செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

71ஆம் ஆண்டு சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாகக் கொண்டாட முடிகிறதா? திராவிடர் கழகம்!

பசுமாடுகளுக்கு உள்ள பாதுகாப்பும், கவுரவமும் இந்தநாட்டு உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்களுக்குண்டா?
சிறுபான்மைச் சமூகமான இஸ்லாமிய, கிறித்துவர்களுக்கு உண்டா?
பதவி முடிந்து செல்லும் குடியரசுத் துணைத்தலைவர் மேதகு அமீத்அன்சாரி அவர்கள் யதார்த்தத்தை சுட்டுவது போல - சிறுபான்மையோர் அச்சத்துடன் தான் நம் நாட்டில் வாழும் நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
பிரதமரோ, மற்ற ஆளுங்கட்சிப் பொறுப்பாளர்களோ என்ன பதில் கூறியிருக்க வேண்டும்?
எல்லோரையும் பாதுகாக்கும் எங்கள் ஆட்சி. அச்சமோ, கவலையோ வேண்டாம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும் - பொறுப்பானவர்களாக இருந்திருந்தால்!

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பதில் சொல்கிறார்கள்; 'அவர் பாதுகாப்பான நாட்டுக்குச் செல்லட்டும்; தங்கிக் கொள்ளட்டும்' - இதுவா பொறுப்பான பதில்?
முந்தைய அமீர்கான்களுக்கு அளித்த அதே பதில் குடியரசுத் துணைத் தலைவராக 2 முறை இருந்து ஓய்வு பெற்றுச் செல்பவருக்கும் என்றால், இதை அரசியல் ஆணவம் - அகம்பாவம், மதவெறி என்பதைத் தவிர வேறு எதைக் கூறமுடியும்?
இது சர்வாதிகார ஆட்சியா? மக்களாட்சி அல்லவா! ஜனநாயகத்தின் தத்துவமே பெரும்பான்மையோர் ஆளுவதும், சிறுபான்மையோர் பாதுகாப்புடன் வாழுவதும் என்பதுதானே?


71ஆம் ஆண்டு சுதந்திர நாளைக் கொண்டாடும் மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிகிறதா? இன்னும் தீண்டாமை நிலவுகிறதே -- ஜாதி ஒழிப்புக்கு மத்திய அரசு செய்ததென்ன? என்ற வினாக்களை தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் கொண்டாட்டம்- -  அதுவும் 71ஆம் ஆண்டு; இது கணக்கு பார்க்கும் நாளும் அல்லவா?
நமது குடியரசுத்தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி உட்பட அனைத்து மக்களாட்சிக் காவலர்களும் இந்திய அரசியல் சட்டக் கடமைகளைச் செய்வோம்; அரசியல் சட்ட விதிகளைக் காப்போம்; கடைப்பிடிப்போம் என்றே உறுதி (மொழி) எடுத்து அப்பொறுப்புகளுக்கு வந்து நாட்டின் மூன்று முக்கியத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகின்றனர்.
இந்திய அரசியல் சட்டத்தின் பீடிகை - முகவுரை - - Preamble   இல் கூறப்பட்டுள்ள அதன் கோட்பாடு:
'Sovereign' - - முழு இறையாண்மையுள்ள
''Socialist'- சமதர்ம
'Secular'  - மதச்சார்பற்ற
'Democratic'  - ஜனநாயக
'Republic' - குடிஅரசு என்று பொழியப்பட்டுள்ளது.
இந்த எழுபத்தியொன்றாம் ஆண்டு சுதந்திரம் கொண்டாடும் நாட்டில் முழு இறையாண்மைக்கு வெளி எல்லைகளில் ஏற்பட்டுள்ள தொல்லைகள் இருக்கட்டும்,  பொருளாதாரத்தில், தற்காப்புக் கருவிகள் உற்பத்தியில் கூட 100 விழுக்காடு அன்னிய - வெளி தேசத்தவருக்கு அளித்தும், தனியாருக்குத் தாரை வார்த்தும் உள்ள நடைமுறை முழு இறையாண்மைக்குச் சரியான உத்தரவாதமாகுமா?
சமதர்ம ஆட்சியில் "பிராமணன் - சூத்திரன் - பஞ்சமன்" ஏன்?
சமதர்ம ஆட்சியினால் அதில் 'பிராமணன் - சூத்திரன் - பஞ்சமன்' என்ற பிறப்பின் அடிப்படையில் பேதம் - பொருளாதார பேதமான ஏழ்மை - பணக்காரத்தன்மையை விடக் கொடிய பேதம் உள்ள நாடு உலகில் எங்காவது உள்ளதா?
ஜாதி ஒழிப்புக்கு கடந்த 71 ஆண்டுகளாக சுதந்திரம் கிடைத்த பிறகு மத்திய அரசு செய்தது என்ன?
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய ஜாதி, தீண்டாமை ஒழிப்பினை அடிப்படையாகக் கொண்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போன்ற சட்டதிட்டங்களை செயல்படுத்தியது உண்டா?
எங்கோ உள்ள செவ்வாய் கிரகத்திற்கு மனிதனால் போக முடிகிறது - இங்கே நாம் கட்டிய கோயில்களில் 'கர்ப்ப கிரகத்திற்குள் 'தகுதியுள்ள மனிதர்கள்' - கீழ்ஜாதி என்பதால் நுழைய முடிகிறதா?
முந்தைய காங்கிரஸ் - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் குறைகூறி பதவியில் 3 ஆண்டுகள் ஓட்டிய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பிறவிபேத ஒழிப்பு முயற்சிகள் ஏதேனும் உண்டா?
பசுமாடுகளுக்குள்ள பாதுகாப்பு குடிமக்களுக்கு உண்டா?
பசுமாடுகளுக்கு உள்ள பாதுகாப்பும், கவுரவமும் இந்தநாட்டு உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட தலித் சமுதாய மக்களுக்குண்டா?
சிறுபான்மைச் சமூகமான இஸ்லாமிய, கிறித்துவர்களுக்கு உண்டா?
பதவி முடிந்து செல்லும் குடியரசுத் துணைத்தலைவர் மேதகு அமீத்அன்சாரி அவர்கள் யதார்த்தத்தை சுட்டுவது போல - சிறுபான்மையோர் அச்சத்துடன் தான் நம் நாட்டில் வாழும் நிலை உள்ளது என்று கூறியுள்ளார். பிரதமரோ, மற்ற ஆளுங்கட்சிப் பொறுப்பாளர்களோ என்ன பதில் கூறியிருக்க வேண்டும்?
எல்லோரையும் பாதுகாக்கும் எங்கள் ஆட்சி. அச்சமோ, கவலையோ வேண்டாம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும் - பொறுப்பானவர்களாக இருந்திருந்தால்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பதில் சொல்கிறார்கள்; 'அவர் பாதுகாப்பான நாட்டுக்குச் செல்லட்டும்; தங்கிக் கொள்ளட்டும்' - இதுவா பொறுப்பான பதில்?
முந்தைய அமீர்கான்களுக்கு அளித்த அதே பதில்   குடியரசுத் துணைத் தலைவராக 2 முறை இருந்து ஓய்வு பெற்றுச் செல்பவருக்கும் என்றால், இதை அரசியல் ஆணவம் - அகம்பாவம், மதவெறி என்பதைத் தவிர வேறு எதைக் கூறமுடியும்?
இது சர்வாதிகார ஆட்சியா? மக்களாட்சி அல்லவா! ஜனநாயகத்தின் தத்துவமே பெரும்பான்மையோர் ஆளுவதும், சிறுபான்மையோர் பாதுகாப்புடன் வாழுவதும் என்பதுதானே!
விவசாயிகள் தற்கொலை பற்றி உச்சநீதிமன்றமே அரசுகளுக்குச் சுட்டி காட்டுகிறது!
கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியே!
ஏழை, எளிய விவசாயிகள் - பருவ நிலை பொய்த்தல், மழையின்மை, வறட்சியால் வாடிய நிலையில் கடன் தள்ளுபடி கேட்டால் மறுப்பும், அடக்குமுறையும்தான்; ஆனால் பல்லாயிரம் கடன் வாங்கி பட்டை நாமம் போடும் "கோடிக்கால் பூதங்களான" கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்குச் சலுகைமேல்  சலுகை, கடன் சலுகை உட்பட! இதுதான்  சமதர்ம அரசமைப்பா?
இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்று, அதன் மூலம் சமூக நீதி, இடஒதுக்கீட்டையும் ஒழித்து, தனியார் மயப் பொருளாதாரத்தை ஊக்குவித்து "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" அபகரிப்பு நடக்கிறதே!
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்தபாடில்லை; ஏற்கெனவே வேலைவாய்ப்புகள் அய்.டி. (I.T) துறையில் வேலை பார்த்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்தோரும் தலைகவிழ்ந்த சோகத்துடன் திரும்பிடும் அவலம் உள்ளதே!
பொருளாதார வளர்ச்சி 7 புள்ளியாக இருக்காது - 6 புள்ளிக்கே சிரமப்படும் நிலை என்று அரசின் பொருளாதார சர்வே அறிக்கையே கூறுகிறதே!.
எதிர்பார்த்த கறுப்புப்பணம் வெளிக்கொணரப்பட வில்லை!
மாநில உரிமைகள் பறிப்பு
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக மகாபாரதக் கதையில் துரோபதைக்கு துகில் உரித்த துச்சாதனன், அதை வேடிக்கை பார்த்து கைபிசைந்த பஞ்ச பாண்டவர்க் கூட்டம் போல் நமது மாநில முதல்வர்கள் பலர் இருக்கும் நிலைதானே!
மதச்சார்பின்மை நீர் எழுத்தாகி மாறியது! கருத்துச் சுதந்திரம், கேள்விக்குறியாகி உள்ளது.
ஒற்றை ஆட்சி முறைத் திணிப்பு வேலை பல்வேறு துறைகளிலும் 'விஸ்வரூபம்' எடுக்கிறது!
மகிழ்ச்சிக்குரிய நாளா?
இப்போது சொல்லுங்கள்; ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிக்குரிய நாளா? மக்கள் துக்கப்படும் நாளா?
அன்று பெரியார் புரியும் மொழியில் பதில் சொன்னார்; இன்று, பெரும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அதையே மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வேறு மொழியில் ஓலமிட்டு ஒப்பாரி வைக்காத குறையாகக் கூறுகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், டில்லி வீதிகளில் பிச்சைக்காரர்களாகப் போராட்டம் நடத்திடும்  வேதனைதானே மிச்சம்?
இளைஞர்களே  சிந்திப்பீர்! 'தேசபக்தி' முத்திரை குத்திக் கொண்டால் இக்குறைகள் நிவர்த்தியாகி விடுமா? யோசியுங்கள்.


சென்னை                                                                         தலைவர்
15-8-2017                                                                      திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/

கருத்துகள் இல்லை: