக்கும் கொழுப்பு, தசை ஆகிய இரு அடுக்குகளைக் கடந்து இந்தக் குழாய் திரவ உணவை நேரடியாக இரைப்பையில் கொண்டு போய் சேர்க்கிறது. அதன் பின் இரைப்பை அதை செரிமானம் செய்துகொள்ளூம். அதாவது உணவை செயற்கையாக உண்ணும் முறை.
இக்கருவி கருணாநிதிக்குப் பொருத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழாயை மாற்றி புதிதாக பொருத்த வேண்டும். இல்லையேல் அதில் தொற்று ஏற்படக் கூடும். அந்த வகையில் சிலநாட்களாகவே திட்டமிடப்பட்டு இன்று காலை 6.30க்கு காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கருணாநிதி. அவருடன் மகன் தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர் மருத்துவமனை சென்றனர்.
லண்டனில் இருக்கும் ஸ்டாலினுக்கும் இதுபற்றி நேற்றே (ஆகஸ்ட் 15) தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகே இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்த PEG குழாய் புதுப்பிக்கப்பட்டு காலை 11 மணிக்கு வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

கோபாலபுரம் வீட்டிலேயே நவீன மருத்துவ வசதிகள் கொண்ட அறை இருக்கிறது. நர்ஸுகள், டாக்டர்கள் அங்கேயே வருகிறார்கள். ஆனாலும் ஏன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது....
’’கருணாநிதிக்கு இதயம், சிறுநீரகம், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற எவ்வித பிரச்னையும் இல்லை. அவரது முதுமை காரணமாகவே அவர் உடல் சற்றே சுணங்கியிருக்கிறது. கடந்த எட்டு மாதங்களாக அவர் ஓய்வில் கோபாலபுரம் இல்லத்திலேயே இருக்கிறார். இந்நிலையில் அவரை முக்கியமான அரசியல் தலைவர்கள் பார்க்கிறார்களே தவிர, நிர்வாகிகள் தொண்டர்கள் பார்க்க முடிவதில்லை. அவரும் வெளியே சென்று திரும்பினால் சற்றே புத்துணர்ச்சி கொள்வார். மருத்துவமனைக்கு இன்று சென்று வரும்போது பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். இதன் மூலம் தொண்டர்களும் தங்கள் தலைவரைப் பார்த்து நிம்மதி அடைவார்கள்.
மேலும் கோபாலபுரம் வீட்டை விட மருத்துவமனையில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த PEG குழாயை இரைப்பையில் புதுப்பித்துப் பொருத்துவது மேலும் எளிதாகும். அதனாலேயே கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துத் திரும்பினார்கள்’’ என்று விளக்கினர்.
மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டு, கறுப்புக் கண்ணாடியோடு கருணாநிதி வீடு திரும்பியதைப் பார்த்த திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவரது உடல் நலன் பற்றி நம்பிக்கை வலுவாகியுள்ளது. எத்தனையோ நெடும்பயணங்களை சளைக்காமல் கடந்த கருணாநிதிக்கும், மருத்துவமனைக்கு சென்று திரும்பிய இந்த சிறு பயணம் ஓரளவு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: